ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2016

தெய்வம் ரொம்பவும் என்னைச் சோதிக்கின்றது என்று வேதனைப்படுகின்றார்கள் சிலர்....!

திட்டியவரை எண்ணியவுடன் புரையேறுகின்றது, திட்டியவரை எண்ணிக் கொண்டேயிருந்தால் அன்றைய காரியங்கள் தடைப்படுகின்றது.

வேதனைப்படுவோரைப் பற்றிச் சொன்னவுடன் வேதனைப்படும் நிலையாகிவிடுகின்றது. அடுத்து நல்ல வேலைகளைச் செய்ய முடியவில்லை. வேதனைப்படும் உணர்வை எடுத்துக் கொண்டால் பெண்கள் சமையல் செய்யும்போது தவறாகப் போய்விடுகின்றது.

அதே சமயத்தில் பெண்கள் ஆகாரத்தைச் சரியாகச் செய்தாலும் ஆண்கள் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்துவிட்டு வந்து அந்த உணவை உட்கொண்டால் சுவைகளை மாறுபட்டதாக ஆக்கிவிடுகின்றது.

இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டேயுள்ளது. ஆகவே, மனிதனான பின் நாம் இதை மாற்றிக் கொள்ளும் நிலைகளுக்கு எதைச் செய்ய வேண்டும்?

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நரகலோகத்திலிருந்து இன்று சொர்க்கலோகமான இந்த மனித உடலுக்குள் வந்துள்ளோம். இந்தச் சொர்க்கலோகத்திலிருந்து நமக்குச் சொர்க்கவாசலைக் காட்டும் நம் உயிருடன் ஒன்ற வேண்டும்.

ஆகவே, இதன் வழி நாம் சென்றோமென்றால் அருள் ஒளி பெற்ற சப்தரிஷி மண்டலங்களுடன் என்றும் ஒன்றி வாழலாம்.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனை கோடிச் செல்வம் இருப்பினும் நாம் எத்தனை நாள் வாழ்கின்றோம்? செல்வத்தை நாம் தேடி வைத்தாலும் உடல் நலம் இல்லை என்றால் செல்வத்தால் சந்தோஷப்படுகின்றோமா? இல்லை.., அப்பொழுதும் வேதனைப்படுகின்றோம்.

இவ்வளவு கஷ்டப்பட்டோமே என்ற வேதனையில் தான் நாம் வாடுகின்றோம். இனிமேல் என் பையன் என்ன செய்யப் போகின்றானோ..? என்ற இந்த அச்ச உணர்வுகள் வந்துவிடும்.

இப்படி அஞ்சும் உணர்வுகள் வந்துவிட்டால் பையனின் நினைவை எடுத்து வேதனையின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

வளர்ந்து விட்டால் இறந்தபின் எந்தப் பையனைக் காக்க வேண்டும் என்ற எண்ணினோமோ இந்த வேதனையான உணர்வு கொண்டு பையனின் உடலுக்குள் சென்றுவிடுகின்றது ஆன்மா.

அவன் உடலுக்குள் சென்றபின் இப்பொழுது எதைப் புலம்புகின்றனரோ இதே நிலைகளுக்கு அவன் சிந்தனையைச் சீர்குலையச் செய்து அவனால் சம்பாரித்த சொத்தையும் அவன் பக்குவப்படுத்தும் நிலையில்லாது சிதறச் செய்யும்.

ஆகவே, பையனுக்கு எதைக் கொடுத்தல் வேண்டும்? அருள்ஞானத்தைக் கொடுத்தருளினால் அருள் ஒளி அவன் பெறவேண்டும் என்ற உணர்வை வளர்த்தால் நாம் அவன் உடலுக்குள் செல்ல மாட்டோம்.

அவன் நல்ல குணங்கள் பெறவேண்டும், சிந்திக்கும் திறன் அவனுக்குள் வரவேண்டும், அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவன் வாழ வேண்டும் என்ற இதைப் பருகி அங்கே பாய்ச்சுதல் வேண்டும்.

நான் சம்பாரித்தேன், எல்லோருக்கும் நன்மை செய்தேன் எனக்கு இப்படி வந்துவிட்டதே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

நன்மையின் நிலைகள் எளிதானது. ஆனால், ஒருவர் வேதனைப்பட்டு கஷ்டம் நஷ்டம் என்று சொல்லும் போது அது மிகவும் கடினமானது.

