ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2021

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்... நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்...? என்று கொடுத்திருக்கின்றார்.

நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்...
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்...
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.

அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்... அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி...? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.

காரணம்... மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது...
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்...
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்

அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது... அதை நுகர்ந்து அறிகின்றோம்.

இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கிறார் என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்... என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.

1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது... அவனும் கெடுகின்றான்... நாமும் கெடுகின்றோம்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்... நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.

அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது... ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து... அந்தத் தீமைகளை... அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.

நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்... என்று அவன் தொலைந்து போக வேண்டும்...” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.

சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே...!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.

இப்படி நாம் எடுக்கும் இந்த எண்ணத்தில் “இரண்டு பிரிவாக” இருக்கின்றது.
1.கெட்டது தொலைய வேண்டும் என்று எண்ணினால் அது நல்லது
2.கெடுதல் செய்பவர்கள் தொலைந்து போக வேண்டும் என்று எண்ணினால் அது கெட்டதாகிறது.

ஆகவே... எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.

அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்... அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்... என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.