31.05.2015
நாம் மிருக நிலைகளிலிருந்து மனிதன் ஆனோம் என்பதைக் காட்டுவதற்கு மிருகத்தின் தலையை மனித உடலில் பொருத்தி முழுமுதல் கடவுள் மனிதன் என்றனர். முழுமுதல் கடவுள் என்றால் நாம் எண்ணியதைச் செயல்படுத்தும் முதன்மை பெறுகின்றோம்.
30.05.2015
நமது ஆறாவது அறிவைச் செம்மையான நிலையில் பயன்படுத்தினால் இந்த உடலினுள்ளே ஒளியின் தன்மையை நாம் பெற்று விண் செல்ல முடியும்.
29.05.2015
ஞானிகளின் அருள் செல்வத்தை நமக்குள் கூட்டிக் கொண்டால் புறச் செல்வத்தை நுகரும் தன்மை இழக்கப்படுகிறது. வேதனை என்ற நஞ்சினை நுகரும் தன்மை இழக்கப்படுகிறது. மெய்ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் வளர்க்கும் ஆற்றல் பெருகுகின்றது.
28.05.2015
எந்தெந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அந்த மணம் அனைத்தும் ஞானமாகி அது எவ்வாறு உணர்வின் செயலாக உடலை இயக்குகிறது என்பதைத்தான் மெய்ஞானிகள் அன்று விநாயகனை “ஞானவான்” என்று தெளிவுற உணர்த்தினார்கள்.
27.05.2015
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எவரொருவர் பிரார்த்திக்கின்றாரோ இந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நலமாக வேண்டும் என்று எண்ணும்போது அந்த நிலை வரும்.
பல ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அர்ச்சனை செய்து அந்த ஹோமம் இந்த ஹோமம் என்று செய்தால் ஒன்றும் ஆகாது. ஆயுள் ஹோமம் செய்பவர்கள் எல்லோரும் தப்பிப்பதற்குத்தான் இருப்பார்கள். ஆயிரம் பொய் சொல்லி மக்களிடம் காசு வாங்கி உடலினுடைய சுகத்திற்குத்தான் இருக்கிறார்கள்.
26.05.2015
இன்று காற்று மண்டலம் முழுவதும் நச்சுத்தன்மை அடைந்துவிட்டது. நீர் நிலைகள் கெட்டுவிட்டது. மனித உணர்வுக்குள்ளும் விஷம் வளர்ந்துவிட்டது. இக்கட்டான நிலையில் உள்ளோம். விண்வெளியின் நிலையும் மோசமாகிவிட்டது. சூரியனிலிருந்து வரும் காந்த அலைகளிலும் விஷங்கள் கலந்துள்ளது. அதே மாதிரி கோள்களிலும் விஷங்கள் கலந்துள்ளது. ஆக, பிரபஞ்சமே நச்சுத்தன்மையாகிவிட்டது.
விஞ்ஞானத்தால் பிற மண்டலங்களுக்குப் போகும் தன்மை வந்துவிட்டது. அதற்கு முன் மனித சிந்தனை அனைத்துமே அழியும் தன்மைக்கு வந்துவிட்டது. இதிலிருந்து நாம் அடுத்து கல்கியுகம் செல்ல வேண்டும். இனி எதிர்கால சந்ததிகளைக் காக்கும் வல்லவர்களாக சக்தி பெற்றவர்களாக மாறவேண்டும். உடலைவிட்டுச் சென்றால் நாம் மெய் ஒளியுடன் இணைய வேண்டும்.
25.05.2015
ஒவ்வொரு நிமிடமும் அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளியை உங்களுக்குள் பதிவு செய்து அந்த் மெய்ஞானிகளின் அருள் ஒளியுடன் உங்கள் துடிப்பின் எண்ணங்களைத் தூண்டுவதற்கு சதா உங்களைப் பிரார்த்திக்கின்றேன். உயிரின் நிலைகள் கொண்டு இதை நீங்கள் சரியாகக் கவனிக்கலாம். காலை 4.30 மணியிலிருந்து 5.00 மணிக்குள் இந்தத் துடிப்பின் வேகங்களை உணரலாம். ஏனென்றால் சூரியன் வெப்ப அலைகள் இந்த பூமியைச் சந்திக்கும் சமமாக இருக்கின்ற நேரம் இது.
