ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2020

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்


“ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…' என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் அவரவர்கள் உயிரை நினைவிற்குக் கொண்டுவர வேண்டும்.

நமது குருநாதர் பெயரும் ஈஸ்வரன் தான்…! நம் உயிருக்குப் பெயரும் ஈஸ்வரன் தான்…!

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் அணுக்கருக்களாக உருவாக்குகின்றது. கருவான பின் உருப் பெறுகின்றது. உருப் பெறச் செய்கின்றது.

1.நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ
2.அவை அனைத்தையும் கருவாக்கி நம் இரத்த நாளங்களிலே மிதக்க விடுகின்றது. (1)
3.அதே சமயத்தில் நாம் எண்ணும் உணர்வுகளை ஊழ் வினை என்ற வித்தாக எலும்பினுள் அது பதிவாக்கி விடுகின்றது. (2)

இது எல்லாம் நம் உயிரின் வேலைகள்.

இப்போது மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றி இங்கே பேசும்போது நீங்கள் கூர்மையாகப் பார்த்து இந்தப் பேச்சின் உணர்வை நுகர்ந்தறியும் போது… அந்த உணர்வின் செயலாக உணர முடிகின்றது. உணரும் தன்மையை கருவாக உருவாக்கி… இரத்தத்தில் அது மிதக்க விடுகின்றது.

1.நாம் எக்குணத்தின் தன்மை பெற்றோமோ
2.அக்கருவின் தன்மை அக்குணத்தை உருவாக்கும் அணுவாகத்தான் அது வெளிப்படுகின்றது.

அதே சமயத்தில் கூர்மையாகப் பார்த்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாக நம் எலும்பினுள் பதிவாகி விடுகின்றது.

ஏனென்றால் முதலில் வித்தை ஊன்றினால் தான் வித்து தனது சத்தைக் கவர்ந்து… அது இலையையும் தனது மலரையும் தன் விதையையும் அது உருவாக்கும்.

இதைப் போன்று நாம் எதைக் கூர்மையாக உற்று நோக்கி அந்த உணர்வினைப் பெற வேண்டுமென்று ஏங்குகின்றோமோ அவை நம் எலும்பினுள் உள்ள ஊன்களில் ஊழ்வினை என்ற வித்தாக ஊன்றப்படுகின்றது. (மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்)

நாம் எக்குணத்தின் தன்மையை நுகருகின்றோமோ… அந்த உணர்வுகள் நுகரப்பட்டு
1.நம்மை அறியச் செய்கின்றன... உணரச் செய்கின்றன… உணர்த்துகின்றன….
2.இந்த மூன்று வேலையும் செய்கின்றன.

உணர்த்தினாலும் இரத்தத்தில் அது கருவாக மாற்றி விடுகின்றது... ஒரு முட்டையாக…! அவ்வாறு கருவாக உருவாகி விட்டால் நம் இரத்த நாளங்களிலே மிதக்கச் செய்கிறது.

நாம் எண்ணக்கூடியதை ஓ…! என்று பிரணவமாக்கி (ஜீவன் பெறச் செய்து) நாம் எண்ணிய உணர்வை ஓ… ம்… என்று ஜீவ அணுவாக நம் உடலாக இணைத்து விடுகின்றது உயிர். இது தான் ஓ…ம் ஈஸ்வரா.

நாம் எண்ணுவது அனைத்தையும் நம் உடலுக்குள் உருவாகி விட்டால் அவை அனைத்திற்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று எண்ணும் போதெல்லாம் அல்லது சொல்லும் போதெல்லாம் அவரவர் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும்.

அவரவர்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் இந்த உயிரே குருவாக இருக்கின்றது.

உயர்ந்த ஞானத்தின் வழிகளில் இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.நமது குருநாதர் “ஈஸ்வரர்…” அவர் அவருக்குள் உருவாக்கிய உணர்வை
2.எமக்குள் (ஞானகுரு) ஓதப்பட்டு அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு
3.அதே உணர்வை மீண்டும் உங்களில் ஓதப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் உங்களுக்குள் அந்த உங்கள் உயிரான ஈசனிலே பட்டு ஜீவன் பெற்று
5.நம் குரு ஈஸ்வரரால் உருவாக்கப்பட்ட இந்த உணர்வும் இரண்டும் கலந்து ஒன்றாகி
6.அவர் உருவாக்கிய அருள் ஞானத்தை இங்கே ஈசனாக உருவாக்கும் செயலாக உருப்பெறுகின்றது.

ஆகையினால் தான் ஓ...ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் உங்கள் உயிரையும்… உயர்ந்த ஞானத்தை ஊட்டும் அந்த உணர்வின் கருவாக உருவாகும் அச்சக்தியை ஈசனாகவும்… மதித்தல் வேண்டும்.

அப்படி மதித்து நமது குரு காட்டிய அவருள் விளைய வைத்த உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வை நமக்குள் உருவாக்கும். குரு பெற்ற சக்தியை குரு அடைந்த ஒளி நிலையை நாமும் பெறலாம்.