ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 28, 2014

பத்து மகரிஷிகள் - அகஸ்தியர் 2

1. காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு விண்ணின் ஆற்றல் எப்படிக் கிடைத்தது?
ஆரம்பத்தில் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், காட்டிற்குள் அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் தான் வாழ்ந்திட மற்ற விஷப்பூச்சிகளிடமிருந்து தப்பிக்கவும், மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், மிக சக்தி வாய்ந்த தாவர இனங்களைத் தன் உடலில் முலாமாகப் பூசிக்கொண்டனர்.

அவர்கள் உடலிலிருந்து வரும் முலாமாகப் பூசிய மணங்களை நுகர்ந்தபின், விஷ ஜெந்துக்கள் இவர்களை அணுகாது இந்த மணத்தைக் கண்டு விலகிச் செல்கின்றது. அதிலிருந்து தன்னைக் காத்திடும் நிலை பெற்றார்கள்.

அந்தத் தாவர இனச் சத்தின் விஷத்தின் தன்மை, தாயின் உடலில் சிறுகச் சிறுக இணைகின்றது. இரவில் மிருகங்களிடமிருந்து காத்துக் கொள்ள இவ்வாறு செய்து வாழ்ந்து வந்தனர்.

இருளில் இரை தேடி வருபவைதான் மிருகங்கள். ஆனால், ஒளி கண்டபின் மறைந்து கொள்கின்றது. ஆகவே, மக்களைக் காக்க கடவுள் இன்று பிரகாசித்து வருகின்றான் என்ற எண்ணத்தில் சூரியனையே வணங்கிப் பழகியவர்கள்.
2. ஆதியிலே காட்டு மனிதருக்கு இந்த சக்தி எவ்வாறு கிடைத்தது?
புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும்
ஒவ்வொரு தாவர இனங்களையும் மணத்தால் நுகர்ந்து,
அதை உணவாக எடுத்துத் தன் உடலிலே சேர்த்து,
அந்த உணர்வின் எண்ணமாக வளர்ந்து,
இவ்வாறு பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு
அந்த மணத்தின் தன்மை தன் உடலுக்குள் எண்ணமாகி
அந்த உணர்வின் இயக்கமாக தன்னைக் காத்து
அந்தத் தாவர இனத்தின் உணர்வுக்கொப்ப
இந்த உடலின் அமைப்புகள் அமைந்து
இவ்வாறு நம்மை மனிதனாக ஆக்கியது.

மனிதனுக்குள் உணர்வின் நிலைகள் எண்ணத்தின் வீரிய நிலைகள் அடைந்தது. அப்படி அமைந்த மனிதன் தான், எந்தெந்தத் தாவர இனத்தை ஆரம்பத்தில் எடுத்தானோ அந்த உணர்வின் ஆற்றல் அந்த முதல் மனிதனுக்கு வருகின்றது.

தன்னைக் காத்திடும் உணர்வின் நிலைகள் வரப்படும் பொழுது, தான் புசித்த உணர்வின் அலைகள் காட்டுக்குள் இருக்கும் ஆதி மனிதனுக்கு இது தோற்றுவிக்கின்றது.
3. தாய் கருவில் இருக்கும்போது அகஸ்தியர் பெற்ற ஆற்றல்
ஆக, விஷப்பூச்சிகளிலிடமிருந்து காத்துக் கொள்ள இந்த உணர்வின் மணத்தை தனக்குள் முலாமாகப் பூசி, சூரியனையே வணங்கி வந்தனர். இந்நிலையில் கருவாகின்றார் அகஸ்தியர் என்று நாம் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவர்.

அகஸ்தியனின் தாய், நஞ்சு கொண்ட உயிரினங்கள் தன்னைத் தாக்காது தன்னை அணுகாது தாவர இன நஞ்சினை முலாமாகப் பூசி, அந்த உணர்வின் சத்தைத் தனது உடலுக்குள் எடுத்துக் கொண்டது.

இதைப் போல, தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையை எண்ணி எத்தகைய நிலையும், குழந்தையைக் கண்டபின் அருகிலே வராதபடி, அது வீரிய உணர்வுகள் பெற்று, தன் குழந்தை வளரவேண்டும் என்று அந்தத் தாய் எண்ணுகின்றது.

