ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2014

பத்து மகரிஷிகள் - போகமாமகரிஷி 4


1. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் போகருக்குள் சிக்குகின்றது
5300 ஆண்டுகளுக்கு முன், ஏழ்மையின் நிலையில் வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில், வறுமை வாட்டிக் கொண்டிருந்தது. அந்தக் குடும்பத்தார் விஷத்தால் தீண்டப்பட்டு, குடும்பம் மாய்ந்திட, அந்தக் குடும்பத்திலிருந்த சிசுதான் போகர். தன் குடும்பத்தில் வறுமை எல்லை கடந்த நிலைகள் வரும்பொழுது, தன் தாய் தந்தையரை எண்ணித் தனித்து அனாதையாகின்றார்.

போகரின் தந்தை, முதலில் இறக்கின்றார். இறந்தபின், தாயின் அணைப்பில் அது வளருகின்றது. தாயைக் கருநாகம் தீண்டி, தாய் மடிந்து விடுகின்றது. தாய் தந்தையர்கள் இல்லாது, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுடன், அவர் இளம் பருவத்தில் ஏங்கித் திரிந்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில், அவர் தனது எண்ணத்தை வலுக்கூட்டி வானத்தை நோக்கி ஏகினார். அந்தக் குழந்தை ஏக்கத்தின் நிலைகள் கொண்டு, சுழன்று வரும்பொழுது, சூரியனையே வானை நோக்கி எண்ணி ஏங்குகின்றது.

அக்காலங்களில், சூரியன்தான் உலகிற்கு வழிகாட்டி. அதன்பின்தான், எதையும் அறியும் தன்மை வருகின்றது. தன் தாய் தந்தையரின் ஏக்கத்துடன் கதிரவனை வணங்குகின்றார். அப்பொழுது அவரை அறியாது, அவரின் ஏக்கத்தின் உணர்வுக்குள், சூரியனின் காந்த சக்திகள் சிக்குகின்றது.
சூரியனையே இறைவனாகக் கருதி,
தன் தாய் தந்தையரின் ஏக்கத்துடன் ஏங்கி திரிந்த உணர்வுக்குள்
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
உணர்வின் ஆற்றல் சிக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் ஒளி காந்த சக்தி, இவருக்குள் ஈர்க்கப்பட்டு, அவருக்குள் மகரிஷிகள் வான இயலின் தத்துவத்தை எப்படி உணர்ந்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் இவருக்குள் பிரம்மமாகின்றது.

இவர் ஏங்கித் தவித்த, உணர்விற்குள் சிக்கியதுதான்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அணுக்கள்.
அது, இவர் உடலில் சிக்கித்தான்
விண் உலகத்தின் நிலையையும்,
இந்தப் புவியின் நிலைகள் கொண்டு, தாவர
இனத்தையும் அறிந்திடும்நிலை அவருக்குள் வந்தது.
2. போகமாமகரிஷி பெற்ற இந்த புவனத்தின் ஆற்றல்
மனிதனுக்கு எவ்வாறு பல நோய்கள் வருகிறது? என்ற நிலையை அறிந்து, அதை மாற்றும் நிலையையும் கண்டுணர்ந்தார் போகமாமகரிஷி.

அதாவது, புவனேஸ்வரி, இப்(பூமி) புவனம் என்பதும், இந்தப் பூமியில் தோன்றிய அனைத்துத் தாவர இனச் சத்துக்களும் பூமி தனக்குள் விண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும் உணர்வின் ஆற்றல் அது ஒன்றுடன் ஒன்று கலந்து அந்த உணர்வின் சத்தான தாவர இனச் சத்துக்கள் எவ்வாறு அது வெளிப்படுகின்றது?

அந்த உணர்வின் சத்தின் ஆற்றல் என்ன? அதனைத் தனக்குள் சுவாசித்து, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றலாக மாற்றி, அந்த உணர்வின் செயல் எவ்வாறு இருக்கின்றது என்பதனைத்தான் போகர் கண்டுணர்ந்தார்.

