அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா... என்று உயிரிடம் வேண்டி இதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
இதை நினைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது...!
1.எத்தகைய எதிர்மறையான உணர்வு வந்தாலும்
2.நம் ஆன்மாவில் வரும் அந்தத் தீமைகளைக் “கட்” பண்ணப் (CUT – நிறுத்தி) பழக வேண்டும்.
இதைத்தான் நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
நரசிம்மன் என்றால் உயிர்...
வாசல்படி என்பது நம் மூக்கு..
மடி என்பது ஆன்மா...
இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு...!
நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.
இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.
முன் வழி கூடி நீக்க முடியுமா...? என்றால் முடியாது. அதாவது...
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.
எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால் எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்...
2.உட்கார முடியாது... ஆட்டம் கட்டும்... எப்படியோ வரும்...
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.
தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்...! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்...! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.
கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.
அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.
அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்...” என்ற நிலைக்கு வருகின்றோம்.
ஆகவே கார்த்திகேயா...! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).