ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2020

தீமைகளை நீக்கிடும்… “தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட ஆன்மாவாக” மாற்றிக் கொள்ளுங்கள்


அற்புத சித்துகளை எல்லாம் உங்களுக்கு நான் (ஞானகுரு) கற்பித்துக் கொடுக்கலாம். அந்த மாதிரிக் கொடுத்தவர் யாரும் கரை சேர்ந்ததில்லை.. நல்ல நிலையிலும் இல்லை…!

அவரவர்கள் ராஜாவாக… தனிக்காட்டு ராஜாவாக “நான் சர்வத்தையும் அறிந்து கொண்டேன்…!” என்ற நிலைக்குப் போய் விடுகின்றார்கள்.

ஆகவே அந்த அற்புதங்கள் நமக்குத் தேவை இல்லை. நமக்குள் இருக்கும் அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?

1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் அருள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
3.நம்மைப் பார்ப்போர் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று மனம் மகிழ வேண்டும் என்ற
4.இத்தகைய நிலையை நாம் பெறுவோம் என்றால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

என்னைப் பார்ப்போர் மனம் மகிழ வேண்டுமென்றால்… நாம் படுகின்ற வேதனையைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.நம் சொல்லால்
2.நம் பேச்சால்
3.நம் செயலால்
4.நம் பார்வையால்
5.அவர்கள் அதைப் பார்த்து… “நான் நல்லதானேன்…!” என்று அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வர வேண்டும்.

ஆகவே… உங்கள் பார்வை பிறருடைய தீமையை நீக்கும் சக்தியாக வர வேண்டும். உங்களுடைய உணர்வின் தன்மை “தூய்மைப்படுத்தும் சக்தியின் ஆன்மாவாக” மாற்ற வேண்டும். தூய்மையான நிலைகள் கொண்டு தீமையைத் தனக்குள் வராமல் ஒளியாக மாற்ற வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய நிலைகளை (பெரும் பெரும் பாறைகளை) நொறுக்கி அதனுடைய நிலைகள் துகள்களாகப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. அதைத் தூசியாக மாற்றி மற்ற கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாறுகின்றது  பின் அதன் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனின் தன்மை தனக்குள் கவர்ந்து “ஒளிச் சுடராக” மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.மாமகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.உங்களுக்குள் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இதை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சுகளையும் அதனின் தன்மைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே… அதன் உணர்வின் தன்மை பெற வேண்டுமென்ற இந்த நோக்கத்துடன் தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் உங்களிலே இயங்கி
2.தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மைகள் உங்களிலே விளைந்து
3.இந்த உடலை விட்டு அகன்றால் “என்றும் தூய்மையின் நிலைகள் பெறமுடியும்…!” என்ற
4.தன்னம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்வது.