Friday, June 19, 2015

இந்த உடலான உலகம் நமக்குச் சதமா..?

குருநாதர் சொன்னபடி நான் இமயமலையின் மீது போகும்பொழுது கேதார்நாத் என்ற இடத்துக்குச் செல்லும்படி செய்தார். கேதார்நாத்திற்குச் செல்லும் பாதையெல்லாம் கடும் பனிப்பாறைகள்.

சென்று கொண்டிருக்கும்போது ஒரு இடத்தை விட்டு மாறிய பின் வெறும் மலை போன்றுதான் தெரிந்தது. இதைக் கடந்து அந்தப்பக்கம் சென்று விட்டேன். அதைக் கடந்து போகும் வரையிலும் ஒன்றும் தெரியவில்லை.

அந்த இடமெல்லாம் பனிப்பாறை மூடியபடியே இருந்தது. அந்தக் காலத்தில் என்றோ அரசர்கள் போன இடம் போன்றிருந்தது. பரிவாரங்களோடு கிடந்தனர்.

அங்கே தங்க ஆபரணங்கள் ஏராளாமாகக் கிடந்தது.
குருநாதர் எந்த ஆசைக்கு வைத்தாரோ..?
ஏற்கனவே நிஜமாகவே இருந்ததோ..?
அல்லது என் கண்ணுக்குப் பார்த்து பணங்கள் வருவதற்காக நான் ஆசைப்படுவேன் என்பதற்காக வைத்தாரோ..? எனக்குத் தெரியவில்லை.

அதைப் பார்த்தவுடனே அந்த உண்மையின் உணர்வை அறிகின்றேன். அறிந்து கொண்டபின் என்ன செய்கின்றேன்? எதையாவது கொஞ்சம் எடுத்து சாம்பிளுக்குக் (sample) கொண்டு போகலாமென்றால் பயம். பணத்திற்கு ஆசைப்படுகிறேன் என்று சொல்லிவிட்டு எதையாவது செய்து விட்டால் என்ன செய்வது.

வெறும் வேஷ்டி ஒன்றுதான் கட்டியிருக்கின்றேன். போர்த்திக் கொள்வதற்குக் கூட ஒன்றும் இல்லை. குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்டால் குளிர் என்னைப் பாதிக்காதபடி பாதுகாத்துக் கொள்ளலாம்.

இருந்தாலும் அவர் சொன்ன முறைப்படி நான் செய்யும்பொழுது இதையும் பார்த்துவிட்டு கடந்து செல்கின்றேன். இதைக் கடந்து அடுத்த பக்கம் போகலாம் என்கிற வகையில் “சுடுதண்ணீர் இருக்கின்றது, அங்கே நீ போய் பாரப்பா..,” என்று குருநாதர் சொல்கின்றார்.

ஆனால், அங்கே போவதற்கு முன்னாடி என்ன ஆகிவிட்டது?

திடீரென்று நான் நடந்து வந்த பாதையில் இருந்த பனிப்பாறைகள் திடு.., திடு.., என எல்லாம் இடிந்து விழுந்துவிட்டது. வந்த பாதையையே காணோம். வேறு பாதை நமக்குத் தெரிந்தால் தானே திரும்பிச் செல்ல முடியும்.

பனிப்பாறைகள் விழுந்தவுடன் அப்பொழுது தான் சந்தேகம் வருகின்றது. அய்யய்யோ.., பிள்ளை குட்டிகளெல்லாம் என்ன ஆவது? நான் இதன் உள்ளே சென்றுவிட்டால் என்ன ஆவது? என்று நினைத்தேன்.

எதை? அப்பொழுது தான் அவர் சொன்னதையெல்லாம் விட்டுவிட்டு இந்த உடல் ஆசை வந்து விட்டது.

அப்பொழுது என் பையன் என்ன செய்கின்றான்? பெண்டு பிள்ளைகள் என்ன செய்கின்றது? என்ற உணர்வை நான் எடுத்தவுடனே கிர்ர்ர்..., என்று உடல் இறைய ஆராம்பித்துவிட்டது.

