ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2016

நல்லவருக்குத் தான் துன்பம் அதிகமாக வருகிறது, ஏன்? நல்லதை எப்படிக் காத்துக் கொள்வது?

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார் என்றால் பாசத்தால் உற்றுப் பார்க்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் பாச உணர்வுகளில் இந்த வேதனை கலந்துவிடுகின்றது.

இரக்கத்துடன் அவருக்கு நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள் நல்ல உணர்வுகளுக்குள் இந்த வேதனை கலந்தபின் ஒரு பாலில் பாதாமைப் போட்டபின் ஒரு துளி விஷத்தைக் கலந்து குடித்தால் மயக்கம் வருவது போல் ஆகிவிடுகின்றது.

இன்று மற்றவருக்கு இவ்வாறு உதவி செய்துவிடுகின்றோம். சிறுகச் சிறுக உங்களுக்குள் இது விளைந்த பின் உங்களுக்குத் தலைவலி மேல் வலி வரும்.

அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் இருக்கப்படும் பொழுது நீங்கள் எதையாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சென்றால் நீங்கள் தரம் பார்த்து அவைகளை வாங்க முடியாது.

உங்களுக்குள் அந்த வேதனைப்பட்ட சோர்வான நிலைகள் கண்டு அந்தக் கலரும் பொருளும் தெரியும். அந்த மாதிரிப் பொருளை வாங்கிக் கொண்டு வந்துவிடுகின்றோம். ஏனென்றால், நமக்கு அது நல்ல சரக்காகத் தெரியும்.

ஆனால், வாங்கிய பொருளைக் கொண்டு வியாபாரத்திற்கு வந்தாலோ வியாபாரம் ஆவதில்லை. பார்த்த பின் “என்ன இந்த மாதிரிப் பொருளை வைத்திருக்கின்றீர்கள்..,?” என்று கேட்பார்கள்.

நாம் நல்ல சரக்கு என்று சொல்வோம். ஆனால், அவர் உணர்விற்கு அது மட்டமாகத் தெரியும்.

மட்டமான சரக்கு வைத்திருக்கின்றார்கள், அதை வாங்கிச் செல்கின்றார்கள், நான் நல்ல சரக்கை வைத்திருக்கின்றேன் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று நாம் சொல்வோம்.

ஏனென்றால், இந்த உணர்வின் தன்மை எதுவோ கண்களில் இந்த அலைகள் வரும். ஒரே கண்கள் தான்.

உங்கள் கருவிழியைப் பாருங்கள். சோகமாக இருக்கும் பொழுது கண்ணின் ஒளிகள் எப்படித் தெரிகின்றது? கோபமாக இருக்கும் போது கண்ணின் ஒளிகள் எப்படி இருக்கின்றது? ஒரு சந்தோஷமாக இருக்கும்போது மகிழ்ச்சியின் நிலைகளில் கண்களின் ஒளிகள் எப்படித் தெரிகின்றது?

இந்த உணர்வின் அலைகள் எந்த அலைக்குப் பாய்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். தெரியாமல் இல்லை.

 ஆனால், இதைப் போன்ற இந்த உணர்வுகளை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

நல்லதை எண்ணிச் செயல்படும் பொழுது நல்லதையே தான் எண்ணுகின்றோம். நல்லவருக்குத் தான் துன்பம் அதிகமாக வருகின்றது. பாசத்தால் பரிவால் பிறருடைய கஷ்டங்களை எடுத்துக் கொள்கின்றார். ஆனால், அதைத் துடைக்கத் தெரிவதில்லை.

எல்லா அணுக்களிலும் இந்தத் தீமைகள் சேர்ந்துவிடுகின்றது. அப்பொழுது வியாபாரத்திலும் மந்தமாகின்றது. ஒரு சரக்கைத் தரமான நிலைகளில் பாதுகாக்க முடிவதில்லை.

அப்படிச் சங்கடமான பின் என்ன நடக்கும்?

முதலில் வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பார். ஆனால். இப்பொழுது அந்த வீட்டைச் சுத்தப்படுத்தக்கூட மனது வராது. இருண்ட நிலை ஆகிவிடும்.

இப்படிப் பலருக்கு உதவி செய்து சங்கடமான நிலைகள் வளர்ந்து கொண்டபின் அவருக்குள் அழுக்கான பின் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றோ மற்ற பொருள்களைச் சீராக வைக்க வேண்டும் என்றோ அதெல்லாம் இருக்காது.

காரணம் அவருடைய தவறல்ல. இவர் நுகர்ந்த உணர்வுகள் அதனின் இயக்கமாக மாற்றும்.

ஒவ்வொரு நேரத்திலேயும் நாம் கையில் ஏதாவது ஒரு பொருளை எடுத்தோம் என்றால் கையைக் கழுவுகின்றோம். அதிகமான வேலை செய்து உடலில் வியர்வை வந்தால் குளிக்கின்றோம். வியர்வை அதிகமாகி துணிகளில் நாற்றமானால் உடைகளையும் மாற்றுகின்றோம்.

உதாரணமாக, நீங்கள் சுவாசிக்கும் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் மணமாக எப்படிப் பரவுகின்றது என்று பாருங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சாதாரணமாக (எப்பொழுதும் போல்) ஒரு சட்டையைப் போட்டுத் தனியாக வைத்துவிடுங்கள்.

அதே சமயத்தில் குளித்துவிட்டு வந்து வேறு ஒரு சட்டையைப் போட்டுச் சிறிது நேரத்தில் கழட்டிவிடுங்கள். அதைத் தனியாக வைத்துவிடுங்கள்.

அதே மாதிரி ஒரு மணி நேரம் தியானத்தைச் செய்து போட்டிருக்கும் அந்தச் சட்டையைக் கழட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்றுக்கும் வாசனைகள் வித்தியாசத்தைக் காணலாம். காரணம் அந்த உயர்ந்த மகரிஷிகளின் நறுமணத்தை எடுக்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் அந்த நறுமணங்கள் வரும்.

ஆக, இதையெல்லாம் தூய்மைப்படுத்தியவர்கள் அந்த மகரிஷிகள். அவர்கள் தன்னில் தான் கண்டறிந்த உணர்வுகள் நமக்கு முன் பரவியிருப்பதை நீங்கள் நுகர்வதற்காக இதைச் சொல்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி அந்த மகரிஷிகளின் நறுமணங்களைச் சுவாசித்தால் உங்கள் ஆன்மாவில் அது பெருகி உங்கள் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கும்.

ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் சக்திகள் பெருகும் போது மிகப்பெரிய பாதுகாப்புக் கவசமாக அது மாறும். ஒரு அரணைப் போன்று நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது எத்தகைய தீமையான உணர்வுகளும் நம் ஆன்மாவிற்குள் ஊடுருவ முடியாது. நம் நல்ல குணங்களைக் காக்க முடியும். மன பலம் கிடைக்கும். நன்மைகள் செய்யத் துணிவு கிடைக்கும். நம்மை மகிழ்ந்து வாழச் செய்யும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.