ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2016

பேரன்பு கொண்ட உணர்வுகளை ஊருக்குள் பரப்பி பகைமையை அகற்றுவதற்குத்தான் “மாரியம்மன் ஆலயம்”

ஒரு மனிதன் எனக்குத் தீங்கு செய்தான் என்றால் அவரை எண்ணும் பொழுதெல்லாம் அந்தத் தீங்கின் உணர்வே எனக்கு நினைவுக்கு வந்து கோபமாக எண்ணுகின்றோம்.

அவரை எப்படியும் நசுக்க வேண்டும், அவருக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்ற உணர்வைச் சுவாசித்தால் “மூஷிகவாகனா..,” நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வந்து கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது.

பின், அவருக்கு எப்படியும் தொல்லை கொடுக்க வேண்டும் இம்சைகள் செய்ய வேண்டும். அவருக்கு எந்த வகையிலும் இடையூறுகள் செய்ய வேண்டும் என்ற உணர்வினை எனக்குள் ஊட்டிக் கொண்டேயிருக்கின்றது.

இன்று கம்ப்யூட்டர்களில் நாம் எதைப் பதிவு செய்துள்ளோமோ அதனைக் கணக்கிட்டு (CALCULATION), கணக்குகளையோ இயந்திரங்களையோ செயல்படுத்தும் பொழுது அதன் வழிகளில் தான் கம்ப்யூட்டர் இயக்கிக் காட்டுகின்றது.

இதைப் போன்றுதான் நமக்குள் பிறர் உணர்வைப் பதிவு செய்து கொண்டபின் அந்த உணர்வின் இயக்கமாக “அவரை எதிரியாகக் கருதி…, அவரை அழித்திட வேண்டும்…,” என்ற எண்ணத்தை உருவாக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகள் அனைத்தையும் அது மாய்த்து விடுகின்றது.

நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக்குகின்றது. நமக்குள் கொதிப்பின் நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை அழிக்கப்படும் பொழுது மனிதனாக உருவாக்கிய நிலைகளிலிருந்து கடும் நோய்களும் பல சிந்தனையற்ற செயல்களும் ஆகி நம் உடலையே உருகச் செய்கின்றது.

அதன் வளர்ச்சியில் உள் உறுப்புகளைக் கரையச் செய்கின்றது. உறுப்புகளைச் சீர் கெடச் செய்து கிட்னிக்கோ, இருதயத்திற்கோ பாதிப்பாகும்போது அவைகளும் சீராக இயங்குவதில்லை. அதனால் ஆரோக்கிய நிலைகள் இயங்கும் மற்ற உறுப்புக்களையும் இது பாழாக்கிவிடுகின்றது.

ஆனால், நாம் நினைக்கின்றோம் “நமக்குத் தீங்கு செய்தவனை வாழவிடக் கூடாது..,” என்று.

இப்படி எண்ணும்போது என்ன ஆகும்?

நமக்குள் பதிவு செய்த உணர்வுகள் (அவனை வாழவிடாமல் செய்யும்) அதாவது நமக்குள் பதிவு செய்த ஏட்டின் நிலைகளைத் தான் நம் உடலில் இயக்குகின்றது என்று நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

இன்று மாரியம்மன் கோவில் இல்லாத ஊரே இல்லை என்று கூடச் சொல்லலாம். "மாரியம்மன்" என்றாலே "தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் தன்மை...," கொண்டது.

அங்கே அக்னி குண்டம் வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் உள் புகுத்தித் தீமை செய்யும் உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கும்படிக் காட்டினார்கள் ஞானிகள்.

இதை உணராது சாங்கியத்திற்காக நாம் இன்று என்ன செய்கின்றோம்?

தனக்குள் விரதமிருந்து மஞ்சள் துணியை எடுத்துக் கொண்டு வேப்பிலையும் கையில் எடுத்துக் கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கிவிட்டால் அந்தத் தாய் நம்மைக் காக்கும் என்ற இந்த நம்பிக்கை தான் (சாங்கிய நம்பிக்கைதான்) இருக்கின்றது.

இதைத்தான் இன்று செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால், ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

ஊருக்குள் சில குறைகள் வந்தால் வலுவேற்றிய அந்த உணர்வின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வுகள் ஊர் முழுவதும் படர வேண்டும் நாங்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும், எங்களையறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணி எடுக்க வேண்டும்.

இப்படி அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைத் “தன் உடலுக்குள் இறக்கி” அந்தப் பகைமை என்ற நிலைகளைச் சுட்டுப் பொசுக்கிவிட்டு, பேரன்பு கொண்ட உணர்வுகளை ஊருக்குள் பரப்பி, இதைப் போன்ற உணர்வுகளைப் பெருக்கச் செய்ய வேண்டும் என்று காட்டிய நிலைகள் தான் “மாரியம்மன் கோவில்”.

“அதை யாராவது நாம் பின்பற்றுகின்றோமா…,?”

அந்த மாரியம்மனை நாம் காப்பாற்றுகின்றோமா.., மாரியம்மன் நம்மைக் காப்பாற்றுகின்றதா.., சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆக, குலதெய்வம் என்ற நிலைகளில் மாடசாமி, மாடன், கருப்பண் என்ற அசுர உணர்வுகள் கொண்ட சிலைகளை வடித்து வைத்து “என்னை அவன் காத்திட்டான்..,, என்னைக் காக்கும் தெய்வம்..,” என்று மாற்றிவிட்டார்கள்.

“எதிரியை வீழ்த்திடும் உணர்வுகள் கொண்டவன்…, நான்..,” என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு மற்ற மனிதனின் நிலைகளை எதிரியாக உருவாக்கும் உணர்வின் சிலைகளை உருவாக்கி அதற்குண்டான காவியங்களாகப் படைத்துவிட்டனர்.

ஞானிகள் நமக்குக் காட்டிய நல் ஒழுக்கங்களை காலத்தால் நாம் இழந்துவிட்டோம். மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் நல்ல ஒழுக்கங்களை அழித்துக் கொண்டேயுள்ளோம்.

ஊருக்குள்ளோ தெருக்களிலோ குடும்பங்களிலோ சண்டை சச்சரவுகள் வந்தால், இன பேதங்களோ மன பேதங்களோ வந்தால் உடனே மாரியம்மனைப் பார்க்கப்படும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், எங்கள் ஊர் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஊர் மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். நாங்கள் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொருவரும் தனக்குள் வளர்க்க வேண்டும்.

அதே போன்று நம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கவும் ஊர் நலம் பெறவும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்தால் பிறர் வாழ வேண்டும் என்ற இந்த உணர்வு நம்மை மகிழ்ந்து வாழச் செய்யும்.

ஆகவே, நமக்குக் காட்டப்பட்ட மாரியம்மனைப் பார்க்கும்போது அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் வளர்த்து, தெய்வீகச் சொல்லாக நம் சொல்லின் நிலைகள் வெளிப்பட்டு, தெய்வீகச் செயலாக ஊர் முழுவதும் பரவச் செய்வதற்குத்தான் "மாரியம்மன் ஆலயம்".

அன்றே இதைத் தெளிவாகக் கூறினான் அகஸ்தியன். அகஸ்தியன் காட்டிய உணர்வைப் பின் கண்டுணர்ந்த வியாசகர் இத்தகைய தத்துவத்தைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

அந்த ஞானிகள் உணர்த்திய மெய் வழியைத் தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம்.