அந்தக் குளிர் என்னை வாட்ட ஆரம்பித்துவிட்டது. என் இருதயமே இறைகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிரே போய்விடும் போல் இருந்தது.

ஆனாலும் இதைத்தான் நான் பார்க்க முடிந்தது. அதை எண்ணினேன். ஆனால் இதை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை. “இறந்து விடுவோமோ..,” என்ற உணர்வு தான் வருகின்றது.

அப்பொழுது அந்த இடத்தில் குருநாதர் மீண்டும் காட்சி கொடுக்கின்றார்.
"மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்"

ஏனென்றால், இந்த இடத்தில் தங்கம் எல்லாமே இருந்தது. அவர்கள் உயிரைவிட்டுப் போனவுடன் என்ன இருக்கின்றது? சுகமாக வாழவேண்டுமென்றால் அதெல்லாம் இல்லையே.
அதுதான்
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்
                         
இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் மாறப் போகின்றாய். மறையப் போகின்றாய்.., நீ யாரைக் காக்கப் போகின்றாய்? என்று அப்படிக் கேட்கின்றார் குருநாதர்.
நேற்றிருந்தார் இன்றிருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம்
(இந்த உடலான உலகம்) உனக்குச் சதமா?
என்று வினாக்களை எழுப்புகின்றார்.

இப்பொழுது நீ (இறந்து) போய்விடப் போகின்றாய். இங்கிருந்து நீ எப்படிக் காக்கப் போகின்றாய்? ஆனால் பேயாகப் போய் மீண்டும் அவர்களை ஆட்டிப் படைக்கப்போகின்றாய். ஆனால், உள்ளத்தால் உன்னால் ஒரு உதவியும் செய்ய முடியாது என்று சொல்கின்றார்.

அதன்பிறகு அங்கிருந்து ஜோஸ்மெட் வந்த பிறகு, என்னிடம் ஒரு பத்து ரூபாய் இருந்தது. அங்கே உடனே போட்டோ எடுத்துக் கொடுக்கும் இடத்தில் போட்டோ எடுத்து போட்டோவையும் ரூபாயையும் ஒரு கவரில் வைத்து அஞ்சல் (post) செய்தேன்

என் பையன் தண்டபானி என்ன செய்கின்றான்? அவன் இங்கே ஒரே ஏக்கத்தில் நைனா.., நைனா.., என்று சொல்கின்றான். அவன் இரத்த இரத்தமாக இருந்து கொண்டு ரோட்டின் முச்சந்தியில் அழுது கொண்டிருக்கின்றான்

நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். ஏனென்றால் அப்பொழுது தான் இந்த உணர்வுகள் வருகின்றது.
அவனைக் காப்பதற்கு மாறாக
நீ எப்படி இருக்கின்றாய் என்று கேட்டார் குருநாதர்.

இதையெல்லாம் குருநாதர் காட்டியபின் தெரிந்து கொண்டவுடன் கீழே வந்து பணத்தையும் லெட்டரையும் அனுப்பிவைத்தேன். அனுப்பி வைத்தவுடன் இவர்கள் கடிதத்தைப் பிரித்துப் பார்க்கின்றார்கள்.

பத்து ரூபாய்க்கு அப்பொழுது பெரிய மதிப்பு. அதில் பத்து ரூபாய் இருக்கின்றது என்று. பார்க்கின்றார்கள்.

கடிதத்தில் பணத்தை நன்றாக மறைத்துத் தெரியாமல்தான் வைத்திருந்தேன். ஆனால், இடைவெளியில் பணத்தை எடுத்து விட்டார்கள். வெறும் லெட்டர் மட்டுமே இருக்கின்றது.

பணத்தைக் காணோம் என்று இங்கே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே விறகுக் கடையில் விறகு உடைப்பவர்கள்  கவரைக் கிழித்ததில் கீழே விழுந்து விட்டதா? அல்லது எங்கும் போய்விட்ட்தோ என்னமோ என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் இங்கே இமயமலையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். காசைக் காணோம் என்று என் மனைவி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அப்பொழுது, அந்தப் பதட்டமான உணர்வுகளுடன் அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் குளிர் என்னைப் பாதிக்கின்றது.  