அந்த் நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் அந்த மணங்கள் வரும். அந்தச் சமயம் தட்டியெழுப்பும் நிலைகள் வரும். துருவ நட்சத்திரத்தின் மணங்களை எளிதாகச் சுவாசித்து உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் சுலப நிலையில் சேர்த்துக் கொள்ள முடியும்.
24.05.2015
மெய்ஞான அறிவின் தன்மை கொண்டு மெய் ஒளியைப் பெறும் தருணத்தில் மெய் ஒளியின் ஆற்றலினுடைய உணர்வுகளைப் பதியச் செய்யும் பொழுது கவனத்தை வேறுபக்கம் செலுத்தாது இந்த உணர்வை ஒரே சீரான நிலைகளில் நீங்கள் கொண்டு வரவேண்டும்.
உபதேசிக்கும் அருள்ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்யும் எண்ணத்தைக் கூட்டி ஒளியின் உணர்வாக நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
23.05.2015
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை அந்த ஆற்றல்மிக்க சக்தியை நமக்குள் செலுத்தி நம்மைக் காத்து நாம் இடும் மூச்சலைகள் இந்த உலகில் வரக்கூடிய விஞ்ஞான அறிவிலிருந்து நாம் காக்கும் நிலையாக வரவேண்டும்.
நம்மால் மாற்ற முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்க வேண்டாம். நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்து நமக்குள் உணர்வைச் செலுத்துகின்றோமோ அந்த உணர்வின் ஈர்ப்பின் நிலைகள் நமக்குள் செயல்படும்.
22.05.2015
சூரியனின் ஒளிக்கதிர் கொண்டு ஒரு பிரபஞ்சமானாலும் கோள்களும் நட்சத்திரங்களும் சேர்ந்து ஒருங்கிணைந்து ஒரு சக்தியாக இயங்குகிறது.
இதைப் போன்று அதிலே தோன்றிய ஒரு உயிரணு நாம் பல ஆற்றல்மிக்க சக்தி கொண்டிருந்தாலும், நம் உயிரின் துடிப்பான நிலைகள் கொண்டு இந்த உணர்ச்சியின் ஒரு சீரான நிலைகளில் மகிழ்ச்சியான எண்ண்ங்கள் கொண்டு உயிர் ஒளியாகச் சுழல அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிப்போம். நாம் உயிருடன் ஒன்றி ஒளி நிலைகள் நிச்சயம் பெறுவோம்.
21.05.2015
விஞ்ஞானிகளால் ஏற்படும் இருள் சூழ்ந்த நிலைகள் அழியட்டும். ஆனால், மனிதனுடைய நிலைகள் மெய்ஞானிகளின் அருள் ஒளியுடன் ஒன்றட்டும். நம் பேச்சும் மூச்சும் காந்த அலைகளுடன் கலந்துள்ள நீராக ஆவியாக மாறட்டும். மேகத்தின் தன்மைகளில் நாம் இடும் மூச்சலைகள் நீராகச் சொரியட்டும். தாவர இனங்கள் வளரட்டும்.
நாம் அகம் மகிழ்ந்திருக்கும் நிலைகள் கொண்டு அந்த ஞானிகளின் அருள் சக்தி கொண்டு நம் எண்ணங்கள் ஒளியாகட்டும். இந்த எண்ணத்துடன் மெய் ஒளியுடன் நாம் என்றென்றும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திருப்போம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம்.
20.05.2015
இன்று மனித வாழ்க்கையில் இது சரி, இது தப்பு என்ற நிலைகளில் யாரையும் எண்ணிச் செல்ல வேண்டாம். குறைகளைக் காணவேண்டாம். நாம் மெய் ஒளியைக் காண்போம். மெய் உணர்வின் தன்மையை நாம் பெறுவோம்.
இதிலே நாம் அனைவரும் ஒரே குடும்பம், ஒரே நிலைகள் என்று மகரிஷிகளின் அருளாலே இருள்கள் நீங்கவேண்டும், நாம் ஒளி நிலை பெறவேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்வோம்.
