ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2020

தியானம் செய்வது எதற்காக…?


வாழ்க்கையில் இப்போது நாம் எல்லோரும் நல்லது தான் செய்கின்றோம்… யாரும் தவறு செய்வதில்லை.

ஆனால் நல்லது செய்யும் போது
1.நம்மைக் காட்டிலும் கடுமையான உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.
2.அந்தக் கடுமையான உணர்வு நமக்குள் வந்தவுடன்… நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது.

நம் நல்ல குணங்கள் மறையாமல் தடுப்பதற்காக எல்லாவற்றையும் ஒளியாக மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் மறவாது எடுத்தல் வேண்டும்.

அதன் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து நாம் ஒவ்வொரு அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உரமாக ஏற்ற வேண்டும். “அது தான் தியானம்…!”

ஒரு நிலத்தில் வித்துக்களை ஊன்றுகின்றோம். பல விதமான குப்பைகளைப் போடுகின்றோம். அந்தக் குப்பையில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அந்தச் செடி நல்ல பலனை எப்படித் தருகின்றதோ இதைப்போல நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களுக்கு… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகேற்றினால் வலிமை பெற்று விடும்.

ஏனென்றால்…
1.இந்தக் கஷ்டம் என்பதை விட்டு விட வேண்டும்…
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து “நல்லதாக இருக்க வேண்டும்…!” என்று எண்ணித் தான் ஆக வேண்டும்.

இதை எடுத்தீர்கள் என்றால் உடலுக்குள் வந்த தீமைக்கு வலிமை கிடைக்காது. நம்முடைய நல்ல எண்ணம் வலிமை சேர்த்துவிடும். ஆக… நம் உடலுக்குள் பல அசுத்தங்கள் இருந்தாலும்… தீய உணர்வு இருந்தாலும்… இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஜீவணுக்களுக்குச் செருகேற்ற வேண்டும்.

தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடமாவது கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஜீவன் ஊட்டிக் கொண்டு வந்தால்… இதற்கு முன்னாடி நாம் செய்த பிழைகள் எது இருந்தாலும்… அல்லது நமக்குள் தீமைகள் எது வந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்.

எப்படி…?

1.செடிகளுக்கு அந்தக் குப்பைகள் எப்படிச் சத்தாகின்றதோ அதைப் போல துருவ நட்சத்திரத்தின் சக்தியை இணைத்துக் கொண்டால் அந்த உணர்வுகள் ஒளியாகின்றது.
2.அதே போல குப்பைகளை எல்லாம் போட்டு எரித்து எப்படி நெருப்பாக (ஒளி) ஆக்குகின்றோமோ இதைப் போல நமக்குள் வரும் எந்த உணர்வின் தன்மையாக இருந்தாலும் நமக்குள் அதை ஒளியாக்கிட முடியும்.

இதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை…!

உங்களுக்கு அந்தச் சக்தி பெறுவதற்குத் நான் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றேன். நீங்கள் வந்த சந்தர்ப்பம் நல்ல சந்தர்ப்பம் இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

எல்லாமே உங்கள் ஆசை தான்…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் கிரியை ஆக்க வேண்டும்.
3.அதன் ஞான வழிப்படி இந்த உணர்வுகள் இந்த வாழ்க்கையில் உங்களைச் செயலாக்கும்…! (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலிமையாக ஆக்க அந்தச் சக்தியை ஆசைப்பட்டோமென்றால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் விளையும். அப்பொழுது அது தெய்வ ஆணையாக மாறுகின்றது. நமது உணர்வுகள் “தெய்வ ஆணையாக” மாறும்

உங்கள் உயிரான ஈசனை மதித்து வாழுங்கள். உங்கள் உயிரான ஈசனை மதித்து வாழும் ஆலயம் தான் கோவில்.

1.நமக்குள் பல பிரிவுகள் (எண்ணங்கள்.. குணங்கள்… உணர்வுகள்…) இருப்பினும்
2.அது எதனதன் பிரிவில் தீங்கு விளைவிக்கின்றது…?
2.நாம் அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று தான்
4.பாமர மக்களுக்கும் ஞானிகள் தெரியச் செய்து
5.இந்த உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…” என்று காட்டியுள்ளார்கள்.

பல துயர்கள் பட்டாலும்… அதிலிருந்து மீண்டு அருள் ஒளி பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… ஏகாந்த நிலை பெற வேண்டும்… என்று காட்டினார்கள்.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று நம் தென்னாட்டிலே காட்டப்பட்ட நமது ஆலய பண்புகள் அவ்வளவு “அற்புதமானது…!”