தாய் பூசிக்கொண்ட அந்த முலாமின் உணர்வின் தன்மை,
கருவிலே இருக்கும் குழந்தைக்கு,
நஞ்சினை வெல்லும் ஆற்றலாக உருப்பெறுகின்றது. கருவாகின்றது.

இதனின் வழியில் அவர்கள் வளர்ந்து வரும் பொழுதுதான் இவர்கள் சூரியனை வணங்கி,  அந்தச் சூரியனின் காந்தச் சக்தியிலும் இவர் எடுத்துக் கொண்ட நஞ்சினை வெல்லும் உணர்வின் ஆற்றல் பெருகி அதனின் உணர்வின் நிலையைக் கொண்டு, அவர்களுக்கு காட்டிலே தன்னைக் காத்துக் கொள்ளும் ஞானத்தின் நிலைகள் வருகின்றது.

அகஸ்தியர் அங்கே குழந்தையாகப் பிறந்தபின், அவர் அருகிலே நஞ்சு கொண்ட மிருகங்கள் வருவதில்லை. அது கொஞ்சித் திரியும் நிலைகளுக்கு வந்துவிட்டது.

தாய் தந்தை முலாம் பூசிய இந்த உணர்வுகள் நஞ்சினைக் கொண்ட உணர்வுகள் தன் மணத்தைக் கண்டு விலகிச் சென்றாலும்
நஞ்சு கொண்ட மிருகங்கள் அனைத்தும் இவரைத் தீண்டாது
பாதுகாக்கும் நிலையில் அமைகின்றது.

இதைக் கண்டு அந்தத் தாய் தந்தையர், கடவுளின் அவதாரமாக நம் குழந்தை பிறந்திருக்கின்றது என்று பேரானந்த நிலை பெற்று, சூரியனை வணங்கி குழந்தைக்கு அவனேதான் அருள் கொடுத்தது என்று, அவர்கள் அறியாமல் இயங்கி நிலைகள் கொண்டு அந்தக் குழந்தையைப் போற்றிக் காத்து வந்தனர்.
4. அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்
அகஸ்தியர் தம் தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபொழுது பெற்ற பூர்வபுண்ணியத்தால், அவர் தம்முள்  விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலை கருவிலேயே பெற்றார். 

அவர் குழந்தையாகப் பூவுலகில் பிறந்தபின், திறந்தவெளியில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் சூரியனை உற்றுப்பார்க்கின்றார். சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தை நுகர்கின்றார், அது சமயம் அவைகள் அவருக்குள் அடங்குகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்க உணர்வுகள், ஒன்றுடன் ஒன்று மோதும்பொழுது மின்னல்களாக, மின் கதிர்களாக புவியில் பரவுகின்றது.
அதனில் கலந்து வரும் விஷத்தை அகஸ்தியர் நுகர்கின்றார்.
அதுவும் அவருக்குள் அடங்குகின்றது.

இப்படி,  தமது குழந்தைப்பருவத்தில் கண்ணால் பார்த்து நுகர்ந்த உணர்வுகள், அகஸ்தியருக்குள் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஒளிக்கதிர்களாக மாறுகின்றது. 

மின்னல் எப்படிப் பல நிலைகளிலும் ஊடுருவிச் சென்று தாக்குகின்றதோ, அதே போன்று
அகஸ்தியருடைய நினைவாற்றலும்,
விண்ணில் பரவும் தன்மையினைப் பெறுகின்றது.

ஆகவே, அகஸ்தியர் ஒளிக்கதிரில் நுண்ணிய அலைகளைப் பார்க்கக்கூடிய ஆற்றலைப் பெற்றார்.
5. நஞ்சினை வென்றிடும் ஆற்றலை அகஸ்தியர் எப்படிப் பெற்றார்?
அகஸ்தியருடைய தாய் தந்தையர் உடலில் அதிகமான நஞ்சின் தன்மை (தாவர இனங்கள்) பூசி அதனின் உணர்வுகள் சிறுகச் சிறுக அவர்கள் உடலில் விளைந்து, இந்தக் குழந்தை ஐந்து வயது ஆவதற்கு முன் தாய் தந்தையர் இருவரும் மடிந்து விடுகின்றனர்.

