பக்தி என்பது நல்ல
ஒழுக்கம். ஆனால், பக்தி எப்படிச் செலுத்த வேண்டும் என்று தெரிவதில்லை.
கோவிலுக்குச்
சென்று தேங்காய் பழம் வைத்து, சாமிக்கு அபிஷேகம் செய்கிறோம். கால அனுஷ்டானங்கள்,
உடலில் குளிப்பது “இப்படிச் சுத்தப்படுத்துவது தான்” பக்தி என்று நாம் நினைக்கின்றோம்.
அதே சமயத்தில்,
நம்முடன் வாழ்ந்து வரக்கூடியவர்களின் பலருடைய தீமைகளைக் கேட்டுணரப்படும் பொழுது
அந்தத் தீமைகள் நமக்குள் வராது நம் “ஆன்மாவைச் சுத்தப்படுத்துதல்” வேண்டும்.
பிறர் தீமை
செய்கின்றார்கள் என்றால் அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும். (கோவிலில்
காட்டப்பட்டுள்ள) அந்தத் தெய்வ சக்தியை தீமை செய்பவர்கள் பெறவேண்டும். அவர்கள்
வாழ்க்கையில் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அது “உண்மையான பக்தி”.
ஏனென்றால், இந்த
நிலையில் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அது தான் “பக்தி”
ஒரு பள்ளியிலே
நாம் படிக்கின்றோம் என்றால் எழுத்தால் எழுதுகின்றார்கள். இங்கே கோவிலில் சிலையாக
வடிக்கின்றார்கள்.
எழுத்து வடிவில் “பிறருக்கு
உபகாரம் செய்தால் இந்த நிலையில் உனக்கு நல்லது நடக்கும்” என்று “பிறருக்குத்
தர்மம் செய்.., அதைச் செய்..,” என்று எழுத்தால் வடிக்கின்றார்கள்.
அதைப்
படிக்கின்றார்கள் அதன் வழி தர்மத்தைச் செய்கின்றார்கள்.
இங்கே உருவத்தால் காட்டி அந்த
உணர்வின் தன்மை எல்லோரும் நலம் பெறவேண்டும் அந்தத் தெய்வ குணம் பெறவேண்டும் அவர்கள்
குடும்பங்கள் நலம் பெறவேண்டும் நாங்கள் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் எங்களைப்
பார்க்கும் அனைவருக்கும் அந்தத் தெய்வ குணம் பெறவேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான
பக்தி.
இந்த மாதிரி பக்தியில் எத்தனை
பேர் நாம் இருக்கின்றோம்?
பக்தி கொண்டு கோவிலுக்குச்
செல்கின்றேன், சாமி மேல் பக்தி கொண்டு நான் அதிக நேரம் பூஜை அறையில் இருக்கின்றேன்,
இது எனக்குச் சொந்தமான சாமி, அதை எப்பொழுதும் என் குலதெய்வமாக வணங்கிக் கொண்டு வருகின்றேன்
என்று இது ஒன்றை மட்டும் உரிமை கொள்கின்றோமே தவிர வேறு எண்ணுகின்றோமா?
ஆனால், அந்த உயர்ந்த (தெய்வ)
குணத்தை நாங்கள் பெறவேண்டும். நம்மால் பிறரின் தீமைகள் நீங்க வேண்டும். தீமையான உணர்வுகள்
எங்களை சாரக் கூடாது என்று எண்ணி எடுப்பதற்குத்தான் ஆலயத்தை வைத்துள்ளார்கள்.
பல கோடிச் சரீரங்களில் எடுத்துக்
கொண்ட வினைக்கு நாயகனாக மனித உடல் பெற்ற பின் மனிதனிலிருந்து தீமைகளை வென்று உணர்வினை
ஒளியாக மாற்றி விண் சென்றவன் காட்டிய அந்தக் காவியத் தொகுப்புதான் ஆலயத்தின் முகப்புகளில்
விநாயகரைப் போட்டுக் காட்டியது – “விநாயக தத்துவம்”.
