ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2020

சஞ்சலமில்லாத எண்ணத்துடன் மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஒவ்வொரு ஞானியும் தன் வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வால் பெற்ற சஞ்சல அலையின் உண்மைகளைப் புரிந்து உணர்ந்து பெற்ற உயர் ஞானத்தால் தான் அந்த ரிஷி சக்தியைப் பெற்றார்கள்.

அதே போல் மனிதன் தன் உணர்வின் சஞ்சலத்தைப் போக்கி…
1.தன்னைத்தான் தான் உணர்ந்து
2.தன்னிடமுள்ள திரையை விலக்கி
3.உயர் ஞானத்தின் உண்மையின் ஒளி சக்தி  பெற
4.உணர்வின் குணத்தைச் சமப்படுத்தி அறியும் பக்குவத்தைப் பெற
5.ரிஷிகளாய் அன்றும் இன்றும் தன்னுடைய உயர் தத்துவத்தை
6.மனித எண்ணத்தின் உணர்வின் வலுவிற்கு வழி காட்டுகின்றனர்.

தன்னைத்தான் உணரக்கூடிய வழி முறையில் தன் ஞானத்தைப் பெறும் பொழுது…
1.கோபம் வேதனை பயம் சலிப்பு போன்ற குணங்கள் உந்தப் பெறும் பொழுது
2.அந்த உந்தல்களைச் சமப்படுத்திட…
3.தைரியத்தின் உயர் ஞானம் கொண்டு உயரக் கூடிய வளர்ச்சிக்கு
4.இச்சரீர உயிர் அணு… உயிராத்மாவின் வலுவைக் கொண்டு…
5.உயர்ந்த ஒளி சக்தியை மனித ஞானம் வளர்த்துக் கொள்ளும் நிலைக்கு
6.மெய் வழி காட்டும் தொடரில் ரிஷிகள் படைத்த காவியங்களில் பல உன்னதத் தத்துவங்கள் உண்டு.

ஒன்றை ஒத்து ஒன்று… ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறத்தக்கதே இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தின் நியதி.

பூமியின் ஆரம்ப உயிர் அணுத் தோன்றி மனித உணர்வின் எண்ண குணங்கள் வளர்ந்தமைக்கும்… இன்றைய கலியில் மனிதப் பெருக்கத்தின் எண்ணத்தின் ஈர்ப்பலையும்… மின் காந்த வானொலி அலைத் தொடரும்… செயற்கையின் விஞ்ஞான அமிலத்தின் செயலும்… இக்காற்றலையில் அதிகமாக இன்று படர்ந்துள்ளது.

அன்று ரிஷிகள் காட்டிய தத்துவ முறைக்கும் இன்றைய கலியின் நடைமுறைக்கும் பல கோடி மாற்றங்கள் ஆகி விட்டது. நம் உணர்வின் ஞானத்தைச் சஞ்சலமில்லா சாந்தத் தொடரில் ரிஷிகளின் எண்ணமுடன் கலந்து… நாம் எடுக்கும் நேரடி சுவாச மின் காந்த உயர் சக்தியின் வலுவை.. இச்சரீரம் பெறப் பெற… இச்சரீரமே “ஒளித் தன்மை கொள்ளும்…!”

பக்தி மார்க்க வழித்தொடரில் மனதை அந்தந்தத் தருணங்களில் இனிமை கலந்ததாகப் பக்குவப்படுத்தலாமே தவிர தன் ஞானத்தை உயர் ஞானமாக்கும் நிலை இல்லை.

உணர்வின் எண்ணத்தைச் சஞ்சலமில்லா ஒளி சக்தியின் ரிஷி சக்தியின் தொடர்பால் அவர்கள் பெற்ற சக்திகளை நம் உடலுக்குள் பெருக்கி அவர்களின் ஈர்ப்பு வட்டத்தில் நம் எண்ணத்தின் உணர்வு வீரியம் கொள்ள வேண்டும். அவர்கள் வேறல்ல… நாம் வேறல்ல…! என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இக்கர்ம காரிய வாழ்க்கையில் பலவாக பல கோடி ஆண்டுகளாய் பல கோடி மனிதர்கள் எடுத்து வளர்த்த உணர்வலையின் சுழற்சியின் மத்தியில் வாழும் நம் உணர்வின் எண்ணத்தை இவ்வுலக ஈர்ப்பில் செலுத்தும் பொழுது தன்னைத்தான் உணர முடியாத நிலைக்கு இன்றைய உலக நிலை வந்துவிட்டது.

மேலும் இக்காற்றலையில் உள்ள உணர்வுகளின் வலுவையும் நம் ஆத்மாவில் ஏற்றிக் கொண்டு அதன் குறைவு நிறைவில்…
1.நம் சரீரத்தில் வளரும் உயிரணுக்களையும் உயிர் ஆத்மாவையும்
2.குறை உணர்வின் மத்தியில்
3.குறைவான எண்ணத்தில்
4.குறை கொண்ட வாழ்க்கையாக அமைந்து விட்டது.

இதிலிருந்து மீள ஒளி சக்தியின் வீரியம் கொண்ட மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு… ஞானத்தால் உணரக்கூடிய “உயர் ஞான திருஷ்டி” என்ற சில உண்மைகளை உணர்த்தி வரும் அவர்கள் தொடர்பில் நாமும் வளர்ந்திடல் வேண்டும்.

அவர்கள் மூலம் பெற்ற நல் உணர்வின் சுவாசம் கொண்டு… நாம் வளரும் பூமியில்… நம் உணர்வின் சேவை… “பிறரையும் வளர்க்க…” சஞ்சலமில்லா உணர்வைச் சாந்தமுடன் நாம் பெற வேண்டும்.