ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 6, 2020

எது எப்படி இருந்தாலும்... “துருவ நட்சத்திரத்தின் நினைவிற்கு” நாம் வந்து கொண்டே இருக்க வேண்டும்


பல கோடிச் சரீரங்களில் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

அதே வளர்ச்சிப் பாதையில்...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இப்பொழுது நமக்குள் எடுத்து
2.அந்தக் கணக்கைக் கூட்டினால் நாம் பிறவியில்லா நிலை அடைவோம்.
3.இதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்
4.நாம் எங்கே போகின்றோம்...? என்பது முன்னாடியே தெரியும்.
5.சொல்ல முடியும்... நான் இங்கு தான் போகின்றேன் என்று...!

உதாரணமாக கோபியைச் சேர்ந்த ஒரு அன்பர் “நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்” என்று சொல்லிவிட்டே போகின்றார். அதையே அவர் வீட்டில் காட்சியும் கொடுத்திருக்கின்றார்.
1..நான் சப்தரிஷி மண்டலம் போகின்றேன்
2.என்னைப் பற்றி எண்ணி அழுகாதீர்கள்...!

அவர் வீட்டில் அவர் மனைவிக்கு இந்தத் தியானம் பற்றிய விவரம் தெரியாது... தியானத்திற்கும் வராதவர். ஆனால் இவர் தான் தியானம் செய்வார். இருந்தாலும் இதை எல்லாம் அவர்களுக்கு உணர்த்தி விண் சென்றுள்ளார்.

ஏனென்றால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் உறுப்புகளில் இணைத்து ஒளியாக ஆக்கி விட்டால் அடுத்து ஒளி உடல் பெறுகின்றோம் அவ்வளவுதான்...!

இது தான் விஜய தசமி... உயிரைப் போல உணர்வுகள் ஒளியாகின்றது... கல்கி...!

1.இந்தப் பிரபஞ்சமே அழிந்தால் கூட துருவ நட்சத்திரம் அழிவதில்லை
2.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் பழக்கத்திற்கு நாம் வந்துவிடவேண்டும்.

ஆகவே...
1.எது எப்படி இருந்தாலும்... அந்தத் துருவ நட்சத்திரத்தின் நினைவிற்கு “நாம் வந்து கொண்டே இருக்க வேண்டும்...”
2.கஷ்டம் என்ற நினைவை உள்ளுக்கே விடாதபடி நாம் தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும்.

எதாவது ஒரு சிறு மாற்றம் வந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே அல்லது வேலை செய்யும் இடங்களிலோ ஏதாவது எதிர்பாராது குறைகள் வந்தால் அந்தத்  துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியை உடனே எடுத்து வலு சேர்க்க வேண்டும்.
1.அது கொஞ்ச நேரத்தில் சிந்தனை கிடைக்கும்.
2.என்ன செய்ய வேண்டும்...? என்று அமைதியும் சாந்தமும் விவேகமும் அந்த இடத்தில் வளரும்.

இது மாதிரி அனுபவத்தில் வந்தால் எதையுமே சீர்படுத்தும் வலிமை நீங்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் பெற முடியும்.
1.கொஞ்ச நாள் அனுபவித்துப் பாருங்கள்... உங்களால் பெற முடியும்.
2.கவலை என்பதை விட்டுவிடுங்கள்
3.சோர்வு என்பதை விட்டுவிடுங்கள்
4.வெறுப்பு என்பதை விட்டுவிடுங்கள்.
5.வேதனை என்ற நிலையை விட்டுவிடுங்கள்

இதே மாதிரிச் செய்யுங்கள்.

செய்த நிலையில் எனக்கு நல்லதானது என்று மற்றவருக்குச் நீங்கள் சொல்லப்படும்போது அவர்களுக்கும் அந்த உற்சாகத்தை ஊட்ட முடியும்.

அதே மாதிரி யாம் (ஞானகுரு) இல்லை...! என்று எண்ண வேண்டியதில்லை. யாம் உபதேசித்த கருத்துக்களை... அந்த ஒலி நாடாக்களை எடுத்துப் போட்டு விளக்கங்களைக் கொடுங்கள். சும்மா இருக்கும் நேரத்தில் இதன் வழி செயல்படுத்தி மற்றவரையும் கேட்கச் செய்யுங்கள்.
1.இப்படிப்பட்ட அருள் உணர்வுகளை நுகர்வதும் அதை வெளிப்படுத்துவதும்
2.அறியாது வரும் இருளை நீக்குவதுமே நம் வாழ்க்கை என்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.

