ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2020

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன...?


நெற்றியில் திலகம் வைத்தாலும் அந்தத் திலகத்தின் தன்மை எதுவாக இருக்க வேண்டும்...? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள்

வீட்டில் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மாற்றிவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எனக்குள் மன பலம் பெற வேண்டும்... மன வளம் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
4.குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
5.அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்... அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று
6.விரலால் தொட்டு அந்தத் திலகம் இடுவதற்கு முன் இந்த நினைவலைகள எண்ணுங்கள்.
7.நீங்கள் எண்ணிய அந்த உணர்வின் நிலைகள் உங்கள் உடலுக்குள் அலை அலையாகப் பரவிப் படர்கின்றது.

இந்த எண்ணத்துடன் திலகத்தை இடுங்கள்.

அதைப் போல யார் யாரெல்லாம் நலம் பெற வேண்டுமோ திலகம் இடும் பொழுது எண்ணி அவர்களை எல்லாம் நலம் பெறச் செய்யுங்கள்

யார் யாரெல்லாம் நம் மேல் வெறுப்பு அடைந்தனரோ... அந்த வெறுப்பை அகற்ற அவர்களுக்கும் தெளிந்த மணங்கள் வர வேண்டும்...! என்று எண்ணத்தை எண்ணி நீங்கள் திலகமிடுங்கள்

ஏனென்றால் “தொட்டுக் காட்டுவது” (பொட்டில்) என்று சொல்லும் பொழுது
1.பிறர் தொட்டுக் காட்டுகிறார்... என்றால்
2.அவருடைய எண்ணங்களைத் தொட்டுக் காட்டும் பொழுது
3.அவருடைய நிலைகளைத் தான் நமக்குள் நாம் எண்ணிச் சுழலச் செய்கின்றோம்.

ஆகையால் அதைப் போன்று இல்லாது நீங்கள் உயர்ந்த எண்ணங்களை எண்ணி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஐம்பது முறையாவது எண்ணி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த வகையில் அவர்கள் நன்மை பெற வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் எண்ணத்தால் எண்ணிப் “புருவ மத்தியில்” திலகத்தை வையுங்கள்.

அப்போது இந்த உணர்வுகள் அங்கு ஆழப் பதியும்... நினைவலைகளாகத் தெளிவாக வரும்.... உங்கள் சிந்தனைகள் சீர்குலையாது. வெறுப்பின் அலைகள் உங்களுக்குள் புகாது அதைத் தடுக்க இந்த முறைப்படி நீங்கள் திலகமிட வேண்டும்.

இன்று நீங்கள் உடைக்குத்தக்க பல அணிகலன்கள் அணிகின்றீர்கள். அது எத்தனையோ ஃபேஷனாக இன்று வந்துவிட்டது.

ஆக... நாம் எப்படி ஒருவருடைய நிலைகளை மகிழ்ந்திடும் நிலைகள் செய்கின்றோமோ அதைப் போல “நம் எண்ணங்களை உயர்ந்ததாக்கி” அதையே நாம் ஆபரணங்களாக அமைக்க வேண்டும்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும்... எப்போதும் மகிழ்ச்சி பெற வேண்டும்...! என்று இந்த முறையைச் சிறிது காலம் சொல்லிப் பாருங்கள். அது உங்களுக்குள் தெளிவான நிலைகளாக வரும்.

இப்படி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் செயல்படுத்துதல் வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் நமது பற்று அந்த மகரிஷியின் பால் செல்கின்றது. அந்த மகரிஷியின் உணர்வு ஓங்கி வளருகின்றது.

அத்தகைய பற்றின் தன்மை
1.அந்த மகரிஷிகளின் சக்திகள் கணக்கு எந்த அளவுக்குக் கூடுகின்றதோ
2.அதன் வழிப்படி நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

அதே சமயம் நம் குடும்பத்தில் வரும் எத்தகைய தீமையும் நம்மை அணுகாது பார்த்துக் கொள்ளுகின்றோம். நம் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் செல்லுகின்றது.

விண்ணை நோக்கி செல்லும் நிலையை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்
1.“சித்திர புத்திரன்” கணக்கின் பிரகாரம் தான் உடலுக்குப் பின் அடுத்த நிலை என்பது போல்
2.எந்த விண்ணின் பற்றை நாம் அதிகமாகக் கூட்டுகின்றோமோ
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் அனைவரும் ஐக்கியமாகின்றோம்.