முதலில் விநாகரைப் பார்க்கப்படும்
பொழுது அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நம் ஆன்மாவைத்
தூய்மைப்படுத்த வேண்டும்.
தூய்மைப்படுத்திய பின் மலரைப்
போன்ற மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்களைப் பார்ப்போருக்கெல்லாம்
அந்த மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும்
பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
இப்படி எண்ண வேண்டும். இந்த வினையை நமக்குள் சேர்த்து அதிகமாகி விட்டால் இதுவே கணங்களுக்கு
அதிபதியாகின்றது.
அப்பொழுது அந்த உயர்ந்த நிலைகள்
எதை அந்த விண்ணை நோக்கி எண்ணினோமோ நமக்குள் கணங்களுக்கு அதிபதியானால் நாம் இந்தப் புவியின்
ஈர்ப்பிற்கு வர மாட்டோம்.
எதைக் கூர்மையாக எண்ணினோமோ
அதனின் வலுவாக நமக்குள் பெற்ற பின் நம் ஆன்மாவில் அது பெருகி உயிர் நம்மை அங்கே விண்ணுக்கே
அழைத்துச் செல்லும்.
இதிலே உள்ளது காந்தம், அதிலே
உள்ள காந்தம். அந்த உணர்வின் தன்மை வலிமை பெறும் பொழுது இதைத் தன்னைப் போலவே அது அழைத்துச்
செல்லும்.
அப்படிச் சென்றவர்கள் தான்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் விண் சென்ற துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்.
ஆனால், இப்பொழுது எங்கே போகின்றோம்..,?
உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை நாம் எங்கே செலுத்துகின்றோம்..,? உடலை விட்டுப்
பிரிந்த ஆன்மாக்களை உந்தி அங்கே விண்ணுக்குச் செலுத்துவது என்றால் கஷ்டமாக இருக்கின்றது.
பல நூறு பேரைக் கொண்டு பௌர்ணமி
அன்று கூட்டுத் தியானத்தில் கொண்டு வரும் பொழுது சிலருடைய உணர்வுகள் எப்படி இருக்கின்றது?
நாம் இங்கிருந்து விண்ணுக்கு
உந்திச் செலுத்துவோம்.
ஆனால், அந்த வீட்டைச் சார்ந்த
அவர்கள் சாங்கிய சாஸ்திரங்களைச் செய்து அந்தச் சாமபலைக் கொண்டுபோய்க் கரைத்து பாவத்தையெல்லாம்
போக்குகின்றோம் என்பார்கள்.
அடுத்து மந்திரம் சொல்பவரைக்
கூப்பிட்டு ஆடு மாடு சேவல், கோழி ஏதாவது இரண்டை அவருக்குக் கொடுத்து, குடை, காய்கறி
என்று இறந்தவர் சாப்பிடக்கூடிய பல பொருள்களை வைத்து இதையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்தால்
சொர்க்கம் போகிறார், அவர் பாவங்கள் போகிறது என்று செய்து கொண்டுள்ளார்கள்.
ஒரு சிட்பண்டு நடத்தியவர்
உடலை விட்டுப் போய்விட்டார். அதற்காக வேண்டி என்ன செய்தார்கள்?
ஒருவருக்கு வீடு, ஒருவருக்கு
மாடு, ஒருவருக்குச் சொந்த இடம் என்று கொடுத்தார்கள். இப்படிக் கொடுத்த பின் அவர் செய்த
பாவமெல்லாம் இதிலே போய்விடுகிறது. அவர் மோட்சத்திற்குப் போகிறார் என்று செய்தார்கள்.
இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்,
பாவத்தை அவர்கள் வாங்கிக் கொள்கின்றார்களாம். பாவத்தை வாங்கி அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி
அவர்களிடம் இருகின்றதாம்.