இன்றைய உலகில் எந்தப் பொருளைத் தேடினாலும் அது எதுவுமே நமக்குச் சொந்தம் இல்லை.
1.நாம் சொந்தமாக்க வேண்டியது அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைத்தான்...!
2.அதைச் சேர்த்து உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியின் உடலாகப் பெற்று
3.துயரற்ற நிலையாக இன்னல் இல்லாத நிலையை அடைவதுதான் கடைசி நிலை.

பல கோடி உடல்கள் பெற்றுத் தீமைகளிலிருந்து நீக்கிடும் சக்தியாக இந்த உயிர் தான் மனித உடலை உருவாக்கியது. இந்த மனித வாழ்க்கையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக்கிக் கொண்டால் அழியா ஒளி உடல் பெறுகின்றோம்.

June 5, 2020

உடலில் நோய் வரக் காரணமும் நோய் வராது தடுக்கும் வழிகளும்


ஒருவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தால் அது இரத்தத்தில் கலந்து கருவாகி முட்டையாகின்றது.

இரத்தம் சுழன்று வரும் போது நம் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் ஒட்டி அந்தக் கரு முட்டை வெடித்து அது அணுவாகத் தோன்றுகின்றது.
1.வேதனையால் உருவான அந்த அணு
2.அதே வேதனை என்ற உணர்வை உணவாக உட்கொள்ளத் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்போது
3.நம் உயிருக்குள் வருகின்றது அந்த உணர்ச்சிகள்...!

அந்த உணர்ச்சியின் வழி கொண்டு உயிர் ஆணையிட்டு நம் கண்ணால் கவர மீண்டும் கண்ணுக்கே அனுப்புகின்றது அந்த உணர்வுகள். வேதனைப்படுவோரின் அந்த உணர்வுகள் படமாக... அவரைப் பற்றிய நினைவு கண்ணுக்குத் தான் வரும்.

எந்த மனிதன் வேதனைப்பட்டானோ அந்த மனிதன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வினை நுகரச் செய்கின்றது இந்த உயிர். நம் உயிரிலே பட்டபின்
1.நம்மை அறியாமலே நாம் வேதனைப்படுகின்றோம்
2.வேதனையான சொல்களைச் சொல்லுகின்றோம்
3.வேதனையான உணர்ச்சிகளைக் கொண்டு வேதனையான செயல்களைச் செய்யத் தொடங்கிவிடுகின்றோம்.

இது நம்மை அறியாமல் இயக்கும் நிலைகள். நாமல்ல... இந்த உணர்வுகள் தான் இப்படி வேலை செய்கின்றது.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒளி அலைகளைப் பரப்பப்படும்போது நம் வீட்டில் டி.வி.யை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்வின் இயக்கமாக பாடலும் ஆடலும் வருகின்றது

இதைப் போலத்தான் நம்முடைய உணர்வுகளின் இயக்கமும்...!

உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு உடலிலே அணுவாக விளைந்த பின் அதே உணர்ச்சிகளை நமக்குள் தூண்டி அந்த நினைவின்  எண்ணமாக
1.சொல்களைச் சொல்லச் செய்வதும்
2.நம் உடலை அசையச் செய்வதும்
3.அதன் வழி நம்முடைய செயல்களைச் செயலாக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

இருப்பினும்... அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நம் உறுப்புகளில் இணைந்து விட்டால் அது உணவாக உட்கொள்ளும் உணர்வின் சத்து அதனுடைய மலமாகும் போது நம் உடலாக அமைந்து விடுகின்றது.

இப்படி அந்த வேதனையான அணுவின் மலம் நம் உடலுடன் இணையப்படும் போது உடலில் உள்ள நல்ல அணுக்களின் மலத்தில் இந்த தீமையின் அணுவின் மலம் சேர்க்கப்படும்போது என்ன ஆகின்றது...?

நல்ல அணுக்களுடன் வேதனை அணுக்கள் சேர்ந்தவுடனே...
1.உடலில் சில பாகங்களில் பளீர்... பளீர்... என்று மின்னும்...
2.ஊசியால் குத்துவது போல் வலி வரும்...
3.உடல் உறுப்புகளில் வேதனை ஏற்படத் தொடங்கும்.

உதாரணமாக சர்க்கரைச் சத்து நோய் வந்து விட்டால் அந்த அணுக்கள் உடலிலே உருவாக்கிவிட்டால் நம் உடலில் உள்ள மற்ற உறுப்புக்களை கரைக்கச் செய்து இரத்தத்தைக் காணாமலே செய்து விடுகின்றது. உடலிலே புண் வந்தால் அதுவும் ஆறுவதே இல்லை.

