ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2021

சாமியையே (ஞானகுரு) எண்ணிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் சோர்வு வந்து விடுகின்றது. அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது.

சிந்திக்கும் தன்மை குறைந்தால் அடுத்து நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது. சோர்வு… சிந்தனை குறைவு… வேதனை என்ற இது மூன்றும் சேர்த்து ஒரு கருவின் தன்மையாகிறது. உயிர் அந்த அணுவாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

நான் நினைத்தேன் வரவில்லையே… என்ற எண்ணத்தில்
1.“சாமி (ஞானகுரு) சொன்னாரே…
2.கிடைக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற உணர்வைத் தான் மீண்டும் வளர்க்க முடியும்.
3.ஆக.. கீழான நிலைக்குத் தான் போக முடியும்.
3.வலு கொண்ட நிலையிலே சாமியை எண்ணுவீர்கள்
4.ஆனால் சாமி சொன்னதை (உபதேசம்) விட்டு விடுவீர்கள்.

வயலில் விவசாயம் செய்யும்போது களைகளைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் களையைப் பிடுங்குவதற்குப் பதில் முளைத்த நல்ல செடிகளைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…!

விவசாயத் துறையில் நல்ல வித்தைத் தான் கொடுக்கின்றார்கள்… பயிரிடுகின்றோம். ஆனாலும் வளர்ந்த பின் களைகளை எடுப்பதற்குப் பதில் களையுடன் சேர்த்து பயிரையும் பிடுங்கி விட்டால் பலனற்றுப் போகும்.

அதைப் போன்று தான்
1.நான் (ஞானகுரு) கொடுத்த அருள் ஞான வித்தை விளையை வைத்துத் தீமைகளை (களைகளை) நீக்குவதற்குப் பதில்
2.நான் கொடுத்த சக்தியையே வீழ்த்தி விடுகின்றார்கள்.

கொடுத்த சக்தியை இழக்கப்படும் பொழுது ஒரு காரியத்தை எண்ணிச் செய்தால் சோர்வடைந்து வேதனை என்ற நிலை உருவாகின்றது.

ஆனால் இதற்கு முன்… பல பிறவிகளிலும் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எப்படி வளர்ச்சியடைந்தோமோ தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வு கொண்டு மீள வேண்டும்… மீள வேண்டும்… என்ற உணர்வுகளைச் சேர்த்துத் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து அதன் வழி இத்தனையும் கடந்து வந்த மனிதன் நாம்
1.மீண்டும் தன் இச்சையின் உணர்வு உண்டு நிறைவேறவில்லை என்றால்
2.சோர்வும் வேதனையும் அடைந்து அத்தகைய அணுவின் தன்மையாக வரப்படும் பொழுது
3.நம் நல்ல குணங்களை அடக்கிவிடுகிறது… அதர்வண…!

நல்ல குணங்களை அடக்கியபின் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் விளைந்து (யஜூர்) விட்டால் மீண்டும் சாம…!

அதே தீமையான எண்ணம் இயக்கத் தொடங்குகிறது. அதை மாற்றுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.

தீமைளைளச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரிடமே வேண்டுங்கள். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்து வாழ்க்கையில் வந்த வேதனைகளை அடக்கப்படும் பொழுது அதர்வண. தீமைகள் செயலற்றதாகின்றது.
1.துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் அப்பொழுது யஜுர்…
2.ஒளியான அணுக்களாக நமக்குள் ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும்.