19.05.2015
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மகரிஷிகள் ஞானிகள் தங்கள் உடலில் விளையவைத்து வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க சக்திகள் சூரியனின் காந்தப் புலன்களால் கவரப்பட்டு இன்றும் நமது பூமியில் சுழன்று கொண்டுள்ளது.
அவைகளை நாம் பெறும் நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.
18.05.2015
எந்த சந்தர்ப்பத்திலேயும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நாம் பெறும் பொழுது நல்லதை உருவாக்கும் பிரம்மத்தின் ஆற்றல் மிக்க சக்தி பெற்றவர்களாகிவிடுகிறோம்.
அந்த பிரம்மத்தை உருவாக்குவதற்கு துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெற்று அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க அருள் சக்தியைச் சுவாசித்து இந்த உயிரான நிலைகளில் பிரம்மமாக்கும் பொழுது அது நமக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை ஜீவனாக்குகின்றது.
17.05.2015
நாம் எதை எண்ணுகின்றோமோ சுவாசித்து இந்த உயிரில் மோதியவுடன் இதுவே பிரம்மமாகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாகும்போது பிரம்மம். அதே உணர்வின் தன்மை நம் உடலுக்குள் செல்லும்பொழுது பிரணவம். பிரணவமாகும் பொழுது ஜீவனாகின்றது.
எந்த உணர்வின் அலையை நாம் பேசுகின்றோமோ அது பேசுகின்றது. பேசும் நிலைகள் இந்த உயிருக்குள் இருக்கக்கூடிய காந்த அலைகள் அதை பிரம்மமாகச் சமைக்கின்றது. இந்த அலையின் தன்மையை அது வெளிப்படுத்தும் பொழுது நான்கு மடங்காக பிரணவமாக ஜீவன் உண்டாக்கச் செய்கின்றது.
உங்கள் செவிகளில் பட்டவுடன் அது எப்படி ஜீவனாகித் துடிக்கச் செய்கின்றதோ அதை ஈர்க்கச் செய்கின்றது. இதுதான் ஓம் என்ற பிரணவத்தின் தத்துவம். பிரம்மா உருவாகுகின்றான்.
16.05.2015
மந்திர இயந்திரங்கள் கொண்டு கூடுவிட்டு கூடு பாய்வதும், ஒரு உடலுக்குள் இருந்து இயக்குவதும் இவையெல்லாம் ஒரு மனித உடலில் விளைய வைத்தது. இன்னொரு உடலுக்குள் சென்றபின் ஆற்றல்மிக்க இழிநிலையில் வேலை செய்யும்.
அதை நாம் நம்பி அதன் வழியில் சென்றால், இந்த மனித உடலில் எத்தனையோ ஆசைப்பட்டு நமக்குள் தெய்வம் செய்யும் என்ற நிலைகளில் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறிதல் வேண்டும்.
15.05.2015
கோள்களில் உயர்ந்தது சூரியன். உயிரினங்களில் உயர்ந்தவன் மனிதன். எதையும் மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றவன் மனிதன்.
தீமையை நமக்குள் அணுகாதபடி செயல்படுத்தும் ஆற்றல்மிக்க சக்தியைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறு பெருக்கும் ஆற்றல் பெற்றவர்கள்தான் சப்தரிஷிகள்.
14.05.2015
எமது உபதேசத்தை நீங்கள் செவி கொண்டு கேட்டுக் கொண்டிருகும் பொழுது உங்கள் உயிரான ஈசனுக்கு ஆராதனை அதை நீங்கள் எந்த அளவிற்குத் த்டைப்படுத்தாமல் சுவாசித்தீர்களோ உங்கள் உடலுக்குச் சத்தான நிலையில் அமுதாகச் சேர்கின்றது.
உங்கள் சிவத்திற்குள் கூடியிருக்ககூடிய உணர்வுகள் தெய்வங்கள். அந்த நற்குணங்கள் அனைத்துமே மகிழ்ச்சியும் அதற்குள் ஒவ்வொரு அணுக்களின் தன்மையும் ஆற்றல்மிக்க தெய்வங்களாக உங்களுக்குள் ஊடுருவி உங்கள் பேச்சும் மூச்சும் ஒவ்வொரு நிலைகளில் துன்பம் போகும் என்று சொன்னால் துன்பத்தைப் பார்த்தாலும் உனக்குத் துன்பமில்லை என்று நீங்கள் சொன்னால் அவர்க்ள் துன்பம் போகும்.
