யாம் கொடுக்கும் அருள்ஞான
உபதேசங்களை எல்லாம் கேட்பார்கள், படிப்பார்கள். ஆனால், ஆத்ம சுத்தி செய்ய “நேரமில்லை…,”
என்று சொல்லிவிடுவார்கள்.
எல்லா நேரத்திலும் நான் நல்லதையே
தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆக, ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்கு நேரம் இல்லை
என்று சுருக்கமாகச் சொல்கின்றார்கள்.
ஆனால், சில நேரங்களில் எப்படியோ
சங்கடம் வரப்படும் பொழுது இந்த ஆத்ம சுத்தி செய்வதற்கு “மனது வரமாட்டேன்…,” என்கிறது
என்றும் சொல்கின்றார்கள்.
இதையெல்லாம் முதலில் மறந்து
மாற்றிப் பழகுதல் வேண்டும்.
நம் கையில் மண்ணோ அல்லது ஒரு
அழுக்குப் பட்ட பின்பு அடுத்து “அப்படியே உணவைக் கையில் எடுத்து உட்கொள்வோமா..,?” உட்கொண்டால்
எப்படி இருக்கும்?
கையில் மண்ணைப் பிசைந்து வேலை
செய்கின்றோம், சில அசுத்தமான இடங்களில் வேலை செய்கின்றோம், சாயங்களோ மற்றவைகளையோ கையில்
எடுத்துக் கலக்கிப் பல வேலைகள் செய்கிறோம்.
ஆனால், இதையெல்லாம் கழுவாது
அப்படியே சாப்பாட்டைச் சாப்பிட்டால் என்ன ஆகும்?
இதைப் போன்று தான் நம் ஆன்மாவில்
நமது வாழ்க்கையில் நம்மையறியாது கேட்டுணர்ந்த பல நிலைகள் “இந்த வாழ்க்கைக்கு அது பயன்பட்டாலும்”
அந்தத் தீமையான உணர்வுகள் நம்மிலே விளைந்திடாது தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
அந்தத் தூய்மையைப் பெறுவதற்குத்தான்
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரும் பொழுது உங்களுக்குள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
உங்கள் உடலில் மறைந்துள்ள
ஒவ்வொரு நல்ல உணர்வுகளையும் தட்டியெழுப்பிச் செடிகளுக்கு உரம் போடுவது போல் உங்கள்
நல்ல உணர்வுகளுக்குள் அருள் உபதேசங்களை ஊட்டச் சக்தியாகக் கொடுக்கின்றோம்.
ஆகவே, நீங்கள் ஒவ்வொரு நாளும்
உங்கள் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். சிறிது நாள் பழகிக் கொண்டால் தன்னாலே
வரும். இதில் ஒன்றும் சிரமமில்லை.
நீங்கள் தொடர்ந்து இந்த ஆத்ம
சுத்தியைச் செய்வீர்கள் என்றால் உங்கள் எண்ணம் உங்களை மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள்
அழைத்துச் செல்லும். இந்த மனித வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு வாழச் செய்யும்.
உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை
அகற்றச் செய்யும். உங்கள் பேச்சும் மூச்சும் உலகைக் காக்கச் செய்யும்.
https://wp.me/P3UBkg-1rP
(தியானம் செய்யும் முறை)