ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2015

அவனன்றி அணுவும் அசைவதில்லை...! எப்படி..?

"" என்பது பிரணவம்.

"ஓ..," என்று நமக்குள் இயங்கிக் கொண்டிருப்பது நமது உயிர். ஆகவே "ஓம் ஈஸ்வரா"..., நாம் எதை எண்ணுகின்றோமோ, “ம்..” என்று என் உடலாக உருவாக்கும் சக்தி கொண்டது ஈஸ்வரா - உயிர்.

ஆகவே, ஜீவனாக்கிக் கொண்டிருக்கும் நமது உயிரைத்தான் "ஓம் ஈஸ்வரா" என்பது. தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்,

எண்ணிய உணர்வினுடைய நிலைகள் நம் உடலாக்கிய பின், "குருதேவா" நமக்குள் எடுத்துக் கொண்டிருக்கின்றோமோ, அந்த உணர்வு குருவாக இருந்து நம்மை இயக்கிக் காட்டுவதும் நம் உயிரே - குரு.

நாம் எதை எண்ணி நமக்குள் உடலாகச் சேர்த்திருக்கின்றோமோ, மறுபடி அதே குணத்தை எண்ணும் பொழுது அது குருவாக இருந்து எந்த குணமோ அந்த குணத்திற்குத்தக்க நமக்கு வழி காட்டும்.

அதுதான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்பது.

நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். அதில் இன்று நாம் அரசர்கள் காட்டிய வழிகளிலேதான் வாழ்ந்து வந்துகொண்டிருக்கின்றோம். அந்த ஞானிகள் காட்டிய வழியில் நாம் வாழவில்லை.

நாம் சாப்பாடு சாப்பிடுகின்றோம் ஊறுகாயைக் கொஞ்சம் தொட்டுச் சாப்பிடுகிற மாதிரி லேசாகத்தான் காட்டி ஞானிகளைப் பற்றி சொல்லி இருக்கின்றார்கள்.

பக்தி மார்க்கங்களில் கடவுள் நமக்குக் கொடுப்பார் என்ற நிலைகளில் தான் நாம் இருக்கின்றோமே தவிர நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருப்பது உயிர் என்ற நிலைகள் மறந்துவிட்டது.
இந்த உடலுக்குள் இருக்கும் ஈசன் வெளியேறிவிட்டால்
இந்த நீசமான உடலுக்கு வேலையே இல்லை.

ஆனால், நீசமான உடலுக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோமே தவிர நமக்குள் ஈசனாக இருக்கும் உயிரை நாம் மதிக்கவே இல்லை.

நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனும் நமது உயிரே. நாம் எண்ணுவதை நமக்குள் படைத்துக் கொடுப்பவனும் பிரம்மமாக இருப்பவனும் நமது உயிரே.

நமக்குள் சிருஷ்டித்த நிலைகளை, விளைந்த நிலைகளை அவனுடன் அணைத்துச் சென்று அவனுடன் இயக்கமாக மாற்றிக் கொள்பவனும் அவனே.

ஆகவே, அவனன்றி அணுவும் அசைவதில்லை
இவ்வாறு தான் ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

ஆனால், நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்? "அவனன்றி அணுவும் அசைவதில்லை" என்று எங்கேயோ கையைக் காட்டிக் கொண்டிருக்கின்றோம்.

நமக்குள் ஒரு அணு அசைகிறது என்றால் அவனன்றி அணுவும் அசைவதில்லை. நமக்குள் இந்த உயிர் தான் இத்தனை நிலைகளையும் இயக்குகின்றது.

நாம் இதையே அறியமுடியவில்லை என்றால் அங்கே எங்கே எதை அறியப்போகின்றோம்?

நமக்குள் ஆண்டு கொண்டிருப்பவன் அவன். "அவன் இல்லை என்றால் அங்கு அணு அசையுமோ?" என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். இன்று நாம் "அவன்" என்று எங்கேயோ காணுகின்றோம்.

பிரபஞ்சத்தில் உள்ள, இந்த சூரியன் அழிந்துவிடும். ஆனால் நம் உயிர் அழிவதே இல்லை. இந்த உயிர் அழிகிறதா? என்று நீங்கள் நெருப்பிலே தூக்கிப் போட்டுப் பாருங்கள்; எந்த திரவத்தையும் ஊற்றிப் பாருங்கள்.
உடலுக்குள் இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?
நெருப்பில் பட்டவுடனே உணர்வுகள் அனைத்தும் கருகி விடுகின்றது.
விஷத்தின் தன்மை அதிகமாகும் பொழுது நெருப்பாக மாறுகின்றது.

ஆதியிலே விஷத்தின் தன்மை அதிகமாகி சாந்தமான நிலைகளில் மோதும் பொழுது தான் வெப்பம் உருவாகின்றது. அந்த வெப்பத்தின் தன்மை தாங்காது ஓடும்பொழுது தான் ஈர்க்கும் காந்தமாகின்றது.

அதைபோலத்தான் நஞ்சின் தன்மை வரும்பொழுது அழுத்தமாகும் பொழுது திரவகமாகின்றது. திரவகத்தை ஊற்றப்படும்பொழுது சதைகளை வேக வைக்கின்றது.

இதைப்போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இந்த நஞ்சின் தன்மை சுடர்விடப்படும் பொழுது நெருப்பாகின்றது. அந்த நெருப்பின் தன்மை நமக்குள் வரும் பொழுது விஷத்தின் தன்மை நம் உணர்வை அழிக்கின்றது.

