ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2021

குரு காட்டிய அருள் வழியில் வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான நெறிகள்

 

நமது குருவின் (ஈஸ்வரபட்டர்) அனுபவங்களையும் அவர் எனக்குக் கொடுத்த அனுபவங்களையும் தொடர்ந்து இந்த உபதேச வாயிலாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

குருனாதர் எனக்குச் சொன்னது...
1.ஒவ்வொரு உயிரைக் கடவுளாகவும்... அந்த உடலைக் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட்டாய் என்றால்
2.அப்பொழுது அவரிடமிருந்து வரும் பகைமை உனக்குள் மறைகிறது
3.அவர் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற நினைவு வருகிறது.
4.அப்படி எண்ணும் போது உன் உடலான ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்திக் கொள்கிறாய் என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் அது எனக்குள் நல்லதாகிறது.

ஆகவே... நமக்குள் உள்ள தீமைகள் போக வேண்டும் என்றால் யார் நமக்குத் தீமை செய்தார்களோ... “அவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்...” என்று சொன்னால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். என்று சொன்னோம் என்றால் அவர்களைப் பற்றி வெறுப்பான உணர்வுகள் நம் உடலுக்குள் வளர்வதில்லை.

1.ஆனால் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சும்மா சொன்னால் அந்தக் கெட்டது தான் நல்லதாகும்.
2.அவர் செய்யக்கூடிய கெட்டதற்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகும்.

ஆகையினால்... நல்லது செய்யக் கூடிய எண்ணங்கள் அவருக்குள் வர வேண்டும்... எல்லோருக்கும் பண்பும் பரிவும் காட்டக்கூடிய அருள் ஞானம் அவருக்குள் வர வேண்டும் என்று சொன்னால் அந்தக் கெட்டதை வளர விடுவதில்லை. ஆக அதை வெறுமனே சொல்ல முடியாது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நம் உடலில் அது படர வேண்டும் என்று இதைக் கலந்து
3.நம் எண்ணங்களுக்கு நல்ல வலு கொடுக்க வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு அந்த அருள் உணர்வுகளை மற்றவருக்குப் பாய்ச்ச வேண்டும். இப்படிச் செய்தால் குடும்பத்தில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் மாற்றி விடலாம்.

திடீரென்று எதிர்பாராது விபத்துக்களோ மற்றதுகளோ உற்றுப் பார்த்தால்... “அடப் பாவமே... இப்படி ஆகிவிட்டதே...!” என்று எண்ணக்கூடாது.

உடனே ஈஸ்வரா... என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று நமக்குள் இந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

விபத்தில் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உந்தித் தள்ளி அங்கே விண்ணுக்குச் செலுத்த வேண்டும்.

உடலில் அடிபட்டிருந்தால் அவர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று பூரண குணமாகி அவர்கள் சீக்கிரம் எழுந்து நடக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நாம் இப்படித் தான் நினைக்க வேண்டும்.

பொதுவாக நம் செயல்கள் அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் போகிறது.
1.ஆனால் மேலே சொன்னபடி எண்ணாமல் அவர்களின் வேதனையை எடுத்தால்
2.கிடு கிடு... என்று உடலில் நமக்கு நடுக்கமாகும்.
3.நம் நல்ல குணங்கள் செயல் இழந்து... அவர்கள் அடிபட்ட உணர்வுகள் இரண்யனாகி அதைக் கொல்லும்.

அதனால் தான் அத்தகைய நஞ்சான உணர்வுகளுக்கு இரண்யன் என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்...? என்று தான் அதை எல்லாம் காவியங்களாகப் படைத்தனர். ஏனென்றால் இது இயற்கை.

அதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்கள் ஞானிகள்.

அந்த இரண்யனைப் பிளக்க வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற பயிற்சி கொடுக்கின்றோம். அதை எடுத்து உங்கள் நல்ல குணங்களைக் காத்து மற்றவருக்கும் அதே நல் உணர்வை ஊட்ட முடியும்.