ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2014

உடல் வலு பெற்றது மிருகம், எண்ண வலு பெற்றவன் மனிதன் - விநாயகா

விநாயகருடைய தத்துவம் என்னவென்றால் நாம் பலகோடி சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி மனிதனாக உருவாகி இருக்கின்றோம் என்பதனை நம்மை நாம் அறிந்துகொள்வதற்காக விநாயகரை வைக்கின்றார்கள்.

விநாயகருக்கு ஆதிமூலம் என்ற பெயரும் உண்டு. ஆதிமூலம் என்ற உயிர் ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டபின் அந்த உணர்வுக்கொப்ப உடலாகின்றது. சிவமாகின்றது.

உடலானபின் எந்த குணத்தை நுகருகின்றதோ அது வினையாகின்றது. வித்தாகின்றது. அந்த வித்தின் உணர்ச்சிக்கொப்ப உடலாகின்றது. அதற்குத் தகுந்த எண்ணமாகின்றது.

இந்த உயிர் எந்த சத்தை நுகர்ந்ததோ
அது சிவனுக்கு முந்தியது.
அந்த உணர்வின் தன்மை உறையும் பொழுது சிவமாகின்றது (உடலாகின்றது).

உறைவதற்கு முன் சக்தியாக இருக்கின்றது. அந்த சக்தியை நுகரப்படும்பொழுது வினையாகின்றது. ஒரு வித்தாக மாறுகின்றது. வித்தாக உடலாக மாறும்பொழுது சிவனின் பிள்ளை விநாயகன்.

வினைக்கு நாயகனாக உணர்வை நுகரப்படும்பொழுது மூசிக வாகனா. நாம் எந்த குணத்தை நுகருகின்றோமோ அந்த உணர்வுகள் இந்த வாழ்க்கையை நடத்துகின்றது.

தன்னைக் காட்டிலும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் கணங்களுக்கு அதிபதியாகி நல்ல அணுக்களைக் கொல்கின்றது. அதன் வழிக்கு நல்ல குணங்கள் அடிபணிகின்றது.
வேதனைப்படுத்தும் உணர்வுகள் வலுவாகின்றது.
இப்படித்தான் பலகோடி சரீரங்களைப் பெற்றோம்.

பலகோடி சரீரங்களிலும் தீமையை நீக்கிடும் உணர்வை சேர்த்துச் சேர்த்து வலுவான யானையானது என்பதனைக் காட்டுவதற்கு யானையின் தலையைப் போடுகின்றார்கள்.

யானையாக இருக்கும்போது உடல் வலுவால் எது வந்தாலும் அதிலிருந்து தப்பிக்கும் எண்ண வலுவைப் பெறுகின்றது.

இவ்வாறு தப்பிக்கும் எண்ண வலுவை பெறும்பொழுது அந்த உணவின் தன்மை உடலில் விளைகின்றது. இவ்வாறு உடலில் சேர்த்துக்கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெறுகின்றது.

உடல் வலு பெற்றது யானை. யானை உடலில் வலு இருக்கும் வரையிலும் எதையும் தூக்கும். வலு இழந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

மனிதன் தன் எண்ண வலுகொண்டு
பத்தாயிரம் டன் வலு கொண்டதையும்
வானவீதியில் தூக்குகின்றான்.
எண்ண வலு பெற்றவன் மனிதன்.

உடல் வலு பெற்றது மிருகம். எண்ண வலு பெற்றவன் மனிதன். இதைத் தெரிந்து கொள்வதற்குத்தான் விநாயகனை வைக்கின்றார்கள்.