ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2021

சாதாரண வாழ்க்கையில் இருப்பது போல் இல்லாமல் ஒவ்வொரு நொடியும் நம் சுவாசம் உயிர் வழியாக இருக்க வேண்டும்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.

இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து முக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடை மறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.

அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.

அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.

இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.

நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.

அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.

இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடிக்கடி நாம் அந்த அருள் சக்தியை எடுத்துச் சமைத்து நமக்குள் நல்லதாக்கிக் கொண்டே வர வேண்டும். நாம் பார்க்கும்… பழகும் அனைவருக்கும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளியையே இணைத்துப் பழக வேண்டும்.