13.05.2015
எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தியை மறக்காமல் கடைப்பிடிக்க வேண்டும். சுலபமாகக் கொடுத்திருப்பதால் இதை யாரும் அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.
நம் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்கள் வந்துகொண்டேயுள்ளது. ஆத்ம சுத்தி செய்து அந்தத் துன்பங்களைப் போக்கி நமக்குள் அருள் ஒளியைச் சேர்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
12.05.2015
கசப்பான சலிப்பான வெறுப்பான உணர்வுகளை நீக்கி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு நாம் செயல்படவே அரசையும் வேம்பையும் விநாயகர் கோவிலில் வைத்து ஸ்தல விருட்சமாகக் காட்டினார்கள் ஞானிகள்.
11.05.2015
நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் விஷத்தின் தன்மை மாய்ந்து நெருப்பின் சுடரின் தன்மையை நாம் ஒளியாகக் காண்கின்றோம்.
அதைப் போன்று மெய்ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் செலுத்தும் பொழுது நமக்குள் இருக்கும் விஷத்தன்மையை அது மாய்த்து நம் எண்ணங்களை ஒளியாகக் காட்டி, புலனறிவிலே சிந்திக்கும் நிலையும் மறைந்த பொருளின் உண்மை நிலையையும் அறிந்துணர்ந்து நமக்குள் உணர்வின் ஆற்றலைப் பெருக்க உதவும். இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்குத்தான் தியானம்.
10.05.2015
மெய்ஞானியின் அருள் ஒளி என்றும் மறைவதில்லை. அந்த உணர்வின் ஆற்றல் எல்லா மனிதர்களின் எண்ணத்திற்குள்ளும் மறைந்து உள்ளது. குப்பைக்குள் மாணிக்கம் இருந்தாலும், அதைக் கிளர்ந்து எடுக்கும் பொழுது ஒளியின் சுடர் நிச்சயம் வெளிப்படும்.
நமக்குள் மறைந்த உணர்வின் ஆற்றல்மிக்க ஒளியின் தன்மையைக் கிளர்ந்து அந்தக் குப்பைக்குள் மறைந்திருக்கும் நிலைகளைக் கிளர்ந்து வெளிப்படுத்துவது போன்று நாம் மகரிஷிகளின் அருள் சக்தியைத் தியானத்தினாலே வெளிப்படுத்தி நமக்குள் உணர்வின் தன்மையை எண்ணச் செய்து அந்த மெய்ளியின் சுடருடன் இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் ஒளி சரீரம் பெறும் நிலையே.
09.05.2015
சிவன் இராத்திரியின் தத்துவம் என்ன?
நமக்குள் ஒளியாக நின்று உடலான நிலைகள் இருளுக்குள் நின்றுதான் நாம் பேசுகின்றோம், செயல்படுகின்றோம். இதை ஒளியாகக் கொண்டு வரவேண்டும். அந்த ஒளியின் சரீரத்தைக் கொண்டு வருவதற்குத்தான் இந்த உபதேசமே.
08.05.2015
மனித வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள் நீங்கவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியை அனவரும் பெறவேண்டும்.
இந்த மனித வாழ்க்கையில் உயிருடன் ஒன்றிய ஒளி–ஒலி சரீரம் பெறவேண்டும். இதுவே மாக்ரிஷிகள் காட்டிய தீப வழி.
07.05.2015
ஞானமான இந்த மனித உடலின் உணர்வுகளில் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளின் இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் பத்தாவது நிலையை அடைய வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாளே விஜயதசமி.
06.05.2015
இந்த உடலான ஆலயத்திற்குள் நின்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உயிரான நிலைகள் கொண்டு செயல்படுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்கும் பொழுது தீய உணர்வுகள் வராது தடுத்துக் கொள்கிறோம்.