இந்த விஷக் கிருமிகள் உடல் முழுவதும் பரவப்பட்டு சீக்கிரமாக இந்த உடலையே முடித்து விடுகின்றது.

இரத்தக் கொதிப்பு வரப்படும்போது அந்த உணர்ச்சியின் வேகங்கள் உயிரிலே இணைந்து துடிக்கப்படும் போது உடலில் உள்ள கை கால் அங்கங்களை முடக்கச் செய்து விடுகின்றது.

வேதனை வேதனை என்ற உணர்வின் சத்தை நுகர்ந்தால் என்ன ஆகின்றது...?

உதாரணமாக ஒரு விஷத்தைச் சாப்பிட்ட பின் உடல் எப்படித் துவண்டு விழுந்து செயலற்ற நிலையில் ஆகின்றதோ இதைப் போல விஷத்தின் அணுக்கள் உடலிலே விளைந்து அது வாத நோயாக மாறி உறுப்புகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

இவை எல்லாம் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய நிலைகள் தான்.

பிறருடைய துயரங்களையும்... பிறருடைய கஷ்டங்களையும்... பிறருடைய துன்பங்களையும்... பிறருடைய வேதனைகளையும்... நாம் நுகர்ந்தறிந்து மனிதப் பண்புடன்... பரிவுடன்... ஈகையுடன்... இரக்கத்துடன்... நாம் சேவை செய்யும் மனப்பான்மையில் அவர்களுக்கு உதவிகள் செய்கின்றோம்.

ஆக... அவர்கள் படும் வேதனை உணர்வை நுகரப்படும்போது “வேதனைப்படுகின்றனர்... என்று உணர்த்துகின்றது.
1.ஆனால் அந்த வேதனையான உணர்வின் அணுவாக நம் உயிர் மாற்றுகின்றது.
2.அதனின் கருவாக உருவாக்கி விட்டால் அதே அணுவின் தன்மை ஆனபின்
3.அது நம் உடலிலே துன்பத்தை உருவாக்கும் நோய் நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

இதை யார் காப்பது...?

பிறருடைய வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தாலே அடுத்த கணம் அதை நாம் வேக வைத்தல் வேண்டும். எவ்வாறு வேக வைக்க வேண்டும்...?

காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடல் உறுப்புகளுக்கும் உடலில் உள்ள அணுக்களுக்கும் வலு ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்றால் இந்த யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் அருள் உணர்வுகளை செவி வழி உங்களுக்குள் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணுதல் வேண்டும்.

பிறர் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்து அவருக்குத் தக்க உபகாரம் செய்தாலும் நாம் அடுத்த கணம் ஈஸ்வரா என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டிடல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... என்று
2.புருவ மத்தியில் எண்ணி ஒரு இரண்டு நிமிடம் அங்கே நிலை நிறுத்த வேண்டும்.
3.நாம் நுகர்ந்த வேதனைப்பட்ட உணர்வு நம் ஆன்மாவாக இருப்பதை நுகராதபடி
4.தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் செல்லாதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

June 4, 2020

“கலியும் கல்கியும்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


அன்றைய மெய் ஞானிகளின் செயலால்... மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சி இன்றும் உள்ளது.

இருந்தாலும் இன்று... இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை...
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.

பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.

ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான்  இன்றைய “கலியின் மாற்று நிலை...!”

ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும்  இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்

இத்தனை விபரீத பாதிப்புகளால்... மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி... மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்... அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்... குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.

இத்தகைய தருணத்தில்...
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.

நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு  வர வேண்டும்.

இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.

1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.

இந்த உடலுடன் வாழும் நிலையில்... உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு...
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்... அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

June 3, 2020

நான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும்


குருநாதர் எனக்கு அருள் கொடுத்திருக்கின்றார்... எல்லாம் நடக்கின்றது...! என்ற நிலையில் இரு... நான் பார்க்கின்றேன்..! என்ற அகந்தை கொண்டு
1.ஒருவனைத் தாக்க நான் எண்ணினால்
2.அந்த உணர்வின் தன்மை எனக்குள் பெருகிவிட்டால்
3,அந்த அகந்தை என்னை அழித்துவிடும்.
4.குரு அருள் எனக்குள் மடிந்துவிடும்.

ஆகவே இதைப் போன்ற தீமைகள் என்றுமே நமக்குள் புகாது துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கிப் பழக வேண்டும். இந்த உடலுக்குப் பின் எது என்ற நிலை மிகவும் முக்கியமானது.

