ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2021

பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது - ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்து கொள்ள நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிய எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டுச் சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அது பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை… என்றும்
2.கேது… இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிய முடியாது. குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைக்கலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்த நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.

ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லா விட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் ஒளி நிலை அடையத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.