ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2016

எண்ணியவுடனே எதுவும் நடக்குமா?

மனிதன் “நீ எண்ணிய உணர்வு தான் உன்னை இயக்குகின்றது” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது.

ஆக, அந்த உணர்வில் எதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதன் வழியில் நம்மை அழைத்துச் செல்கிறது. இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

எண்ணியவுடன் உடனே எதுவும் நடக்குமா..?

எண்ணியவுடனே விஷத்தின் தன்மை இயக்கும். எண்ணியவுடன் உணர்வின் இயக்கம் இருக்கும்.

ஏன்..? அந்த உணர்வின் வலு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். என்னை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று எண்ணி அதை வலுக் கூட்டிச் செய்ய முடியாதா..,? செய்ய முடியும்.

ஆனால், நாம் இதைச் செய்கின்றோமா? யாருமே இதைச் செய்வதில்லை.

ஏனென்றால், ஒரு வித்தை நாம் ஊன்றினால் அது பல வித்துகளாக உருவாகும். இதைப்போலத்தான் அந்த மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்கள் உடலுக்குள் படரச் செய்யும்போது தீமைகள் உங்களுக்குள் நாடாத நிலைகளைச் செயல்படுத்தும்.

“என்ன சாமி சொன்னார் நடக்கவில்லை” என்று நீங்கள் திரை மறைவு போட்டீற்கள் என்றால் அதுதான் விளையும்.

ஏனென்றால் நான் கொடுத்த வித்திற்கு அதற்குண்டான நிலைகளை நீங்கள் செயல்படுத்துவதில்லை என்றுதான் பொருள்.

காரணம், வயலிலே நல்ல வித்தைப் போட்டுவிட்டால் அதற்கு வேண்டிய தண்ணீரும் அதற்குண்டான உரமும் அதற்குண்டான பாதுகாப்பும் பார்த்தால்தான் அதனுடைய பலனை அது கொடுக்க முடியும்.

இதைப்போல உயர்ந்த ஞானியின் சக்திகளை நீங்கள் பெறவும், அது உங்கள் ஆன்மாவில் கலக்கவும் அதன்வழி கொண்டு நீங்கள் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அறிந்து கொள்வதற்குத்தான் இவ்வளவு பெரிய நிலைகளைச் செயல்படுத்துவது.

ஏனென்றால் அடிக்கடி உங்களுக்குள் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நாம் கொண்டு போவது எதுவும் இல்லை.

நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? நம் உடலைக் கொண்டு போகின்றோமா? அல்லது இந்த உடலால் தேடிய செல்வத்தைக் கொண்டு போகின்றோமா?

அதே சமயத்தில் நான் எல்லோருக்கும் நன்மை செய்தேன் பேரும் புகழும் பெறுகின்றோம். நன்மை செய்யும் போது வேதனை என்ற உணர்வை வளர்க்கும்போது நோயாகி அப்புறம் என்ன செய்கின்றோம்?

கடைசியில் நோயாகி நான் இத்தனையும் செய்தேனே என்று பேயாகி யார் மீது பற்று வைத்திருக்கின்றோமோ அந்த உடலுக்குள் போகும். அந்த உடலுக்குள் போய் இதே தீவினையை உருவாக்கி கடைசியில் அந்த வேதனை என்ற உணர்வுக்குத் தக்கவாறு மனிதனல்லாத உருவைத்தான் உருவாக்கும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தூண்டுகின்றோம்.

ஏனென்றால், குருநாதர் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார், உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கும்படிச் சொன்னார். கோவிலைச் சுத்தப்படுத்தும்படிச் சொன்னார்.

அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.