நான் தியானம் செய்தேன்... என் உடம்புக்குச் சரியில்லை...! நான் தியானம் செய்தேன்... என் தொழில் கெட்டுப் போய் விட்டது..! என்று சொன்னால் என்ன அர்த்தம்...?

இதைத் திருத்தினால்... இந்தத் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதை வலுவாக்கிக் கொண்டால் தான் நம் வாழ்க்கையைச் சீராக வழிப்படுத்தும் எண்ணமே நமக்குள் வரும்.

அது மட்டுமல்ல...! ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளறிந்து செயல்படும் உணர்வுகளும் வாழ்க்கையில் நம்மைப் பண்புடன் வாழச் செய்யும் உணர்வுகளும் நமக்குள் வளரும்.

சந்தர்ப்பத்தால் தொழில் நஷ்டமாகி விட்டது என்றால்
1.அந்த நஷ்டத்தை மீட்கும் சக்தியை எண்ணு எடுப்பதற்கு மாறாக
2.வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது... நம் செயலும் குறுகுகின்றது.
3.ஒரு நல்ல பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நம் சிந்தனையும் வீழ்ந்து விடுகின்றது.

இதைப்போன்ற துயர்களில் இருந்தெல்லாம் விடுபட்டு... பேரருள் என்ற உணர்வினை வளர்த்திடும் அரும் பெரும் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

1.ஏதோ சாமி (ஞானகுரு) சொல்கின்றார்...
2.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார் என்று நினைக்கக் கூடாது.

ஏனென்றால் நான் அந்த அருளைப் பெறுகின்றேன். அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கின்றேன்.

செவி வழி நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பதிவாக்கும் பொழுது அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் “அதை நீங்கள் நிச்சயம் பெற முடியும்...!”

உதாரணமாக ஒருவன் நம்மை ஏசினால்
1,என்னை இப்படி ஏசினான்... ஏசினான்... ஏசினான்... என்று
2.அந்த உணர்வினை திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்ச்சிகள் வலுவாகின்றது.

பின் நாம் எதைச் செய்கின்றோம்...? கோபம் என்ற உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அவரைத் தாக்கும் உணர்வுகளே வலுவாகின்றது.

அவன் சொன்ன உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
1.நாம் தொலைய வேண்டும் என்று அவன் எண்ணுகின்றான்.
2.அதே உணர்வு நமக்குள் வந்தபின் நம்மிடமுள்ள நல்ல எண்ணங்களத் தொலைத்தே விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட... தீமை என்ற உணர்வுகள் புகாது... அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெற்று பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதைப் படிப்போர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்... பேரொளியாக மாறுங்கள்.

புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை...?


குழம்பு வைக்கத் தெரிந்தவரிடம் குழம்பிற்குண்டான சரக்குகளை எடுத்து மொத்தமாகக் கொடுத்தால் அதைப் பழகியவர் என்ன செய்வார்...? எதை எதை எந்தெந்த அளவு போட்டால் அது ருசியாக வரும் என்று அதைப் போட்டுச் சமைப்பார்.

ஆனால் தெரியாதவர் கையில் கொடுத்தால் என்ன செய்வார்...? இதிலேயும்... அதிலேயும்... என்று மொத்தமாக கொட்டி இப்படித்தான் குழம்பிலே போடச் சொன்னார்கள்...! என்று மொத்தமாகப் போட்டால் என்ன ஆகும்...? எது அதிகமோ அதன் சுவையாக மாற்றிவிடும்.

இதைப் போலத் தான் இன்றைய சகஜ வாழ்க்கையில்
1.தீமையை அகற்றும் நிலையோ...
2.பகைமை உணர்வு நமக்குள் வராது தடுக்கும் நிலையோ இல்லாது
3.அருள் ஞானியின் உணர்வை நமக்குள் பெருக்காத நிலையோ தான் வருகின்றது.

இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்..?

ஈஸ்வரா... இப்படி நோய் வந்து விட்டதே... இவருக்கு இப்படி ஆகி விட்டதே...! என்று சொல்லிவிட்டு
1.துருவ நட்சத்திரத்தையும் எண்ணி விட்டு
2.இவரை எண்ணி வேதனைப்பட்ட்டு இந்த இரண்டையும் கலந்தால் என்ன செய்யும்...?

வேதனை என்ற உணர்வே வலுப் பெறுகிறது. அப்பொழுது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெறாது தடைப்படுத்துகின்றது. ஆகவே இந்த வேதனை உணர்வு தான் வரும்.