இப்படியெல்லாம் சாங்கியங்களைச்
செய்து மனிதனுடைய நிலைகளை மீண்டும் இந்தப் பூமியில் மனித உணர்வுடன் வாழ்வதற்குண்டான
நிலைகளைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்களே தவிர ஞானிகள் காட்டி நிலையைத் துளி கூட
நாம் பெறுவதற்குண்டான தகுதியைக் கூட இல்லாமல் செய்து விட்டார்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல
ஒழுக்கங்களும், தெய்வீக அன்பும், தெய்வீக அருளும், தெய்வீகச் சக்தியும் வளர்க்கச் செய்வதற்குத்தான்
கோவில்.
ஆனால், கோவிலுக்குச் சென்றால்
அப்படி எண்ணுகின்றோமா..,?
கோவிலில் மணி அடித்ததும் என்ன
செய்கின்றார்கள்?
சாமியைப் பார்க்க வேண்டும்
என்ற நிலையில் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு இருப்பார்கள். “சாமியைப் பார்க்க
விடு.., ஏனய்யா.., எருமை மாடு மாதிரித் தள்ளுகிறாய்..,?” என்று அவர் சொல்வார்.
ஆக, அப்பொழுது அங்கே அந்த
எருமை மாடு உள்ளுக்குள் வந்துவிடுகின்றது. ஏனென்றால், எருமைக்குப் புத்தி இருக்காது.
“நீ ஏனய்யா.., எருமை மாடு
மாதிரி மறைத்துக் கொண்டிருக்கின்றாய். உன்னைத் தள்ளாமல் அப்புறம் என்ன செய்வது..,?”
என்று இவர் பதிலுக்குச் சொல்வார்.
“உனக்குக் கிடைக்காது எனக்குத்தான்
கிடைக்கும்” என்று இப்படித்தான் சாமி கும்பிடுகின்றோம்.
கோவிலுக்குள் இதுவெல்லாம்
நடக்கின்றது, பார்க்கலாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள்.
தீப ஆராதனை காண்பிக்கும் பொழுதும்
பார்க்கலாம். அத்தனை தலையும் ஆடும். இங்கே ஒரு முட்டு, அங்கே ஒரு முட்டு சாமியைப் பார்ப்பதற்குள்
இத்தனை இடிபாடு.
அந்தத் தெய்வீக ஞானத்தைப்
பெறும் ஏக்கம் அங்கே வருகின்றதா..,? என்றால் இல்லை. சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
அந்தச் சிலையைக் காட்டி தெய்வ
குணத்தை ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று ஞானிகள் படைத்துக் காட்டியுள்ளார்கள்.
தீப ஆராதனை காட்டும் பொழுது
அங்கே இருட்டிற்குள் மறைந்துள்ள அனைத்துப் பொருள்களும் தெரிகின்றது. மலர் தெரிகின்றது,
கனிகள் தெரிகின்றது. நறுமணம் ஊட்டும் அனைத்தும் தெரிகின்றது.
அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?
வாழ்க்கையில் பொருளறிந்து
செயல்படும் இந்தத் திறன் நாங்கள் பெறவேண்டும். மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், கனியைப்
போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும் சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெறவேண்டும்
என்று எண்ணுதல் வேண்டும்.
இந்த ஆலயம் வருவோர் அனைவரும்
இதையெல்லாம் பெறவேண்டும். எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் வாழ்க்கையில் இனிமை பெறவேண்டும்.
இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, மகிழ்ந்து வாழும் அருள்
சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்?
இப்படி நாம் யாராவது எண்ணுகின்றோமா..,?
அந்தச் “சாமியிடம் சக்தி இருக்கின்றது…,”
என்ற இந்த நம்பிக்கையைத் தான் ஊட்டியுள்ளார்கள்.
எண்ணத்தால் அதை நமக்குள் எடுத்தால்
உயிர் அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றது என்ற நிலையை நாம் மறந்து விட்டோம்.
ஆகவே, கோவிலுக்குச் சென்றால்
நமக்குள் அந்த உயர்ந்த தெய்வீகக் குணத்தை எடுத்து நம்மைச் சார்ந்தோருக்கெல்லாம் அது
கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி.
யார் இப்படி நினைக்கின்றாரோ
அவரே உண்மையிலே பக்திமான் பக்தியிலே சிறந்தவர்.