ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2020

உடலை விட்டுப் பிரியும் போது குருநாதர் சொன்ன விண் செல்லும் மார்க்கம்


என்னை (ஈஸ்வரபட்டர்) அணுகியோர் பலர் உண்டு. பல அற்புதங்களைச் செய்து காட்டினேன். அந்த அற்புதத்தில் மயங்கி இருந்தோர் பலர் உண்டு.
1.அவர்கள் எல்லாம் என்னிடத்தில் எப்படி எல்லாம் வந்தார்கள்…!
2.எதை நாடி வந்தார்கள்… எதைச் சொன்னார்கள்… கேட்டார்கள்…?

தனக்குச் சொத்து வேண்டும்…. சுகம் வேண்டும்… உடல் நலம் வேண்டும் என்றும் தன் காரியத்திற்காக வேண்டி அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்… என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
2.உலகம் நலமாக இருக்க வேண்டும்…. உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும்.
3.பிறருடைய குடும்பங்கள் நலமாக இருக்கக்கூடிய சக்தி நான் பெற வேண்டும்
4.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போருடைய குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

ஆனால்… இதைப்பற்றி என்னிடம் யாரும் கேட்பார் இல்லை.

ஆகவே தனக்குத் தான் கேட்டார்களே தவிர… “எல்லோரும் நலம் பெற வேண்டும்…!” என்ற கேள்வி அங்கே எழவில்லை.

எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டுமென்று நான் (ஈஸ்வரபட்டர்) எண்ணினேன்… அதைப் பெற்றேன். அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலைவிட்டு நான் வெளி செல்லப் போகின்றேன்…!

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்..? எதை நீ பெறப் போகின்றாய்…? என்ற இந்த வினாக்களை எழுப்பினார்.

வைகுண்ட ஏகாதசி வருவதற்கு முன்னாடி இப்படி ஒரு மாதமாக என்னை (ஞானகுரு) பல கேள்விகளைக் கேட்டு பல உணர்வின் தன்மையை தெளிவாக்கினார்.
1.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…?
2.நீ பெறுவது எப்படி என்ற இந்த உணர்வைத் தெளிவாக்கிக் காட்டினார்.

மேலும்… இந்த உடலை விட்டுச் சென்ற பின்…
1.என்னுடன் நீ இணைந்து நீ வர வேண்டுமென்றால்
2.நீ எதை எண்ண வேண்டும் என்று கேட்கின்றார்…?

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி என் குரு பெற வேண்டும். அவர் என்றுமே ஒளி சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
1.அந்த அருள் வழி “என் குரு பெற வேண்டும்…” என்று நீ எண்ணினால்
2.அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

உங்களுக்குச் சொல்வது அர்த்தமாகிறதா…? இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

ஆகவே அவ்வாறு எண்ணும் போதுதான்… என்று நீ இப்படி எண்ணுகின்றாயோ அப்பொழுது நீ அதுவாகின்றாய்…! என்று இந்த நிலையை அன்று தன் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் ஈஸ்வரபட்டர் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையும் சப்தரிஷிகளின் அருள் ஒளியும் பெறும் தகுதியும் பெற்று இதன் வழி கொண்டு அந்தக் குருவை நீ எப்படிச் செலுத்த வேண்டும்...? எதை நீ உருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மையை உணர்த்திவிட்டுத்தான் அந்த வைகுண்ட ஏகாதசி அன்று அந்த உடலைவிட்டு அவர் ஆன்மா பிரிகின்றது.

உடலைவிட்டுச் சென்ற பின்…
1.அந்தக் குருவின் நினைவும் அதன் உணர்வு இங்கே விளையவும்
2.மனித உடலுக்குள் இருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தையும்
3.மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு வரப்படும்போது
4.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்

ஏனென்றால் அந்த வரிசை… ஒன்றை வைத்துத் தான் ஒன்று விண் செல்ல முடியும்…!

இந்த மெய் வழியை நீ பெறு… மற்றவருக்கும் இந்த நிலையைக் காட்டி அவர்களையும் பெறச் செய். அவர்கள் பெற வேண்டுமென்று நீ ஏங்கு… அதன் வழி பெறும் தகுதியை அவர்களைப் பெறச் செய்…!

அடுத்தவருடைய நிலைகளும் இதைப் போன்று எண்ணும் போது
1.நீயும் அங்கே எளிதில் செல்கின்றாய்.
2.பிறரும் அந்த நிலைகளைப் பெறுகின்றனர்.
3.ஆகவே இதனை நீ வழிப்படுத்து…! என்று சொன்னார் குருநாதர்.