நான் முதலிலே சொன்னதை மரந்துவிட்டாயா..,? அதே மாதிரிதான் அந்த உணர்வின் தன்மையை நீ என்ன செய்ய வேண்டும் என்று குருநாதர் மீண்டும் கேட்கிறார்.

அப்பொழுது அதே நேரத்தில், கஷ்டப்பட்டு அவர்கள் பணத்தைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது என்ன நடக்கிறது?

ஒரு விறகு புரோக்கர் (வியாபாரி) என்ன செய்திருக்கின்றான்?

மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர்கள் தேக்கு, ஈட்டி இந்த மரங்களை எவனோ வெட்டிப் போட்டதைத் துண்டு துண்டாக மற்ற விறகுகளுடன் உள்ளே கலந்து வைத்து விட்டார்கள்.

மற்ற மரங்களுடன் வெட்டிப் போட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள். விறகு வாங்குபவர்கள் உள்ளே இதைப் பார்த்தவுடன் என்ன ஆகிவிட்டது? இதை வாங்கினால் சிறையில் போட்டுவிடுவார்கள் என்று யாரும் எடுக்கவில்லை. வெளியில் தெரிந்தால் பெரிய ஆபத்து.

என் மனைவிக்கு இந்த விபரம் தெரியாது. இந்த அம்மாவிற்கு வேறு பிழைப்பும் இல்லை கையில் காசும் இல்லை.

விறகு எடுக்கும் புரோக்கர் இந்த விறகை எடுத்துக்கொள். காசு பிறகு வேண்டுமானால் கொடு என்கின்றார்.

காசு இல்லாமல் விறகைக் கொட்டியவுடன் இங்கே என்ன ஆனது? அங்கிருந்து வந்த ஒருவர், அடடா.., இது எவ்வளவு பெரிய சரக்கு. பார்த்தவர் பார்த்தவுடனே இரவோடு இரவாக அலுங்காமல் எடுத்துக் கொண்டுபோய்விட்டார்.

தேக்கு மரத்தையும் ஈட்டி மரத்தையும் அதிக விலை கொடுத்து எடுத்துச் சென்றுவிட்டனர். ஆக மொத்தம் இது ஒரு ரூபாய் என்றால் நான்கு ரூபாய் கொடுத்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

விடிவதற்கு முன்பே இவர்களுக்கு அந்த விறகுக் கடைக்குக் கொடுக்க வேண்டிய பணமெல்லாம் வந்துவிட்டது. அதிகமாக விற்றது இந்த அம்மாவிற்கு இலாபம்.

இங்கே அந்தப் பத்து ரூபாயைத் தேடியதற்கு அது போல் பணம் கிடைத்து, பின் அதிலிருந்து ஓரளவிற்கு இந்த விறகுக் கடையிலிருந்து குழந்தைகளுக்குக் கிடைத்தது.

ஏனென்றால் நோயிலிருந்து என் மனைவி தப்பியது. என்னைக் காணவில்லை என்ற நிலை இருந்தாலும் அது போன்ற உதவிகளையும் செய்தது. இதெல்லாம் குருநாதருடைய வேலைகள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளில் நீ எதைப் பாய்ச்சுகின்றாயோ, அது எப்படி நடக்கின்றது பார் என்பதை இப்படித்தான் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

இதையெல்லாம் நீங்கள் உட்கார்ந்து கேட்கின்றீர்கள். இத்தனையும் இப்பொழுது லேசாகச் சொல்கின்றோம்.
என்னமோ சாமி சொல்கின்றார்..,
நம்மால் முடியுமா..,? என்று நினைக்கின்றீர்கள்.
என் அனுபவத்தில் தெரிந்த உண்மைகளைத்தான் உணர்த்துகின்றேன்.

ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எதைப் பெறவேண்டும்? அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பெருக்குங்கள்.

உங்கள் வாழ்க்கையில் வரும் சிறு கஷ்டமாக இருந்தாலும், துன்பமென்றாலும், வேதனையென்றாலும், இதையெல்லாம் துருவ நட்சத்திரத்தின் அருளை எடுத்துத் துடைத்துப் பழகுங்கள்.