ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 4, 2020

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்


இன்று மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ வகையில் நம் உடலை அழகுபடுத்துகின்றோம். அடுத்து ஒரு சிறிய மாற்றமான சொல் வந்தால் போதும்...!

என்னை இப்படிப் பேசி விட்டார்களே..!. என்ற தாங்க முடியாத உணர்வு கொண்டு... விஷத்தையே உட்கொள்ளச் செய்யும். ஒரு நொடிக்குள் இந்த உடலையே அழிக்கும் உணர்வு கூட வந்து விடுகின்றது.

இப்படி மற்றவர்களுடன் கலந்து உறவாடப்படும் பொழுது அவருடைய கஷ்டங்களும் மற்றவைகளும் கேட்டுணர்ந்தோர் உங்கள் உணர்வுகளில் படுகின்றது.

உயர்ந்த குணத்துடன் நஞ்சு கொண்ட உணர்வுகள் கலந்த பின் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இதே எண்ணம் தான் அங்கே உயர்த்தவும் சொல்கிறது.

1.ஒவ்வொரு நொடியிலேயும் நம்மைத் தாக்கிடும் அதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட...
2.நம் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிக் கூர்மையாகச் செலுத்தி
3.நஞ்சை வென்ற அந்த மகரிஷியின் உணர்வை அதைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
4.உங்களுக்கு மன பலம் கிடைக்கும்.. அதிலிருந்து விடுபடும் ஞான்மும் கிடைக்கும்.

இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் அவரவர் கஷ்டங்களை என்னிடம் சொன்னால் அதை நான் கேட்டுணரும் போது அவை யாவும் என்னிடம் கலக்கின்றது.

இருப்பினும் குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்குள் வரும் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிக் கொள்கின்றேன்.

அதே சமயம் இந்த உபதேசங்களைக் கேட்டு அதன் வழியில் தியானிக்கும் நீங்களும்... பிறருடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்டுணரும் போது
1.அந்த உணர்வுகளை நீக்க
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு உறுதுணையாக இருந்து
3.அந்த வழியில் தீமைகள் சேராவண்ணம் பாதுகாப்பாக இருந்து செயல்படுத்துகின்றேன்.

இருப்பினும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. போன்ற வகைகளிலும் உலகில் நடக்கும் தீமைகளையும் அசம்பாவிதங்களையும் கேட்டுணர்ந்த பின் உடனே உங்களுக்குக் கொடுத்த தியான சக்தியின் துணை கொண்டு “ஆத்ம சுத்தி செய்து கொள்வதே நலம்...”

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அடிக்கடி உபதேசிப்பது...!

1.மிகவும் சக்திவாய்ந்த மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அந்த அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறவும்
2.பௌர்ணமி நாள்களில் உங்களுடைய எண்ணம் விண்ணை நோக்கிச் செல்லவும்
3.விண்ணிலே உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் சேர்பித்தலும்
4.மூதாதையர்களின் உடலில் உள்ள மற்ற உடல் பெறும் உணர்வை அங்கே கரைப்பதும்
5.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அந்த உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்டு
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதும் தான் எமது வேலை (ஞானகுரு).

பௌர்ணமி அன்று மிக மிக சக்திவாய்ந்த உணர்வுகளை உங்களில் பதியச் செய்கின்றோம். தியானித்து அதைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.