ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2021

அருள் ஒளி கொண்டு அனைத்தையும் அரவணைத்துச் சென்றால் தான் பேரானந்தப் பெரு நிலை பெற முடியும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம். அதற்கு மத்தியிலே இடைப்பட்ட நிலைகள் வரப்படும் பொழுது ஒருவர் வந்து அவன் மோசமான ஆள்... உதவி செய்யாதீர்கள்...!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அப்போது நமக்கு வெறுப்பின் தன்மை வருகிறது.

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணும் போது மற்றவர்கள் செய்ய வேண்டாம் என்று சொன்னால் நாம் எண்ணிய எண்ணங்களுக்கு அது எதிரியாகிறது. நமக்குள்ளே போர் வருகிறது.

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று தான் நமக்குள் அந்த எதிரியின் தன்மைகள் உருவாகி விடுகிறது. இப்படி உருவாகும் அந்தச் சக்திகள் எப்படிச் செயல்படுகிறது...? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது.

கைகேயி இராமன் மீது வெறுப்பு காட்டுகிறது... ஏனென்றால்
1.தன் பையன் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்று தனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி
2.இது தன்னிலே வளர்ந்த உணர்வு.... அந்த அணுக்கள் அதை எண்ணுகின்றது
3.அந்த உணர்வின் தன்மை இங்கே உருவாக்குகின்றது

தசரதனுடைய ஆசையோ இராமன் மீது இருக்கின்றது. அதே சமயத்தில் தனக்குள் இருக்கும் சக்தி (தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவி) அதனுடைய பாசத்தால் ஓங்கி வளர்க்கப்படும் பொழுது அதிலிருந்து அவனால் மீள முடியவில்லை. அதாவது தசரதன் அவன் மனைவியின் நிலையை மீற முடியவில்லை.

அன்பு கொண்ட மனைவி கோசலை தியாகம் செய்கிறது...! மூத்த மகன் இராமன்... சீதாராமா ஒருத்திக்கு ஒருவன் என்ற நிலைகள் இருக்கின்றான்.

சுவைக்கொப்பத் தான் எண்ணங்கள் (சீதா என்றால் சுவை – இராமன் என்றால் எண்ணம்) என்று அவனுடைய எண்ண அலைகள் இருப்பினும் தூண்டிய உணர்ச்சிகள் தன் சகோதரனாக இலட்சுமணனாக இருக்கின்றான்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு எந்த உணர்வின் தன்மை எண்ணி எடுக்கின்றோமோ அதன் சக்தியாக இயக்குகிறது. ஆனால் அதிலே இந்த விஷத்தின் தன்மை கலந்தால் எதிலே இது கலக்கின்றதோ அந்த வேகத்தின் தன்மை கொண்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

இது எல்லாம்
1.ஒரு அணுவுக்குள் இருக்கும் நிலையும்... அது கவர்ந்து கொண்ட உணர்வின் சக்தியும்
2.அது எவ்வாறு இயக்குகிறது...? என்று தான் இராமாயணம் காட்டுகிறது.

இராமன் காட்டிற்குள் செல்கின்றான். அங்கே புலியும் இருக்கிறது கரடியும் இருக்கிறது. இருந்தாலும் அதைச் சீராக்கிக் கொண்டு வரும் நிலையாக இராமன் என்ன செய்கிறான்...?

1.இந்த உடலுக்குள் வரும் மற்ற ஆசைகளை விடுத்து அமைதியாகச் செல்கிறான்...
2.எல்லாவற்றையும் இவன் சகோதரனாக ஆக்குகின்றான் என்று காட்டுகிறார்கள்.

அதாவது இந்த மனித வாழ்க்கையில் அந்த அருள் உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் நம் உடலுக்குள் சகோதரனாக ஆக்க வேண்டும்...!
1.எதையுமே பகைமை ஆக்காது...
2.எதிரியாக உருவாக்காது...
3.இணைந்து வாழச் செய்யும் அரும் பெரும் சக்திகளை நாம் எடுக்க வேண்டும்
4.உடலுக்குள் அதை உருவாக்க வேண்டும் என்று இராமாயணம் காட்டுகிறது.