ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2020

“நம்மை நாம் அறிந்தால் தான்…” நம்மைக் காக்கும் திறனைப் பெற முடியும்


உயிரணுவை வளர்ப்பதும்… “உயிரின் நிலைகள் கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளுக்கும்” மனிதனான பின் தான் இது முடிகின்றது.

இதெல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கும்…! ஆனால் இதை உங்களுக்குள் பதிவு (ஞானகுரு) செய்கின்றேன்… உங்களைக் காக்க இந்த எண்ணம் உதவும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் நமக்குள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். “தன்னை அறிதல்…!” என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஈஸ்வரபட்டர் இதைப் போன்று தான் எனக்குக் கொடுத்தார்…
1.விண்ணின் ஆற்றல் உன்னில் எவ்வாறு அது இயங்குகின்றது…? என்ற நிலையை உன்னை நீ அறி
2.உனக்குள் இயக்கத்தை நீ பார்
3.காலத்தால் இயக்கும் உணர்வுகள் மாறுபடுவதும்
4.அதனின் இயக்கத்தால் ஏற்பட்ட உன்னுடைய மாற்றங்களையும்
5.நீ உருவான நிலைகள் கொண்டு உன்னை அறிந்தால் உன்னைக் காக்கலாம்.
6,உன்னை அறியவில்லை என்றால் உன்னைக் காக்கும் திறனே இழக்கப்படுகின்றது
7.உன்னைக் காக்கும் திறன் வந்தால் உன்னைச் சார்ந்தோரையும் காக்க முடியும்.
8.அவரைக் காக்கும் எண்ணம் வளர்த்தால்… அவர் வளர… உனக்கும் காக்கும் உணர்வுகள் வளரும் என்ற
9.இந்தப் பேருண்மையைத்தான் தன்னில் தன்னை அறிந்துடும் எண்ணங்களை எனக்குள் பதிவு செய்தார்.

ஆகவே அதைத்தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன். இதன் மூலம் சந்தர்ப்பத்தில் இது நினைவுக்கு வந்து உங்களைக் காத்திடும் உணர்வுகள்… எண்ணங்கள்… தோன்றும். அந்த எண்ணத்தைக் கொண்டு உங்களைக் காத்திடவும் இது உதவும்…!

ஏனென்றால் யாம் உபதேசிக்கும் போது “புரியவில்லையே…!” என்று உங்களுக்குள் மடக்கி விட்டால் இது புரியாது போகும்.
1.புரியும் நிலைகள் எனக்குள் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் நுகர்ந்தால்
2.உணர்வின் தன்மை பதிவாகி…
3.அதன் உணர்வின் அலை மீண்டும் தொடரப்படப் போகும்போது
4.அதனுடைய நினைவே உங்களுக்குள் அது புரிந்திடும் நிலையும்… அறிந்திடும் ஆற்றலும்…
5.அறிந்து நுகர்ந்திடும் நிலையும் உங்களுக்குள் உருவாகும்.

ஏதோ சாமி சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று இடைமறித்துத் தடைப்படுத்தினால் அது புரியாத நிலைகளாக உங்களை மறைத்துக் கொண்டு இருக்கும்.

ஒரு ஒளியின் தன்மை வரும்போது அதற்கு முன்னாடி ஒன்றை வைத்து அடைத்து விட்டால் வெளிச்சத்தால் இங்கு எதையும் அறியும் தன்மை வராது.

இதைப் போலத்தான் “நமக்குப் புரியவில்லையே…” என்ற உணர்வினை நீங்கள் இடைமறித்து விட்டால் அது புரியாத தன்மையே ஆகிவிடும்.

உதாரணமாக… ஒருவர் சண்டையிடுகின்றார் என்ற நிலைகளில்
1.அந்த சண்டையின் அர்த்தத்தைக் கேட்காமல் இருந்தால்
2.நமக்கு எதுக்கு ஊர் வம்பு என்று எண்ணிவிட்டால்
3.மீண்டும் அவர் தவறு செய்த எண்ணங்கள் நமக்குள் வராது.

ஆனால் என்ன செய்தார்…? ஏன் சண்டையிட்டார்…? என்ன பேசினார்…? என்று கூர்மையாகப் பார்த்தால் அவர் சண்டை செய்த நிலையயும்… அவர் இப்படி இப்படியெல்லாம் செய்தார்… என்றும் அடுத்தவர்களிடம் சொல்ல முடியும்.

அப்படிச் சொல்லும்போது..
1.அவரின் உணர்வை நுகர்ந்து அவனிட்ட சண்டையை நமக்குள் வளர்க்க முடியும்.
2.அந்தச் சண்டையிடும் உணர்வுகள் நமக்குள்ளும் விளையும்.

நமது உயிரின் வேலை இவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…! ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆகவே “தன்னைத்தான் அறிதல் வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் தெரியப்படுத்துவது.

சண்டையிடுவோரின் உணர்வைப் பதிவாக்குவது போல் இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கண்ட அனைத்தையும் உங்களால் புரிய முடியும்… அறிய முடியும்… உணர முடியும்… காண முடியும்…!