ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 26, 2015

தீமைகளைப் பற்றாது தடுக்கச் செய்யும் கூட்டமைப்பு – கூட்டுத் தியானம்

அரசியலில் ஆனாலும் சரி, தெருவுக்குள்ளானாலும் சரி நாம் ஒருவருக்கொருவர் கோஷ்டிகளாக இணைந்து செயல்பட்டுத்தான் தனக்குள் காத்துக் கொள்ளும் நிலை வருகிறது.

இதைப் போன்றுதான் உயிரினங்களிலும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தன்னைக் காத்துக்கொள்ளும் நிலையாக ஒருங்கிணைந்து அதனின் வலு கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.

ஆனால், நாம் இப்பொழுது வாழ்க்கையில் எதை எடுத்துக் கொள்கிறோம்? இந்த வாழ்க்கையின் நிலைகளில் விருப்பு, வெறுப்பு என்ற நிலைகளில் யார் மேலாவது பகைமை கொண்டால் பழி தீர்க்க நமக்குள் ஒரு கூட்டமைப்பைச் சேர்த்துக் கொள்கிறோம்.
பழி தீர்க்கும் உணர்வாக
பல தொல்லைகளைக் கொடுக்கும் உணர்வேதான் வருகிறது.

குடும்பத்திற்குள் சிறு குறை ஏற்பட்டாலும், குடும்பத்திலுள்ளோர் நான்கு பேர் ஒன்று சேர்ந்து மற்ற இரண்டு பேரை மிரட்டுவார்கள். அங்கே பகைமை உணர்வுகளே வளர்ந்து கொண்டிருக்கும்.

இதைப் போன்ற நிலைகளையெல்லாம் நீக்க பல ஆயிரம் பேருடைய கூட்டமைப்பான உணர்வை உங்களுக்குள் பதியச் செய்து கூட்டுத் தியானத்தை அமைக்கின்றோம்.

நம் குடும்பத்திற்குள் ஆனாலும் சரி, தெருவுக்குள்ளானாலும் சரி, வாழ்க்கையில் எதுவானாலும் சரி
ஆயிரக்கணக்கானோரைக் கூட்டமைப்பாக வைத்து
அருள் மகரிஷிகளின் உணர்வை
உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கிறோம்.
                                          
கூட்டமைப்பாக அப்படிப் பதியச் செய்யும் மகரிஷிகளின் உணர்வின் சத்தை நீங்கள் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்துகொண்டால் அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வலு பெறுகிறது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால்
பாலின் தன்மை சுருங்கி விஷமாகிறது.
இதைப் போல உங்கள் உடலில் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மை ஒரு துளியாக இருப்பினும் பல ஆயிரம் பேரின் உயர்ந்த குணங்களின் மணங்களை ஒருங்கிணைத்து அதனுடன் அந்த மகரிஷிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து உங்களைப் பெறச்செய்கிறோம்.

ஏனென்றால், தீமைகளை நீக்கிய உணர்வின் சத்தை நினைவு கொண்டு நாம் கூர்ந்து அந்த உணர்வின் சத்தாகவும் உங்களுக்குள் விளையச் செய்து அந்த வித்தினை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.

இப்பொழுது நம் சகஜ வாழ்க்கையில் சண்டையிடுவோரையும், கஷ்டப்படுவோர்களையும் நாம் எண்ணும்போது அந்த உணர்வுகள் உடனே நமக்குள் வந்து இயங்குகிறது.

அதன் வழிக்கு நம்முடைய நல்ல குணங்களை மடக்கிவிடுகிறது, செயலற்றதாக்கிவிடுகிறது. அன்றைய நிலைகள் நமக்குள் சோர்வையும், சோகத்தையும் ஊட்டிவிடுகிறது.

ஏனென்றால், நாம் தவறு செய்யவில்லை என்றாலும் நம் உடலிலே பதிவு செய்த அந்த உணர்வுகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சூட்சமத்தில் நடக்கும் நிலைகளைக் கண் கொண்டு நேரடியாக உற்றுப் பார்க்கச் சொன்னார் குருநாதர்.

இவையெல்லாம் நமது குருநாதர் நேரடியாக எமக்குக் காட்டிய உணர்வின் தன்மைகள். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம்.

ஆகவே, உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்த அருள் உணர்வின் சத்தைப் பெற “ஈஸ்வரா” என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் அதைச் செலுத்துங்கள்.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்போது
அது உள் நின்று நமக்குள் தீமைகள் புகாது தடுத்து
நம் ஆன்மாவில் தெளிந்த நிலை பெறச்செய்து
நம்மைத் தூய்மைப்படுத்தும்.

தொடர்ந்து செய்து வந்தால் அன்றாட வாழ்க்கையில் வரும் சாப அலைகளையோ, வெறுப்பின் உணர்வுகளையோ, வேதனை அலைகளையோ உங்களுக்குள் வராது அதைப் பிளந்துவிடும்.

இவ்வாறு நீங்கள் ஒவொரு நிமிடமும் சுவாசித்தால் தீமைகளிலிருநு விடுபடவும் உங்கள் நினைவலைகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றிடச் செய்யும்.

ஆகவே, சப்தரிஷி மண்டலத்தைப் பற்றுடன் பற்றி இந்தப் பூமியில் வரும் தீமைகளைப் பற்றாது அதைத் தடுக்கச் செய்யும் கூட்டமைப்புதான் இந்தக் கூட்டுத்தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம் கொடுக்கும் அருள் சக்திகளை நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
மகரிஷிகள் கண்டுணர்ந்த
பேருண்மைகளையும் மெய் உணர்வுகளையும் நீங்கள் பெறவேண்டும்.
தீமைகளிலிருந்து மீண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்,
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும்
என்ற இந்த இச்சையில்தான் இதை உபதேசிக்கிறோம்.
எமது அருளாசிகள்.