ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2020

ஜீவனுடன் உள்ள ஆன்மாவிற்கும் ஜீவன் இல்லாத ஆன்மாவிற்கும் உண்டான வித்தியாசம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு... வண்ணம் ஏழு... நாதம் ஏழு... மணம் ஏழு... என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்... ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்...? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்...
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்... நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு... தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று... ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்...
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை...!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது...”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி...
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து...
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி...
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.