ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2016

ஜோதிடம், மந்திர மாயாஜாலங்கள் செய்வோரிடமிருந்து மீளுங்கள்

இன்று சாதாரண நிலைகளில் நான் தான் கடவுள்.., என்று ஊருக்கொரு அருளாடியும், ஊருக்கு ஒரு ஜோசிடம் சொல்பவரும் உண்டு.

பல மாயாஜாலங்களைச் செய்துவிட்டு “நான் தான் கடவுளின் அவதாரம்..,” என்றும் நான் கடவுளின் நிலைகள் கொண்டு இந்தப் பிரசாதத்தைக் கொடுக்கின்றேன். இதை வாங்கினால் எல்லோரும் காக்கப்படுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்கள் போய்விடும் என்று அவருக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அவருக்குள் கடவுளாகி பல மாயாஜாலங்களைச் சொல்வார்கள்.

மாயாஜாலம் செய்வோரிடம் - சீக்கிரத்தில் எனக்குப் பணம் வேண்டும், பொருள் வேண்டும், சுகம் வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளோர் அவர்களிடம் செல்கின்றார்கள்.

ஆக, தன் பசியைத் தீர்க்க தூண்டிலில் இரையைப் போட்டு மீன்களைப் பிடிக்கும் பொழுது இரை தேடி வரும் மீன்கள் அதிலே சிக்கித் தவிப்பது போன்று இதன் வழி செல்வோர் அவர்களிடம் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளார்கள்.

இப்படி இந்த மனித வாழ்க்கையில் ஞானிகள் காட்டிய அருள் வழியிலிருந்து நழுவிச் சென்று மந்திரவாதியிடமும் ஜோதிடம் சொல்வோரிடத்திலேயும் இன்றும் சென்று கொண்டுள்ளோர் பலர்.

உனக்கு “நல்ல நேரம் வருகின்றது…, கெட்ட நேரம் வருகிறது..,” என்று சொல்லிவிட்டு அதிலே தீமைகளை அகற்ற யாகங்களையும் வேள்விகளையும் செய்தால் இது அகற்றப்படலாம் என்று அவர்கள் சொல்வார்கள்.

அப்புறம் அந்த யாகத்தைச் செய்வதற்கு நாலாயிரம், ஐந்தாயிரம் கொடுங்கள் என்று சொல்லி பாவத்தைப் போக்குவதற்காக யாகத்தைச் செய்யச் சொல்வார்கள்.

ஜாதகக் குறிப்பை வைத்து அதற்கென்று “ஏஜெண்டை” வைத்துச் செய்கின்றார்கள்.

நான் சொல்லவில்லை…, நடப்பது அனைத்தும் உங்கள் ஜாதகத்தில் இப்படி எல்லாம் இருக்கிறது என்றும் அவர்கள் காண்பிப்பார்கள்.

வேள்விகள் செய்ய நல்ல வித்தைகளைத் தெரிந்தவரை வைத்துச் செய்யுங்கள் என்று சொல்கிற மாதிரிச் சொல்லி, அந்த ஏஜெண்டை வைத்துக் கொண்டே சொல்வார்கள்.

“தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்…,” என்று நாம் கேட்போம்.

அந்த ஏஜெண்டுகளை வைத்து யாகங்களையும் வேள்விகளையும் செய்யச் செய்து பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வார்கள். இப்படித்தான் சில நிலைகள் இந்த மாதிரி இன்றும் நடக்கின்றது.

ஆகவே, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த காசை அவர்களுக்குக் கொடுத்து வீண் விரயமாக்கி பிறருடைய நிலைகளில் சிக்கிக் கொண்டு தன்னிலை அறியாது இப்படித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால், இந்த உலகில் எப்படியெல்லாம் மனிதன் ஏமாற்றப்படுகின்றான்? எப்படியெல்லாம் மனிதர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்? “நாம் ஏமாந்து கொண்டிருக்கின்றோம்..,” என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனிதன் தன் வாழ்க்கையில் “கஷ்டப்படும் பொழுதெல்லாம்” தன்னையறியாமல் இந்தச் சூழ்நிலைகள் எல்லாமே வருகின்றது. 

இதிலிருந்தெல்லாம் நாம் “மாறவேண்டுமா.., இல்லையா..,?”

ஆக, கடவுள் நம்மைக் காக்கின்றாரா..,? கடவுள் எந்த ரூபத்தில் நம்மைக் காக்கின்றார்..,? என்ற நிலைகளை ஞானிகள் காட்டிய நிலைகளை நாம் எடுத்துக் கொண்டோமா..,? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம் குருநாதர் காட்டியது – “உயிரே கடவுள்”, அந்த ஈசன் வீற்றிருக்கும் “உடல் ஆலயம்”. சுவாசிக்கும் உணர்வுகள் தெய்வங்களாக நம்முள் நின்று இயக்கிக் கொண்டுள்ளது. ஆக, “உணர்வின் செயலே தெய்வம்”.

இந்த வாழ்க்கையில் அறியாது வந்த இருளான உணர்வுகளை நீக்கி ஒளியின் தன்மையாக மாற்றிடும் நிலைகள் பெறவேண்டும் என்பதுதான் நம் குருநாதர் காட்டிய அந்த அறநெறிகள்.

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நம் உணர்வினைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்ணுலக நிலைகளில் தீமையைப் பிளந்திடும் தகுதி பெற்ற மனிதன் நாம் “தீமையைப் பிளந்து” உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக ஆவதுதான் மனிதனின் கடைசி நிலை “அழியா ஒளிச் சரீரம்”.

அழியா ஒளியின் சரீரத்தை நீங்கள் அனைவரும் பெறவேண்டும், அது உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.