இந்த உடலை
உருவாக்கியது யார்? உயிரான ஈசன் தான். அவனின் பிள்ளை தான் இந்த உடல். இந்தப்
பிள்ளை யார் என்று நீ சிந்தித்துப் பார்.
அவன் என்னை உருவாக்கினான்.
அவனை அறியும் பருவம் பெற்ற இந்த மனித உடலை உருவாக்கினான்.
அவன் ஒளியாக
இருக்கின்றான். அவனுடன் ஒன்றி ஒளியாக மாற்றிடும் உணர்வின் நிலைகளை நீ உனக்குள் எவ்வாறு
செய்ய வேண்டும்? என்று இதைத் தெளிவாக உணர்த்தியவன் அகஸ்தியன்.
இந்தப் பூமியில் முதல்
முதலில் நஞ்சினை வென்று பேரொளியாக மாற்றிடும் ஆற்றலைப் பெற்றவன் அகஸ்தியன். வானுலக
ஆற்றலை நுகர்ந்தான். அதிலிருந்து வரும் கடும் மின்னல்களை அகஸ்தியன் உற்றுப்
பார்த்தான்.
சில நேரங்களில்
நாம் மின்னலை உற்றுப் பார்த்தால் நம் கண்களையே பறித்துவிடும். இதைப் போல வானுலக
நிலைகளை உற்றுப் பார்க்கும்படி என்னிடம் குருநாதர் சொன்னார்.
மின்னல்கள்
தாக்கப்படும் போது அதிலே நஞ்சின் கதிரியக்கப் பொறிகள் எப்படித் தாக்குகின்றது? அதை
உற்றுப் பார்த்தால் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது?
இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்
குருநாதர்.
அக்காலங்களில் தாய் கருவிலிருக்கும்போது
பெற்ற ஆற்றலால் விஷத்தை ஒடுக்கிடும் நிலை பெற்றான் அகஸ்தியன். அதன் வழி கொண்டு மின்னலின்
உணர்வுகளை அவனால் பெற முடிந்தது.
நட்சத்திரங்கள் மின் கதிரின்
இயக்கங்கள் கொண்டது. அதே சமயத்தில் விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள் கொண்டது.
ஒரு நட்சத்திரம் வெளிப்படுத்தும்
துகளும் மற்றொரு நட்சத்திரம் வெளிப்படுத்தும் துகளும் சந்தர்ப்பத்தால் மோதும் போது
தான் பொறிகள் அதிகமாகக் கிளம்பி விரிவடைந்து சிதறுகின்றது.
அந்த மின் துகள்கள் சிதறுண்டு
செல்லப்படும் பொழுது அதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அதனதன் துணுக்குகளாக
மாற்றுகின்றது.
அது மாற்றி மற்றதோடு மோதி
பல பல உணர்வுகளாக எப்படி மாற்றுகின்றது என்பதை அகஸ்தியன் தெளிவாகக் காணுகின்றான். ஏனென்றால்
அவன் தாயின் கருவில் இருக்கும் பொழுது நஞ்சை ஒடுக்கிடும் ஆற்றல் பெற்றவன்.
வானுலக உணர்வின் தன்மை மின்னலின்
கதிரியக்கங்களை நுகர்கின்றான். இந்த மின்னல் எங்கிருந்து உருவாகின்றது என்பதைக் காணுகின்றான்.
பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து
கவரும் விஷத் தன்மை கொண்டு அது சுழலும் நிலைகள் தூசிகளாகி ஒன்றுடன் ஒன்றைச் சூரியன்
கவர்ந்து இணைக்கப்படும் பொழுது மோதல்கள் எப்படி வருகின்றது?
அதனால் பல சிதைவுகள் எப்படி
வருகின்றது? இதனின் அணுக்களின் உணர்வுகள் எப்படி மாறுகின்றது என்பதை குருநாதர் தெளிவாக்குகின்றார்.
அப்பொழுது “மின்னலைப் பார்..,” என்று சொன்னார் குருநாதர்.
“என் கண்கள் போய்விட்டால் என்ன செய்வது..,?” என்று கேட்டேன்.
அப்புறம் அதற்குண்டான நிலைகளைச் சொல்லித் தெளிவாகக் காட்டினார் குருநாதர். மின்னலுக்குள்
இருக்கும் சில அற்புதங்களும் சில நிகழ்ச்சிகளும் எவ்வாறு நிகழ்கிறது என்று காட்டினார்.
குருவின் வலுக் கொண்டு மின்னலை நான் உற்றுப் பார்க்கப்படும்போது என்னை ஒன்றும்
அது பாதிக்கவில்லை.
அன்று அகஸ்தியன் இதைப் போன்றுதான்
விண்ணை உற்று நோக்கிக் கடும் விஷத் தன்மையை அடக்கினார். அதனை ஒளியின் அணுவாக மாற்றினார்.
உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியின் கதிர்களாக மாற்றித் “துருவ நட்சத்திரமாக” ஆனார்
அகஸ்தியர் என்பதைத் தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.
அந்த அகஸ்தியனைப் போன்றே நாமும்
ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்பதே குரு காட்டிய அருள் வழி.