1. ஒரு அம்மா சொத்து வேண்டும் என்று முதலில் கேட்டது
ஒரு சமயம் ஒரு அம்மா இங்கே தபோவனத்திற்கு வந்தது. அது
என்ன செய்தது? என் வீட்டில் ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. சொத்தெல்லாம் தட்டிப் பறித்துக்
கொண்டார்கள் என்றது.
நீ இந்த மாதிரி தியானத்தைச் செய்யம்மா, கிடைக்கும் என்று சொன்னேன்.
அது மாதிரி செய்ததும் சொத்து திரும்பக் கிடைத்துவிட்டது.
அந்தக் கடையும் வந்துவிட்டது. சாமி உங்கள் அருளால் இந்தக் கடை மற்ற எல்லாம் வந்துவிட்டது
என்று சொன்னது.
2. இரண்டாவது, கடையை நடத்த பணம் வேண்டும் என்று கேட்டது
ஆனால், இந்தக் கடையை வைத்து இப்பொழுது நடத்துவதற்குப்
பணம் இல்லை என்று சொல்லி “ஓ” என்று மறுபடியும் அழுகின்றது.
ஏனம்மா இப்படி அழுகின்றாய்? தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஆசி கொடுங்கள் என்று கேளம்மா. அப்படிக் கேட்டு
அதன்வழி நடந்தால், உனக்கு நன்றாக இருக்கும். நல்லது வேண்டும் என்று கேளம்மா என்று நான் சொன்னேன்.
“இல்லைங்க”, அந்த அம்மா
திருப்பிச் சொல்கின்றது. ஏங்கே கேட்டாலும் காசே கிடைக்க மாட்டேன் என்கிறது என்று சொல்லி
அழுகின்றது.
இதற்கு நான் என்ன செய்யமுடியும்? நீங்கள் விரும்பிக் கேட்பதைத்தான்
அந்த உணர்வைப் பாய்ச்ச முடியும்.
ஆக, பணம் எங்கேயும் கிடைக்க மாட்டேன் என்கிறது என்று திரும்பத்
திரும்பச் சொல்லி அழுகின்றது.
“அட., சீ போ அம்மா” அப்படி
என்று நான் சொன்னேன். இயக்கிக் கொண்டிருக்கும் அந்த அசுர உணர்வு போக வேண்டும் என்றுதான் அப்படிச் சொன்னேன்.
அதற்கு அந்த அம்மா என்ன செய்கின்றது? என்னை சாமி இப்படி
போகச் சொல்லிவிட்டாரே அழுதுகொண்டே போகின்றது.
அப்புறம் நான் திருப்பிக் கூப்பிட்டு, உனக்குள் பிடிவாதமான
அசுர சக்தி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது.
அதைத்தான் நான் போகச் சொன்னேன்,
உன்னைப் போகச் சொல்லவில்லை என்றேன்.
“ஆகா., அப்படியா? அதற்குச் சொல்கின்றீர்களா” என்று சொன்னது.
பிறகு நான்கு ஐந்து நாள் கழித்து, ஒரு மகராசர் உதவி செய்தார்
இப்பொழுது கடை நன்றாக நடக்கின்றது. கடையில் தொடர்ந்து நன்றாக வியாபாரம் ஆகவேண்டும்
என்று எண்ணி தொடர்ந்து இங்கே வருகின்றது. அந்த எண்ணத்திலேயேதான் வருகின்றது.
3. மூன்றாவதாக, கடன் பாக்கி வரவில்லை என்று கேட்கிறது
அடுத்து மூன்றாவது தடவை வந்தது. சாமி, வியாபாரம் எல்லாம்
நன்றாக நடக்கின்றது. ஆனால், கொடுத்தவர்கள் எல்லாம் பணம் சரியாகக் கொடுக்க மாட்டேன்
என்கிறார்கள். “இதற்கு ஏதாவது
ஆசீர்வாதம் கொடுங்கள்”, என்று மறுபடியும் இப்படிக் கேட்கின்றது!
ஆக, இந்த மாதிரி இவர்கள் ஆசைக்குக் குடும்பத்தை ஒட்டியே
நான் தான் போகவேண்டும் என்று தான் வருகின்றனரே தவிர, நான் சொல்லும் அருள் ஞானத்தைப் பெறவேண்டும்
என்றோ, அதன் வழியில் எந்தத் தீமைகள் வந்தாலும் தடுக்கும் சக்தி பெறவேண்டும் என்றோ எவரும் கேட்பதில்லை.
நான் எத்தனை தடவைதான் சொல்வது. குருநாதரிடம் காட்டிற்குள்
பெற்ற அனுபவத்தைக் காட்டிலும், இந்த நாட்டுக்குள் வந்து நன்மைகளைச் செய்யும் பொழுது,
எனக்கு இத்தனை அனுபவமும் வருகின்றது.
நான் மற்றவர்கள் (உங்கள்) வழிக்குத்தான் வரவேண்டியிருக்கிறது.
“அதைப் பார்த்துக் கொடு, இதைப் பார்த்துக் கொடு” என்ற
ஆசையில் தான் எண்ணி வருகின்றார்கள்.
ஆகவே, இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.