ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 8, 2014

நல்லதை நினைத்தாலே இன்று பெரிய சுமையைத் தூக்கி வைத்தது போல் உள்ளது - ஏன்?

இன்று உலகம் முழுவதற்கும் விஷத்தன்மைகள் பரவிக் கொண்டிருப்பதால் இந்த நேரத்திலே நாம் நல்லதைச் சிந்திக்கும் செயல் இழந்து இருக்கின்றோம்.

ஏனென்றால், விஷத்தின் பாங்கு நமக்குள் அதிகமாகச் சென்றுவிட்டது. ஆகையினால் இதிலிருந்து நாம் மீள்வதற்கு சிந்திக்கும் திறன் அற்றிருக்கின்றது.

நல்லதைச் சிந்தித்து செயல்பட வேண்டுமென்று நாம் எண்ணி ஏங்கி இருந்தாலும்,
ல்லதை நினைக்கும்போதே
பெரிய சுமையைத் தூக்கி வைத்தது போன்று,
சிறிது நேரத்தில் நம் உடலே சோர்வடைந்துவிடும்.

இது நம்மால் சாத்தியமா? என்ற நிலையைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கும்.

நாம் நல்லதைச் செய்யவேண்டும் என்றாலும், நம் உடலின் உணர்வுகள் நல்லதைச் சிந்தித்துச் செயல்பட்டாலே அதைத் தாங்கும் இயல்பு நமக்குள் இல்லை.

காரணம், வேதனை என்ற நிலைகள் எண்ணும்போது நம் உணர்வுகள் துடிக்கப்பட்டு இப்படி ஆகிவிட்டதே என்று முறுக்கேறும். அதன் வழிகளில் நம் சரீரங்களை வேகமாக நகர்த்திச் செல்லும்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகளை நமக்குள் ஊட்டியவுடன் அது வேகமாக உடலை இயக்கிவிடும்.

ஆனால் நல்லதைச் செய்யவேண்டுமென்ற ஏக்கத்தை நீங்கள் சுவாசித்தால்,
உங்களுக்குள் அந்தக் காரமான உணர்வுக்குள் சிக்கியவுடன்
இந்த விஷமான உணர்வுகள்
உங்கள் உடலில் வளர்ந்து கொண்டிருப்பதால்,
உங்களுக்குள்ளேயே இதை பலவீனப்படுத்தி,
நாம் செய்வோமா? என்று சோர்வடைந்து  கீழே உட்காரச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் இது நடந்து கொண்டிருக்கக் கூடிய நிகழ்ச்சிகள்.

காரணம், இன்றைய உலகில் தீவிரவாதங்களும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் யுத்த நிகழ்ச்சிகளும், அரசியல் நிலைகளிலும், அதே போன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் தொழிலில் எத்தனையோ நிலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இவைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரும்போது அதனால், அடிக்கடி வேதனையும், கோபமும், ஆத்திரமும், போன்ற உணர்வுகளை நாம் எடுத்துக் கொள்ளுகின்றோம்.

ஆகவே, இத்தகைய உணர்வின் ஆற்றல்கள் நமக்குள் பெருகி இருக்கும்போது
நல்லதை எண்ணிச் சுவாசித்தால்,
இந்தச் சுவாச அலைகள் இயங்குவதற்கு
ஒரு அச்சத்தை ஊட்டி உள் அடங்கிவிடும்.

அப்படி அடங்குவதனால் அடுத்து நாம் செய்ய முடியாத நிலைகளில் சோர்வடைந்து விடுவோம்.

ஆகவே, எப்பொழுதெல்லாம் உங்களுக்குத் துன்பம் நேருகின்றதோ, அந்த நேரத்திலெல்லாம் மெய்ஞானியின் அருளாற்றல்களை எண்ணி ஏங்குங்கள்.

உங்கள் வாழ்க்கையிலே எங்கிருந்தாலும், எப்பொழுது, துன்பமூட்டும் உணர்வு என்று உணர்த்துகின்றதோ அந்த நிமிடமே ஓம் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள். அடுத்து, அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைவைச் செலுத்துங்கள்.

அப்பொழுது, அந்த மெய்ஞானியின் அருள் சக்திகள்
உங்களுக்குள் துன்பத்தை உருவாக்கும்,
சோர்வடையச் செய்யும்,
இன்னல்களை உருவாக்கும் உணர்வலைகளைத் தோற்றுவிக்கும்
இந்த உணர்வுகளைத் தணிக்கச் செய்யும்.

அதே சமயத்தில், உங்களின் நல்ல எண்ணத்தை வலு கூட்டச் செய்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் ஊட்டும்.

உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவர்களுக்குள்ளும் கலந்து
(நம்மை வெறுப்வர்களின் உணர்வுக்குள் கலந்து)
அவர்களுக்குள்ளும் நல்லதை உருவாக்கி,
நமக்கும் நல்லதை உருவாக்கச் செய்யும்

இந்த ஆற்றல்களை நாம் வளர்த்துக்கொள்ளும் நிலைதான் யாம் உணர்த்தும் தியானத்தின், இந்த சந்தர்ப்பத்தின் நிலைகள்.