இதைப் போன்று, தன் உணர்வின் எண்ணத்தாலே இந்த பூமிக்குள் விளையும் அனைத்துப் பொருள்களும் இந்த உடலுக்குள் உண்டு என்ற நிலையையும், இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் தட்டியெழுப்பி, இந்த உணர்வின் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றையும் கண்டுணர்ந்தார்.

இந்தப் பூமிக்குள் தங்கம் எவ்வாறு விளைந்தது?
வைரம் எவ்வாறு விளைந்தது?
மற்ற உலோகத்தின் தன்மைகள் எவ்வாறு விளைந்தது?
என்ற நிலையைத் தன் உணர்வின் எண்ணங்கள் கொண்டு கண்டறிந்தார்.

ஏனென்றால், இந்தப் பூமியில் தோன்றித்தான் ஆவியாக மாறி, மற்ற அணுக்களாக மாறி, தாவர இனங்களாக மாறி, அந்தச் சத்தின் தன்மை அது ஆவியாக மாறும் பொழுது, அது சூரியனின் காந்த சக்தியின் தன்மை கொண்டு ஆவியின் உணர்வலைகளாக மாறினாலும், அந்த உணர்வின் சத்து உடலுக்குள் கலந்தவுடன், எண்ண ஒலிகளாக மாறுகின்றது.

அந்த உணர்வின் தன்மை பொறிகள்.
நாம் உருவான பின், உயிரின் தன்மை துடிப்புக்குள் வரும் பொழுது,
இந்த உணர்வின் அலைகள்
அந்த அங்கங்களாக அசைத்து
அது சொல்லாகவும் செயலாகவும்
உறுப்புக்களை எவ்வாறு இயக்குகின்றது?
என்ற இந்தப் பேருண்மையை
தனக்குள் தான் கண்டறிந்த மெய்ஞானிதான் போகர்.
3. போகர் ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியைத் தனக்குள் எடுத்தார்
அவர் நாளொரு மேனியாக அவர் வாழ்நாளிலே ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடனே, சூரிய உதயத்தின் தன்மை கொண்டு சூரியனின் காந்த இயக்கச் சக்தியை தான் நுகர்ந்து எடுத்து, பின் இன்றைய வாழ்க்கையின் நிலைகள் குணத்தின் சிறப்பும், அந்த உணர்வின் தன்மையின் ஆற்றலயும், தனக்குள் அந்தச் சக்தியின் தன்மையைச் சேர்த்து, சக்தியின் இயல்புகள் எவ்வாறு செயல்படுகின்றது என்ற உண்மையின் தன்மையைத் தனக்குள் எடுத்தார்.

அதுதான், ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியைக் காதலித்தார் என்பது.

இந்தச் சக்தியைத் தனக்குள் எடுத்து, தனக்கும் தன்னைச் சார்ந்துள்ள மக்களுக்கும் தன்னைச் சார்ந்து வருவோருக்கும் கொடுத்தார்.
4. போகமாமகரிஷி, தான் பெற்ற சக்தியை எல்லோருக்கும் பாய்ச்சுகின்றார்
மனிதர்கள் அவர்கள் சந்தர்ப்பத்தாலே எடுத்துக் கொண்ட நிலைகள் பிணியாகி, உடல் கெடுகின்றது. அதனால் பல இன்னல்களையும், மனோவேதனைகளையும் அனுபவிக்கின்றனர்.

அப்படி, தன்னையறியாமல் சிந்தனையற்ற நிலைகள் சிதறுண்டு இருக்கும் நிலைகள் கொண்ட மக்களுக்கு, “தன் ஒளியைப் பாய்ச்சி” அந்த உணர்வுக்குள் இருக்கக் கூடிய தீயவைகளை மாய்த்து, மனிதனை மகிழ வைத்தார்.