ஆக, நம் மூச்சும் பேச்சும் நமக்கு எத்தகைய துன்பத்தையூட்ட எண்ணுகின்றார்களோ அவர்களிடம் நாம் இந்த எண்ணத்தைப் பாய்ச்சுவோம். அவர்கள் செய்வதெல்லாம் நாளை நல்லதாக இருக்கட்டும். அவர்கள் பேச்சும் மூச்சும் நல்ல உணர்வுகளை ஊட்டட்டும் என்று நாம் எண்ணுவோம்.
நம்முடைய எண்ணங்களை அவர்கள் எடுத்தால் எடுக்கட்டும். எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நம் சுவாசம் மட்டும், “அவர்கள் அப்படிச் செய்கிறார்களே” என்று வேகமாக இழுத்து உணர்வைக் கூட்டிவிட்டால் நமக்குள் அந்தத் தீமையான உணர்வு உடனே அதன் வேலையைச் செய்துவிடும்.
05.05.2015
எல்லா ஞானிகளும் சாதாரண மக்களிடத்தில்தான் அருள் வேண்டி வந்தார்களே தவிர தனித்து அருளைப் பெறவில்லை.
யாம் உபதேசிக்கும் பொழுது உங்களுக்கு நல்லதாகின்றது. இதைப் போன்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு யாருக்கு உடல் நலமில்லையோ உங்களுக்கு நோயில்லை என்று வாக்காலே சொல்லித் துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள்.
அந்தத் துன்பம் உங்கள் வாக்கால் நீங்கும் பொழுது அந்தச் சொல் நல்ல சொல்லாக உங்களுக்குள் கிடைக்கின்றது. நல்லதாகின்றது.
04.05.2015
நம் உடலில் பதியும் அசுத்த உணர்வுகளை நல் உணர்வுகளாக மாற்றுவதற்காகத்தான் சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்து அதிலிருந்து வெளிப்படும் உயர்ந்த சக்தியை நாம் பெற வழி வகுத்தவர்கள் மகரிஷிகள்.
03.05.2015
இன்று விஞ்ஞான உலகில் நாம் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்.
அப்படி எவ்வளவுதான் மகிழ்ந்து வாழ்ந்தாலும் மனிதனுடைய எண்ணங்கள் குறுகி அதிலே சிறிதளவு தடைப்பட்டால் மனவேதனையும், சோர்வும், சஞ்சலமும், விரக்தியும் எடுத்து நமக்குள் அதிகமாக வளர்த்துவிடுகின்றோம்.
இதன் நிலைகள் கொண்டு நாம் இறந்த பின்பு மீண்டும் மனிதனாகப் பிறப்பது மிகமிகக் கடினம். கோடியில் ஒருவர் மனிதனாகப் பிறப்பது அபூர்வம்.
02.05.2015
ஒளி சரீரம் பெறவேண்டும் என்று நீங்கள் தியானியுங்கள். யாரிடத்திலும் பிரதிபலனை எதிர்பார்க்க வேண்டாம். நம்மைப் புகழ வேண்டாம். புகழுக்காகச் செய்கிறோம் என்று எண்ண வேண்டாம்.
மனதார நாம் எடுக்கும் இந்த உணர்வின் சக்தி இந்த மகிழ்ச்சியின் நிலைகளில் பிறர் மகிழ மகிழ்ந்த அந்த உணர்வை நாம் சுவாசித்து நாம் அந்த ஆனந்தத்தைப் பெறவேண்டும். இதுதான் மனிதனின் கடைசி எல்லை.
01.05.2015
உங்களுடைய மனதைப் பண்படுத்துங்கள். மெய்ஞானிகளின் அருளாற்றலை உங்களுக்குள் வளர்த்திடுங்கள். நீங்கள் பெற்ற இந்த ஆற்றலை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களிடத்திலும் அருள்ஞான வித்தைப் பதியச் செய்யுங்கள்.
அதன் காரணமாக அவர்களிடத்திலுள்ள துன்பங்கள் நீங்க நீங்கள் செய்த உதவியாக இருக்கும். அவர்களும் மெய்ஞானிகளின் அருளாற்றலைப் பெற்றதின் நிலை கொண்டு விண்ணை நோக்கி ஏங்கும் பொழுது அவர்களுக்கு விண்ணின் ஆற்றல் கிடைக்கப் பெற்று மெய்ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் செல்வதற்கு உதவியாக அமைகின்றது.