அவர்கள் மடிந்தபின் அகஸ்தியர் தனித்து வாடுகின்றார். இந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு காலை கதிரவனைப் பார்த்து, “என்னை ஈன்ற தாய் தந்தையர் மறைந்துவிட்டனர்”,
அவர்களின் அருளை நான் பெறவேண்டும்,
அவர்களின் அணைப்பு எனக்கு வேண்டும்.
என் அன்னை தந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஏங்குகின்றார்.

தன் அன்னை தந்தையைப் பெறவேண்டும் என்ற உணர்வை அறியாப் பருவத்தில் விண்ணை நோக்கி, ஒளிச் சுடராக வீசி வரும் கதிரவனை எண்ணி ஏங்கி, அந்தக் கதிரவனின் காந்தப்புலனின் ஆற்றலை இவர் பெறுகின்றார்.

அப்படி வணங்கப்படும் பொழுதுதான், தன் தாயின் கருவிலே பெற்ற அவர் உடலுக்குள் விளைந்த நஞ்சின் உணர்வின் தன்மை நஞ்சினைக் காணும் நிலை ஏற்படுத்துகின்றது.

தாய் தந்தையரை எண்ணி, அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டு கதிரவனைப் பார்க்கப்படும் பொழுது, சூரியனிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர் உணருகின்றார்.

இன்று விஞ்ஞானிகள் அல்ட்ரா வயலட் என்று சொல்வதை, அன்று இவர் உடலிலிருக்கும் நஞ்சான உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு சூரியனிலிருந்து வரும் நஞ்சினைக் கண் கொண்டு பார்க்கின்றார்.
6. அணுவின் ஆற்றலை அறிந்தவர் அகஸ்தியர்
இவர் அறியாத நிலைகளில் இருந்தாலும், இவர் உடலில் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் இவர் எதை எடுத்து சூரியனை வணங்கினாரோ, அந்த ஞானத்தின் தொடராக அந்தக் காந்தப்புலனின் ஆற்றல் பெருகி, இவர் எண்ணத்தின் நிலைகள் வலுப்பெற்று, சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த உணர்வினை உற்று நோக்க, அதனின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தார் அகஸ்தியர்.

அதிலிருந்து வெளிப்படும் நஞ்சும், சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப்புலன்களும், அதைக் கடந்து வரப்படும் பொழுது அந்த அணுவின் இயக்கங்கள் எவ்வாறு மாறுகின்றது? என்று முதலில் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர்.

ஆகையால் விண்ணுலக ஆற்றலும் அதனின் பரிணாம வளர்ச்சியில் அணுவின் ஆற்றலும், பிரபஞ்சத்தின் உரு நிலையையும், இளம் பிஞ்சு உள்ளத்திலேயே மெய் உணர்வைக் காணும் நிலைகள் அவருக்குள் வளர்ந்தது.

தாயின் கருவிலிருந்து பெற்று, அவருக்குள் வளர்ந்த நிலைகள்தான் நஞ்சு வலு கொண்டதாகவும்,
நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் வளர்ந்ததனால்
நஞ்சு கொண்ட நிலைகளைப் பிளந்து
நல்ல உணர்வின் தன்மையை
அவர் அறிந்திடும் உணர்வு பெற்றார்.

முதல் நிலையில், அவர் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான்
பிரபஞ்சத்தின் இயக்கமும், பிரபஞ்சத்தில் அணுவின் ஆற்றலும்,
அணுவின் ஆற்றலின் பெருக்கமும்
அதனின் நிலைகள் கொண்டு கோள்களாக ஆனது என்பதையும்,
கோள்கள் நட்சத்திரமாக ஆனது என்பதையும்,
நட்சத்திரங்கள் சூரியனாக ஆனது என்பதையும் கண்டுணர்ந்தார்.

பின், சூரியனிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் கோள்களாக மாறி, அது நட்சத்திரமாகி, ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெற்றது என்பதனை, முதல் உண்மையின் நிலையை அன்று பரிணாம வளர்ச்சியின் நிலையையும், அணுவின் வளர்ச்சியின் நிலையையும் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர்.