ஆனால், அதை நுகர்ந்தறிந்தபின் நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்னதான் உதவி செய்தாலும் பிணியிலிருந்து அவர் விடுபட அவருக்குள் எடுத்துக் கொண்ட நோயின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.

நாம் மீண்டும் பாசத்துடன் அவருக்கு உதவி செய்கின்றோம்.

உதவி செய்தாலும் அவர் மடிந்தால் இவரின் எண்ணமே அதிகமாகின்றது. உடலை விட்டு வந்தபின் யார் அவருக்கு உதவி செய்தாரோ அவர் மேல் எண்ணமாகி அவர் உடலுக்குள் வந்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை. அப்பொழுது அந்த உடலில் விளைந்த நோய்வாய்ப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் வரத் தொடங்கும். அப்பொழுது நாம் வணங்கும் தெய்வங்களை எப்படி எண்ணுகின்றோம்?

நான் எல்லோருக்கும் நன்மை செய்தேனே. என்னை இப்படி நீ சோதிக்கின்றாயே. வணங்கி வரும் நல்ல குணங்களை நாம் பாதுகாப்பதற்கு மாறாக பழி தீர்க்கும் உணர்வுகளாகத் தான் நாம் மாற்றிவிடுகின்றோம்.

காரணம், நாம் பல நன்மைகள் செய்தாலும் பல கோடிச் சரீரங்களிலிருந்து தீமைகளை வென்று வென்றிடும் சக்தியாக மனித உடலுக்குள் 1008 குணங்கள் உருவாக்கப்பட்டது.

இதையெல்லாம் சேர்த்துத்தான் மனிதனாக உருவாகியது. ஆனால், மனிதனாக உருவாக்கிய இந்த நல்ல குணங்களைக் காக்க வேண்டும் அல்லவா..,?

இதற்காகத்தான் இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நமக்குள் மறைந்த மனிதனாக உருவான நல்ல குணங்களை ஆலயங்களில் சிலையாக வடித்து வைத்தனர் ஞானிகள்.

அந்த நல்ல குணங்களைக் காத்திடும் முறைகளையும் வழிவகுத்து அமைத்தனர். அதை யாரும் சிந்திக்கவில்லை.

அபிஷேகமும் ஆராதனைகளையும் செய்தால் மந்திரங்களைச் சொன்னால் ஆண்டவன் நம்மைக் காப்பான் என்ற உணர்வுகளைத்தான் நமக்குள் வளர்த்திருக்கின்றோம்.

நன்மைகள் செய், தர்மத்தையும் தானத்தையும் செய்தால் இந்தத் தெய்வம் உனக்கு வழி காட்டும் என்பார்கள். தர்மங்களையும் தானங்களையும் நாம் செய்தாலும் “நம்முடைய நிதானத்தையே இழந்துவிடும்” நிலைகளைச் செய்துவிடுகின்றது.

ஆகவே, கையிலிருந்த செல்வம் போய்விட்டது. பிறருடைய கஷ்டங்களை எல்லாம் கேட்டறிந்தோம். அந்த உணர்வுகளே நமக்குள் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் நல்ல குணங்களை மாற்றிவிடுகின்றது. நுகர்ந்த உணர்வுகளோ நமக்குள் நோயாக மாறுகின்றது. நாம் எந்தத் தெய்வத்தை வணங்கினோமோ அந்தத் தெய்வத்தையே சாடும் நிலைகளுக்கு வந்துவிடுகின்றது. நல்ல குணங்களைக் காக்கும் நிலை அற்றுவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் விடுபடுவதற்குத்தான் அன்று இதைத் தெளிவாகக் காட்டினான் ஞானி.

ஆகவே, நம்முடைய பற்று எதன் மேல் வரவேண்டும்? மனித உடலிலிருந்து விடுதலையாகி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமான அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.

அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.

ஒரு சூரியக் குடும்பம் உருவானபின் அதிலே உயிரணுக்கள் தோன்றினால் மற்ற அணுக்கள் உருவாக்கப்பட்டு மனிதனனான பின் சூரியன் எவ்வாறு ஒளிச்சுடராகின்றதோ மனிதனின் அறிவு அகண்ட அண்டத்தினையும் அறியும் அறிவாக வருகின்றது.

இந்த அறிவின் துணை கொண்டு நாம் இந்த வாழ்க்கையில் அருள் ஞானிகள் சென்ற பாதையில் நமக்குள் அருளாற்றலை வளர்த்தோம் என்றால் அவர்கள் சென்றடைந்த எல்லையை நாம் அடையலாம்.