ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2014

ஞானகுருவின் பொன்மொழிகள் - October 2014

31.10.2014
தீய உணர்வுகள் நம்மைத் தாக்காவண்ணம் மகரிஷிகளின் அருள் உணர்வைக் கூட்டி நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் நல் உணர்வின் அலைகள் நம்மைச் சுற்றி கூடாக இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
30.10.2014
யாரும் இறப்பதில்லை, உடல்தான் இறக்கின்றது
உணர்வுகள் அழிவதில்லை, உணர்வுகள் மாறுகின்றது.
உணர்வுகள் மாறிகொண்டே இருக்கும். உணர்வுக்குத் தக்கவாறு உடல்கள் மாறும். 

ஒளியின் உணர்வாக மாற்றச் செய்வதுதான் மககரிஷிகள் உணர்த்திய தியானம்.
29.10.2014
ஞானமான மனித உடலின் உணர்வுகளின் நிலைகளில் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளின் இருளை நீக்கி, உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் பத்தாவது நிலையை அடைய வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாளே விஜய தசமி
28.10.2014
ஓர் உயிரணு புழுவாகி, பூச்சியாகி, பாம்பாகி, பட்சியாகி, பருந்தாகி, மானாகி, மாடாகி, பூனையாகி, புலியாகி, யானையாகி,

ஞானமாகிய மனிதனாகிய நிலையே நவராத்திரி.
27.10.2014
தங்களுடன் பகைமை கொண்டவர்களை நினைத்து,
பகைமை நீங்க மகரிஷிகளை எண்ணி,
பகைமைகளை நீக்கி தீய வினைகள் வளராது தடுக்க
ஒருவருக்கொருவர் ஒற்றுமையை வளர்க்கும் நன்னாளே விநாயகர் சதுர்த்தி.
26.10.2014
தேர் பெரியது, சாமி சிலை சிறியது. அனைவரும் ஒன்று சேர்ந்து இழுத்து நிலை சேர்ப்பதைப் போல, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தியானிக்கும் பொழுதுதான் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறமுடிகின்றது. 

கூட்டு தியானம் செய்யச் செய்ய நல் உணர்வின் அலைகள் வலுப் பெறுகின்றன
25.10.2014
ஆதியிலே புழுவாக உருவாக்கிய எண்ணங்களின் உணர்வுகளின் சத்துக்கொப்ப இன்று நம்மை மனிதனாகப் பிறக்கச் செய்து இருக்கின்றது. 

ஆதிமூலம் என்ற உயிரான ஈசனின் செயலே உடல்.
24.10.2014
இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஞானிகள், மகரிஷிகள் தங்கள் உடலிலே விளைய வைத்த ஆற்றல்மிக்க சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு இன்றும் பூமியில் சுழன்று கொண்டுள்ளது. 

அவைகளை நாம் பெறும், நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே “தியானம்”.
23.10.2014
இமய மலையில் தவம் இருந்க்தால் ஈஸ்வரனைக் காணலாம் என்பார்கள்.

இரண்டு இமைகளுக்கு மத்தியில் ஈஸ்வரானாகிய உயிரை எண்ணி தியானம் இருப்பதையே உணர்த்தினார்கள் மகரிஷிகளும் ஞானிகளும்.
22.10.2014
கசப்பான சலிப்பான உணர்வை நீக்கி, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படவே அரசையும்  வேமபையும் விநாயகர் கோவிலில் ஸ்தல விருட்சமாகக் காட்டினார்கள் ஞானிகள்.
21.10.2014
தீபத்தின் ஒளியால் இருள் அகன்று இருளில் இருக்கும் பொருள் தெரிகின்றது.

இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் பெறுகின்ற பொழுது  உயிரில் கலந்திருக்கும் இருள் அகன்று மெய்ப்பொருளைக் காணும் திறன் பெறுகின்றோம்.
20.10.2014
மகரிஷிகளின் அருள் ஒளி நமக்குப் பாதுகாப்பு. தியானத்தின் துனைகொண்டு அருள் ஒளியை நாம் சுவாசிக்க உணர்வுகளைச் சமப்படுத்துகின்றது. சொல்லில் இனிமையும் பார்வையில் இனிமையும் கிடைக்கின்றது.

ஆகவே, மகரிஷிகளி அருள்சக்தி பெற தினமும் தியானம் செய்யுங்கள்.
19.10.2014
நம் உடலில் பதியும் அசுத்த உணர்வுகளை நல் உணர்வுகளாக மாற்றுவதற்குத்தான் சப்தரிஷி மண்டலங்களைக் காண்பித்து அதிலிருந்து வெளிப்படும் உயர்ந்த சக்திகளை நாம் பெற வழிவகுத்தவர்கள் மகரிஷிகள்.
18.10.2014
எண்ணியதை இயக்கி உணர்த்துவதும் உயிரே
எண்ணிய உணர்வை உடலாக்குவதும் உயிரே
எண்ணிய உணர்வை உடலில் வளர்ப்பதும் உயிரே
உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலைத் தன்னுடன் எடுத்துச் சென்று 
மறு உடலை உருவாக்குவதும் உயிரே.

