ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2014

பத்து மகரிஷிகள் - காளிங்கநாதர் 3

1. விஷத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர் காளிங்கநாதர்
காளிங்கன் என்பது, எப்பொருளின் தன்மையும் ஒரு விஷத்தின் அமைப்பிற்குள் சென்றுவிட்டால், அது விஷத்திற்குள் அடங்கி இயக்கும் என்று பொருள்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மை கொண்ட ஒவ்வொரு அணுவின் தன்மையையும் பரிட்சித்துக் கொண்டு வருகின்றார். அப்படிப் பரிட்சித்துக் கொண்டு வரும் பொழுது, இளம் பருவத்தில் வந்த போகனுக்கு விஷத்தின் ஆற்றலை உணர்த்துகின்றார்.

காளிங்கநாதர், விஷத்தின் தன்மையை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு வைத்தியர். ஆராய்ச்சி செய்து, தனக்குள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வரும் பொழுது, அங்கு வந்து சேருகின்றார், இந்த போகர். அந்த உண்மையின் தன்மையை அவர் விளக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான், போகன் விண்ணுலகத்தின் தன்மையைப் பின் தொடர்கின்றார்.
2. நுகரும் சக்தியை போகருக்குக் கொடுத்தார் காளிங்கநாதர்
காளிங்கநாதர் விஷத்தின் நிலையைக் காட்டி, நுகரும் சக்தியை போகருக்குக் கொடுத்தார். விஷத்தின் தன்மைகளைப்பற்றி பாட போதனைகளைக் கொடுக்கின்றார்.

இவரிடம் கற்றுக் கொண்டபின் தான், போகர் தாவர இனத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய, விஷத்தின் தன்மையை அறிகின்றார். போகர் நுகரும் தன்மையை அறிகின்றார். பின், நுகரும் தன்மை கொண்டு பல நிலைகளை அறிகின்றார்.

காளிங்கநாதர் வைத்தியத் தொழிலில் இருக்கப்படும் பொழுது, அந்தச் சிறுவனை அழைத்துச் சில நிலைகளைக் கற்றுக் கொடுக்கின்றார்.

அந்த காளிங்கநாதர் காட்டிய குரு வழியில், இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு, தனக்குள் போகர் இத்தன்மையைக் கொண்டு வருகின்றார்.

அப்பொழுது, இந்த விஷத்தின் தன்மை எல்லாவற்றிற்கும் எவ்வாறு பாதுகாப்பாகின்றது என்பதையும், விஷம் ஒன்றை எப்படி மாற்றுகின்றது? என்பதையும், தன் உடலுக்குள் பல விஷத்தின் ஆற்றல்மிக்க நிலைகளைச் சேர்த்து அறிகின்றார்.

காளிங்கநாதர் அன்றைய மக்களுடைய துயர் துடைக்க, பச்சிலைகள் மற்ற மூலிகைகள் இலைகளில் இருந்து வரக்கூடிய சாறினை எடுத்துப் பக்குவப்படுத்தி, மனித உடல்களில் பிணிகளை நீக்க தமது ஆற்றல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

அதே சமயம், போக மாமகரிஷி இளம்பிராயத்தில் இவரை அணுகியவுடன், போகமாமகரிஷிக்கு எதிர்பாராத ஆற்றல்மிக்க சக்திகள் இருப்பதைக் கண்டவுடன், காளிங்கநாதர் வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

வைத்தியரீதியில் போகர் கற்றுக் கொண்டாலும், தாவர இனத்திற்குள் அடங்கியிருக்கும் உணர்வின் ஆற்றலைத் தன் நிலையில் நுகர்ந்து அறிந்தார்.

அதனின் ஆற்றல் மிக்க சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றது? என்ற நிலையையும், அந்த உணர்வின் ஆற்றல் எங்கிருந்து தோன்றி, எதன் வழிகளில் வழிப்படுத்தி, ஆற்றல்மிக்க நிலைகளாக வருகின்றது என்ற உண்மைகளையும் அறிவதற்கு மிக முயற்சி எடுத்தார்.

அவருடைய சுவாசத்தைத் தன் உடலுக்குள்ளும், விண்ணுக்கும், மண்ணுக்கும் செலுத்தித் தனக்கு ஏற்பட்ட உணர்வினை அறிந்துணர்ந்து உலகிற்கு உணர்த்தினார்.

அவர் உணர்த்திய ஆற்றலின் தன்மை கொண்டுதான், நமது ஆறாவது அறிவை முருகனாகக் காட்டி, இந்த ஆறாவது அறிவைக் கொண்டு வாழ்க்கையில் வரக் கூடிய தீமைகளை நீக்கிக் கொள்ள முடியும், என்று போகர் உணர்த்தினார்.

காளிங்கநாதரோ, தாவர இனச் சத்தின் தன்மையை எடுத்து, உடல் பிணிகளைப் போக்க முடியும் என்று சொன்னார்.

ஆனால், உடல் பிணிகளைப் போக்க முடியும் என்று காளிங்கநாதர் சொன்னாலும், அந்தப் பிணியை நீக்கும் உணர்வின் ஆற்றல், எந்தெந்தத் தாவர இனச் சத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நுகர்ந்தறிந்தார் போகர்.