ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 4, 2020

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்


தங்க ஆபரணங்களை நீங்கள் அணிந்திருந்தால் அந்த ஆபரணங்களை எண்ணி... நம்மைப் போன்றே மற்றவருக்கும் இது கிடைக்க வேண்டும்...! என்று எண்ணுங்கள்.

1.அந்தத் தங்கத்தைப் போன்ற நல்ல மனம் எங்களுக்குள் வளர வேண்டும். 
2.எங்களைச் சார்ந்தோர்... எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் “தங்கத்தைப் போன்ற மங்காத மனம்” கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் தங்கத்தைப் போன்ற பளிச்சென்ற மங்காத நிலைகள் எல்லோரது மனதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் வெறும் நகையாக மட்டும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதற்கு அல்ல...!

தெய்வங்களுக்குத் தங்கத்தை மாலைகளாகப் போட்டு பல விதமான ஆபரணங்களாக அணிந்து பார்க்கின்றோம் அல்லவா...! அந்தத் தங்கம் எவ்வாறு மங்காது இருக்கின்றதோ... இதைப் போன்று நமது எண்ணங்கள் மங்காது அனைவருடைய அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

காரணம்... குடும்பத்திற்குள் எல்லோருடனும் நாம் மகிழ்ச்சியாக இருப்பினும் அந்த மகிழ்ச்சிக்குள் சிறிது குறை ஏற்பட்டால் உடனே அவர்கள் மேல் கோபமோ ஆத்திரமோ வேதனையோ ஏற்பட்டு நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றது.

அப்பொழுது நம் நல்ல எண்ணங்கள் மறையாது இந்தத் தங்கத்தைப் போன்று மங்காது பாதுகாத்திடல் வேண்டும்.

அவர்களுடைய குறை உணர்வுகள் நமக்குள் வந்ததைத் துடைத்துவிட்டு “பளிச்...” என்ற நிலையில் அவர்களுடைய உணர்வும் தெளிந்திட வேண்டுமென்ற எண்ணத்தை நாம் எடுத்து நமக்குள் வளர்த்திட வேண்டும்.

ஏனென்றால் தியானம் என்றாலே இது தான்...! நமக்காக மட்டுமல்ல...!

சூரியன் எவ்வாறு பிற கோள்களின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து அதிலுள்ள தீமைகளைக் கழித்துவிட்டு ஒளியின் நிலையாக அது உருப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கின்றதோ... இதைப் போல நமது எண்ணங்கள் எப்போதுமே அந்தப் பிரகாச நிலைகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

 பிறர் மேல் இருக்கும் குறையோ... குற்றமோ... வெறுப்போ,,, நாம் நுகர்ந்து அறியப்படும்போது... அது நமக்குள் வளராது...
1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு பளிச்சிடச் செய்து
2.”தங்கம் கருகாது” எப்படி அதனுடைய உணர்வு என்றுமே ஒளி வீசுவது போல்
3.நம் ஒவ்வொருவருடைய மனதையும் தங்கத்தைப் போன்று மங்காத நிலை பெறச் செய்து
4.நாம் எதிலே ஈடுபட்டாலும் நம் உணர்வுகள் மங்காத நிலைகள் பெறச் செய்ய வேண்டும்.

இதை நாம் வழிப்படுத்த வேண்டும்.