ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 13, 2016

கண் பார்வை, கண் திருஷ்டி – கண் பார்வையின் உணர்வுகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவர் வேதனைப்படும் பொழுது உற்றுப் பார்த்தால் பெரியவர்களுக்கு ஏதோ ஒரு விதமான வெறுப்பு வருகின்றது.

ஆனால், வேதனையுடன் கைக் குழந்தையைப் பார்த்தால் அதற்கு ஒன்றுமே தெரியாது. வேதனையுடன் இருப்பவர் பார்த்தால் குழந்தைக்கு எரிச்சல் வரும். கை கால் குடைச்சல் வரும்.

சில கல்யாண வீட்டுகளில் பார்த்தால் தெரியும். குழந்தை இல்லாதவர்கள் சிலர் வருவார்கள். குழந்தையின் ஏக்கத்தில் இதைப் பார்ப்பார்கள்.

குழந்தை அழகாக இருந்தால் போதும். அந்த உணர்வுடன் ஆசையாகத் தூக்குவார்கள். பார்த்து அந்த உணர்வுடன் (தனக்குக் குழந்தை இல்லை என்ற வேத்னை) குழந்தையைக் கையில் தூக்கினால் போதும்.

அந்தப் பார்வையைப் பார்த்தவுடன் கைக் குழந்தை “சில்.., சில்.., சில்..,” என்று அழுக ஆரம்பிக்கும்.

குழந்தையின் ஆசையில் அந்த ஏக்கத்தின் தன்மை கொண்டு “தனக்குக் குழந்தை இல்லையே...,” என்ற வேதனையான பார்வை பட்டவுடன் அந்தக் குழந்தை நிச்சயம் அழுகும்.

இதைத் தான் “கண் பார்வை, கண் திருஷ்டி, ஓமழிப்பு” என்று சொல்வார்கள்.

நாம் எதை எண்ணிப் பார்க்கின்றோமோ அதனின் உணர்வு தன் கண் பார்வை பிறருடைய தீமைகளை உருவாக்கும். நம் நினைவின் ஆற்றல் அதைச் செய்யும்.

அதே சமயத்தில் நாம் வெறுப்பும் வேதனையும் கொண்டு ஒரு பொருளைப் பார்த்தால் பொருளின் தரத்தை நாம் உணர முடியாது.

நாம் வெறுப்போ கோபமோ அடைந்த பின் அந்த உணர்வின் நினைவு கொண்டால் தரமான ஒரு பொருளையோ, துணிமணிகளையோ பார்த்துத் நிச்சயம் தேர்ந்தெடுக்க முடியாது.

காரணம் நம்முடைய கண் பார்வையின் உணர்வுகள் எதுவோ அதற்குத் தக்கத்தான் அந்தப் பொருளின் தரத்தை நமக்குள் தெளிவாக்கும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்தல் நல்லது.

நம் கண்களின் கருவிழிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் என்று இணைத்துக் கொண்டால் ஏற்கனவே நம் கருவிழிகளில் பதிவான தீமையான விஷமான உணர்வை மாற்றி நம்மைத் தெளிந்த நிலைகளில் இயக்கச் செய்யும்.

நம் பார்வையால் நாமும் தெளிந்த நிலைகளில் செயல்பட முடியும், மற்றவர்களுக்கும் நல் ஒளியின் அலைகளாக நம்மிலிருந்து படரும்.