தன் ஆற்றல்மிக்க நிலைகளை, தான் எந்தச் சக்தியை எடுத்தாரோ அதே சக்தியைத் தன்னைச் சார்ந்த மனிதனின் உடலில் பாய்ச்சி, அவன் உடலில் இருக்கக் கூடிய தீய வினைகளை நீக்கி, அவர் சார்புள்ள மக்களாக மாற்றினார் போகமாமகரிஷி.
5. போகர் எதைத் திருடினார்? எதைச் செலவழித்தார்?
 “போகரை திருடன், திருடன்என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார் குருநாதர்.

என்ன சாமி, அவர் (பழனி) கோயிலிலே நாம் இருந்து கொண்டிருக்கிறோம். அவர் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்திருக்கிறாரேஅப்பொழுது எமக்கு அதிக விளக்கம் தெரியாததால், குருநாதரிடம் யாம் கேட்டோம்.

உனக்குத் தெரியாதுடா., பக்காத் திருடன்அவன் என்பார் குருநாதர். அப்புறம்தான் திருடன் என்ற சொல்லுக்கே வியாக்கியானம் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு தாவர இனத்தில் உள்ள சத்தையும் போகன் திருடி, அது என்ன நன்மை செய்யும் என்ற நிலைகளைத் தனக்குள் திருடி, அவன் செலவழிக்கத் தொடங்குகின்றான். அவன் திருடிய சொத்து, பிறருடைய நிலைகளுக்கு நன்மை செய்யப் பயன்பட்டது.

ஆக நீ எதைத் திருடப் போகிறாய்? நன்மை செய்யும் அந்த உணர்வின் தன்மையைத் திருடப் போகிறாயா? அல்லது, பிறருடைய நிலைகளில் அவர்களைக் கஷ்டப்படச் செய்து, அவர்களுடைய சுகத்தை நீ திருடப் போகிறாயா? இப்படி வினாக்கள் எழுப்பினார் குருநாதர்.

போகன் எவ்வளவு பெரிய சக்தி பெற்றாலும், அவனைத் திருடன் என்று குருநாதர் சொல்லுகின்றார். நாம் எதைத் திருட வேண்டும்? உயர்ந்த அருள் ஞானத்தைத் திருட வேண்டும். நமக்குள் தீமைகளை அடக்கும் அந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

அருள் ஞானம் பெறுவதற்கு, நன்மை செய்யும் உணர்வை அங்கே போதிக்க வேண்டும். ஏனென்றால், திருடியதை மறுபடியும் செலவழித்துத்தானே ஆகவேண்டும்.

ஆகவே, அந்த அருள் ஞானத்தைப் பெறும் பொழுது, அதைத் திருடினால், அந்த உணர்வை எடுத்துத்தான் நம் வாழ்க்கைக்குச் செலவழிக்க முடியும்.

போகன் தன் உணர்வின் தன்மை, தனக்குள் அந்த உயர்ந்த நிலையைத் திருடினான், உயர்ந்த  நிலைகளைச் செலவழித்தான். அதைப் பெற்றுக் கொண்டு, அந்த மகிழ்ச்சியின் நிலைகளில் இங்கே கொடுக்கின்றார். அந்த மகிழ்ச்சியே மூலதனமாகின்றது. மகிழ்ச்சியில், அவன் எதிர்காலம் வளர்க்கும் தன்மை பெறுகின்றது.

இப்படித்தான் நாம் பிறருடைய நிலைகளில், ஒவ்வொருவரையும் மகிழச் செய்யும் தன்மைகள் கொண்டு, அதிலே நாம் பேரானந்தப்படவேண்டும் அதுதான் நமக்கு அழியாச் சொத்தாக வரும்.

ஏனென்றால், எம்மைப் பக்குவப்படுத்துவதற்கு அந்த நிலையைத் தெளிவுபடுத்தினார். இப்பொழுது அவர் வழிகளில், அவர் கொடுத்த சக்திகளைப் பயன்படுத்துகிறோம்.