உயிரே கடவுள்
நீ எண்ணிய உணர்வே இறைவன்
நீ எண்ணிய உணர்வின் செயலே தெய்வம்
17.10.2014
நம் அகத்திற்குள் இருக்கும் குணங்களைத்தான் தெய்வங்களாக உணர்த்தினார்கள் மகரிஷிகள்.

உடலைக் கோவிலாகவும்,
உயிரை ஈசனாகவும்,
குணங்களின் உணர்வுகளைத் தெய்வங்களாகவும்
உணர்த்தியவர்கள் மகரிஷிகள்.
16.10.2014
உங்கள நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை மகா ஞானிகளுடைய அருளாற்றலின் துணை கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் விண்ணும் மண்ணும் போற்றும் மகா ஞானிகளுள் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.
14.10.2014
இறை என்பது நாம் எந்தெந்த உணர்வின் தன்மையை எண்ணுகின்றோமோ அதுவே நமக்குள் இறையாகின்றது.

கடவுள் என்பது நமக்குள் நின்று இயக்கும் சக்தியாகும்.
ஒரு அணுவுக்குள் இருந்து ஒரு இயக்கத்தின் துடிப்பாவது கடவுள்.
13.10.2014
உணர்வின் இயக்கத்தின் வெளிப்பாடே வெவ்வேறு ரூபங்கள்.
அந்த ரூபங்களினால் வெளிப்படும் நிலைகள் உணர்ச்சி.
12.10.2014
கல்வி, விஞ்ஞானம் போன்றவைககள் நம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே உதவ முடியும்.

மெய்ஞானம் ஒன்று மட்டுமே நம் ஆன்மாவுக்கு உயர்வு தரும். அந்த மெய்ஞானத்தை குருவின் அருளால்தான் பெறமுடியும்.
11.10.2014
நம்பியதை நம்பியவண்ணம் நடத்தித் தரும் நாயகனை நம்முள் இருக்கும் ஈசனை அறிந்து அவனின் ஆற்றலை மகரிஷிகள் உணர்த்திய வழியில், குரு வழியில் தாய் தந்தையை எண்ணி தியானித்து வளர்ப்போமாக.
10.10.2014
ஆன்மா நலம் ஆனால், எண்ணம் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், சொல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், செயல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், உடல் நலமாகும் 
ஆன்மா நலம் ஆனால், உயிரான்மா நலமாகும் 
ஆத்மசுத்தி செய்வோமானால், ஆன்மா நலமாகும்.
08.10.2014
நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நம்முள் ஜீவ அணுக்களாக விளைந்து ஓம், ஓம், ஓம் என்று இயங்கிக் கொண்டுள்ளன.

இவைகளுக்கெல்லாம் ஈசனாக, 
"ஓமுக்குள் ஓமாக" இருந்து இயக்குவது நமது உயிர்.
07.10.2014
மரண பயத்தை வென்றவர்கள்
மரணத்தை வென்றவர்கள் ஆவர்.

அவர்கள் மரணமிலாப் பெருவாழ்வை மட்டுமே எண்ணியவர்கள்.
06.10.2014
துருவ பதமே நமக்கு பரமபதம்
நாம் அனைவருக்குமே இதுவே சாசுவதம்
05.10.2014
எதனின் உணர்வை நம்முள் இணைத்து வளர்க்கின்றோமோ
அதனின் உணர்வுகள் நம் உடலில் இணைந்து ஊழ்வினையாகின்றது.

இந்த ஊழ்வினையே நமது உயர்வுக்கும் தாழ்வுக்கும்
காரணமாக இருக்கின்றது
04.10.2014
ஊசிமுனை தவம் வேண்டாம்
காடு மலை தேடிப் போக வேண்டாம்

அன்னை தந்தையின் அருள் இருந்தால் போதும்
குருவின் அனுக்கிரகம் எளிதில் கிட்டும்
03.10.2014
நமது உடலுக்குள் எண்ணிலடங்காத எண்ன வித்துக்கள் உண்டு.
அதனில் எந்த உணர்வின் தன்மை அதிகமோ
அதனின் செயலாக்கமாக நமது ஆன்மாவாக மாறுகின்றது.
02.10.2014
மதங்கள் மனிதரை மதம் பிடிக்கச் செய்துவிட்டன
மதம் பிடித்த மனிதருக்கு ஒரு பொழுதும் இன்பமில்லை

உயிரின் ஆற்றலை வளர்ப்பவருக்கு
ஒரு பொழுதும் துன்பமில்லை
01.10.2014
“கடவுள் ஒருவரே” என உரைப்பார் சிலர்
“கடவுள் பலர்” என உரைப்பார் சிலர்
“கடவுளே இல்லை” என உரைப்பார் சிலர்

ஆனால், தம் “உயிரே கடவுள்” என அறிந்தவர் மேலானவர்