ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2020

நம்மைக் காக்க வேண்டும்... என்று “நம் தாய் ஊழ்வினையாகப் பதிவு செய்த நல்ல உணர்வுகளை” நாம் எடுத்தே ஆக வேண்டும்


உதாரணமாக பள்ளிகளில் பாடங்கள் படிக்கின்றார்கள் குழந்தைகள். நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கின்றது.

ஆனால் பாடங்கள் தான் நினைத்தபடி வரவில்லை என்று
1.“எனக்கு ஞாபகம் இல்லையே...!” என்ற உணர்வினை
2.ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அந்த உணர்வு “ஒரு வித்தாக” மாறுகின்றது.
3.பதிவாகவில்லை... பதிவாகவில்லை... பதிவாகவில்லை...! என்ற இந்த ராகம் தான் வரும்.

மீண்டும் எப்படிப் படித்தாலும் இதனுடன் கலந்து அந்த உணர்வு வரப்படும்போது... தன் நினைவை இந்த அலையுடன் கலந்து “நினைவற்றதாக மாற்றுகின்றது...”

அதை மாற்ற வேண்டும் என்றால் எந்த முறையைக் கையாள வேண்டும்...?

1.தன் தாயை எண்ண வேண்டும்...!
2.தாய் அன்பு கொண்டு நமக்குள் பதிவு செய்த அந்த தாயின் அன்புள்ளம் எனக்குள் பெருக வேண்டும்
3.அவர்கள் எனக்கு எந்த ஆசிர்வாதம் கொடுத்தாரோ அந்த ஆசியின் வழிப்படி கல்வியில் சிறந்தவனாக வர வேண்டும்
4.என் அன்னையின் அருள் என்றும் எனக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.     
5.கல்வியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
6.சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை நிச்சயம் அகற்ற முடியும்.

ஏனென்றால் தாய் எப்போதுமே தன் குழந்தைகள் எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் உருவாக்கி “ஊழ் வினை என்ற வித்தாக” நமக்குள் போட்டுள்ளது.

ஆனால் அதை நினைவு கொண்டு யாரும் எடுப்பதில்லை.

குழந்தைகள்... தன்னைத் திட்டியவர்களையும்... விளையாட்டுத்தனமாகப் பிறர் பேசும் தீமைகளையும்... தீமையான செயல்களையும் பதிவு செய்து... அதன் உணர்வின் நினைவாக அந்த எண்ணங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்.

பின்... இவர்கள் பாட நிலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

ரோட்டிலே செல்லப்படும்போது ஒருவன் தீங்கான செயல்களைச் செய்கின்றான். இந்தக் குழந்தையோ நல்ல குழந்தை ஆனால் உயர்ந்த ஞானம் பெற்ற குழந்தை.

ஆனால் தீங்கான செயலைச் செயல்படுத்துவோரின் தாக்கும் உணர்ச்சியின் வேகம் வரப்படும்போது அன்பும் பரிவும் கொண்ட இந்தக் குழந்தை அதைப் பார்த்தபின் பயமும் பதட்டமும் அதற்கு வந்து விடுகின்றது. இது பதிவாகி விடுகின்றது.

அதற்கு அடுத்து... பள்ளிக்குச் சென்றபின் அதே பதட்ட நிலையில் இருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து...
1.பாட நிலைகளைத் கவரும் போதெல்லாம்
2.அது இதனுடன் மோதும் போது... பய உணர்ச்சிகள் தோன்றி
3.நல்ல நினைவாற்றல் வராது சென்று விடுகின்றது... ஞாபக சக்தி குறைகின்றது.

அந்த ஞாபக சக்தி கூட வேண்டுமென்றால்... நான் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேசித்த உணர்வின் தன்மையையும் அம்மா அப்பா அருளாசியையும் நாங்கள் பெற வேண்டும் என்று குழந்தை எண்ணுதல் வேண்டும்.

தாய் அன்புள்ளம் கொண்டு... தனது குழந்தை கல்வியில் உயர்ந்த நிலை பெற வேண்டும்... உயர்ந்த ஞானம் பெற வேண்டும்...! என்று எண்ணி அது உடலில் உருவாகிய அருள் ஞானத்தைக் குழந்தை மேல் பாய்ச்சி வைத்துள்ளது.

தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்... என்ற எண்ணத்தை ஊட்டி அதை அவர்கள் வெளிப்படுத்திப் பதிவு செய்த நிலைகளும் குழந்தையிடம் உள்ளது.

ஆகவே குழந்தைகள் ஒரு அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் உடனே...
1.ஈஸ்வரா...! என்று எண்ணியதை உருவாக்கும் உயிரைப் புருவ மத்தியில் நினைவில் கொண்டு
2.அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.தன் அம்மாவை நினைத்தால்... இந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்

பெற்று விட்டால் யாரைக் கண்டு அஞ்சினோமோ அந்த உணர்வினை “தாய் அன்பும்... அதன் வழியில் யாம் உபதேசிக்கும் அருள் ஞானமும் கலந்து...” அச்சுறுத்தும் உணர்வுகள் விளையாது அதை அடக்கும்.

இது தான் கல்யாணராமன் என்பது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகள் பெற்றாலும் மேலே சொன்ன முறைப்படி நினைத்து அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
1.தீமையின் செயலாக்கங்களை அது அடக்கி... அச்சுறுத்தும் உணர்வுகளை அடக்கி...
2.அந்த ஞானியின் உணர்வின் துணை கொண்டு மெய்ப் பொருள் காணும் அந்த வலிமையான நிலைகள் பெறச் செய்யும்.