ஆக விஷம் அதிகமாகிவிட்டால் ஆரம்ப அணுவின் தன்மை எப்படி கொதிகலனாக ஆனதோ அதைப்போல நாம் நஞ்சான நிலைகளாகிவிடுவோம்

தீக்குள் பட்டவுடனே அந்த நெருப்பு உயிரை வேக வைப்பதில்லை. ஆனால் அதே சமயத்தில் உணர்வின் எண்ணங்களை அது செயலற்றதாக மாற்றுகின்றது.

நெருப்பின் தன்மை அதிகமாக்கப்படும் பொழுது "" என்ற அலறலும், அதனைத் தாங்கிக்கொள்ளும் நிலையும், அந்த நஞ்சின் தன்மை கொண்டு இந்த உடல் வெந்தபின் இந்த உயிருடன் அந்த உணர்வின் அலைகள் செயலற்றதாகின்றது.
          
ஆகவே, அந்த எரிச்சலூட்டும் உணர்வு உயிரான்மாவுடன் சேர்ந்தவுடன் அவர் மீது யார் பற்று கொண்டார்களோ இந்த உயிரான்மா அங்கே சென்று சாகாகலையாக, நஞ்சின் தன்மையை அங்கு உருவாக்கி, அந்த நெருப்பின் செயலையே அங்கும் உண்டாக்கும்.

ஆக இந்த உணர்வின் தன்மையை அங்கு உருவாக்கி அதனின் தன்மை சாகாக்கலையாக, நஞ்சின் தன்மை அதிகமாகி அவர்களை நெருப்பு இட்டு அழித்திடும் (தற்கொலை) அதே நிலையச் செய்யும்.

நெருப்பை இட்டு ஒரு பொருளை வேக வைக்கும் பொழுது அதற்குள் இருக்கும் பொருளின் சத்து வெந்துவிடுகிறது.

அதே போல வேதனைகளைக் கூட்டும் பொழுது மனிதனுக்குள் நஞ்சின் தன்மை அதிகமாகி மனித எண்ணங்களே மறைந்து தன்னையறியாது தனக்குள் எத்தனையோ வேதனையை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

இதைப்போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடவேண்டும்.

விடுபட்டு அந்த அருள் ஞானிகள் காட்டிய வேகாக்கலை அதாவது என்றும் அழியா ஒளியின் சரீரம் நாம் பெறவேண்டும். அதைப்பெற மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வலைகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஆனால், சாகாக்கலை என்று இன்று அரசாட்சி செய்கின்றேன். எல்லா சுகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையின் நிலைகளில் எண்ணி, தனக்கு எதிரியாக இருப்பவர்களை வேதனைப்படுத்தி அவர்களை வீழ்த்திவிட்டு
வலு கொண்ட நிலையில் தான் வாழவேண்டும்
என்ற நஞ்சின் நிலை கொண்டு சாகாக்கலையாக
இன்றும் அரசன் காட்டிய நிலைகளில் தான் நாம் வாழ்கின்றோம்.

இன்று நாம் ஒன்று செய்கிறோமென்றால் பிறரை நாம் காண்பதில்லை. எதிரியாக இருக்கின்றான் என்று அவர்களை அழித்திடும் நிலை தான் வருகின்றதே தவிர,
அவனிடம் இருக்கும் நஞ்சினை நீக்கும் நிலையோ,
நமக்குள் இருக்கும் நஞ்சுக்கு இடம் கொடுக்காத நிலையோ
இன்று நாம் பெறவில்லை.

நஞ்சினை ஒடுக்கும் நிலையாக அன்று வியாசகன் பிரகலாதன் கதையைக் காட்டியுள்ளார்.

வாழ்க்கையில் நம்மையறியாது வரும் தீமைகளை மடி மீது வைத்து நமக்குள் புகாதபடி
உயிரான ஈசனை வேண்டி அவனின் ஆற்றலைப் பெறும்போது
அவன் நமக்காக வேண்டி
பிரகலாதன் என்று அவனுக்காகத்தான்
அவன் அவதாரம் எடுத்தான்.

அதைப்போலத்தான் அந்த ஞானிகளின் உணர்வை நாம் எடுக்கும்பொழுது, நாம் தவறில்லாத நிலைகளில் இருக்கும் பொழுது அவனிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி வேண்டும் என்கிறபொழுது,
அவன் அந்த சக்தி பெற்று,
நமக்குள் இருக்கும் இரண்யனை (நஞ்சினை) வகுந்து,
நமக்குள் நல் உணர்வைக் காட்டும் வழியாக அது அமைகின்றது.

கதை என்று தான் நாம் பார்க்கின்றோம். ஆனால், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் நிலைகளுக்கு காவியங்களை எவ்வளவு அழகாகத் தீட்டியுள்ளார்கள்.

அவை அனைத்தையும் விடுத்துவிட்டு பொருளை இழந்துவிட்டு நாம் பொருளைத் தேடிக்கொண்டே இருக்கின்றோம். அவ்வளவுதான்.

ஆகையினால் அந்த ஞானிகள் காட்டிய அருள்வழிப்படி இப்பொழுது இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் நாம் நிச்சயம் மெய் உணர்வைப் பெறுவோம். மெய் ஞானிகளின் அருளைப் பெறுவோம் என்று உறுதிப்படுத்தி வாழ்வோம்.