இதைச் சீராக்கும் வழி என்ன...?

வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா... என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா.. என்று ஏங்கி அங்கே “நிலை நிறுத்துங்கள்...”  
3.கண்கள் + துருவ நட்சத்திரம் + புருவ மத்தி.. இந்த மூன்றையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நிலை நிறுத்தினால்...
4.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது... வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது.;; வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது...!

ஆகவே நாம் இதைத்தான் அந்த நேரத்தில் நாம் விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது.
1.எப்போதுமே பிறருக்கு நன்மை செய்தாலும்
2.அந்த தீமைகள் நமக்குள் புகாது பாதுகாத்தல் வேண்டும்...!

June 2, 2020

நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை

சூரியன் மற்றொரு பிடிப்பில் இல்லாததை எல்லாம் தனக்குள் கவர்கின்றது. கவர்ந்து தன் அருகிலே கொண்டு சென்றால் அதைப் பஸ்பமாக்கி விடுகின்றது. மீண்டும் பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

உதாரணமாக நாம் ஒரு நோயாளியைப் பற்றி விசாரித்து அவர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிந்தால் அது நமது ஆன்மாவில் நிற்கும். அதைச் சுவாசிக்கும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டும். (ஆன்மாவிலிருப்பதைத்தான் நாம் சுவாசிக்க முடியும்)

அவர் நோயால் வேதனைப்படுகின்றார். ஆனால் அவரின் வேதனையான உணர்வை நுகர்ந்து நாமும் வேதனைப்படத் தொடங்குகின்றோம்.

அந்த வேதனை நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?
1.ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி
2.புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று
4.கண்ணின் நினைவு கொண்டு ஏங்கி எடுத்தால்
5.நமக்கு முன்னாடி இருக்கும் ஆன்மாவில் இருப்பதை இழுக்காது...
6.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கவரப்படுகின்றது
7.வேதனப்படும் உணர்வின் ஈர்ப்புத் தன்மை குறைந்ததனால் நாம் ஈர்க்காமல் விட்ட
8.நம் ஆன்மாவில் இருக்கும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை
9.சூரியன் காலையில் அழைத்துக் கொண்டு மேலே சென்றுவிடுகின்றது
10.நமது ஆன்மா தூய்மையாகின்றது... தீமையான அணுக்கள் வளராது தடுக்கின்றது
10.தீமையான அணுக்களுக்கு உணவு போகாமல் தடுக்கின்றது.

அதற்குப் பின்  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி ஏங்கிவிட்டு அந்த நோயாளியைப் பார்த்து.. துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீ பெறுவாய்... உன் நோய் நீங்கிவிடும்... நீ நலமாவாய்...! என்று சொல்ல வேண்டும்.

இந்த முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழியாக எண்ணி எடுக்கும் போது
1.தீய அணுக்களுக்குப் போகும் வேதனையை உருவாக்கும் உணர்வுகள் தடைப்படுத்தப்படுகின்றது.
2.நம் ஆன்மாவிலிருந்து விலக்கித் தள்ளியதைச் சூரியன் காலை ஆறு மணிக்கெல்லாம் எடுத்துச் சென்று விடுகின்றது.

தீய அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல் தடைப்படுத்தப்படும் போது தீய அணுக்களின் வளர்ச்சி குறைந்துவிடும். பரமாத்மாவும் தூய்மை ஆகின்றது.

இவ்வாறு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தடுத்து நிறுத்த...
1.நீங்கள் எண்ணும்போதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றீர்கள்.
2.உங்கள் உயிர்... துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலில் அணுக்களாக உருவாக்குகின்றது.
3.தீமைகளில் இருந்து நீங்கள் விடுபடும் ஆற்றலைப் பெறுகின்றீர்கள்.

இதைத்தான் ஆறாவது அறிவு... (முருகன்) “பிரம்மாவை சிறைப்பிடித்தான்...! என்று சொல்வது. நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக நின்று அந்த அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்தோமென்றால்... நமக்குள் தீமையை நீக்கிடும் அத்தகைய நிலைகள் பெறுகின்றது.

தீமையை நீக்கிடும் ஒளியான அணுக்களை நமக்குள் பெருக்கினால் “துருவ நட்சத்திரம் எவ்வாறு ஒளியாக இருக்கின்றதோ...” அதைப்போல நாமும் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிப்படும் அரும்பெரும் சக்தி அதிகாலையில் இந்தப் பூமியில் பரவுகின்றது. ஆகவே கணவன் மனைவியும் காலை துருவ தியான நேரங்களில் இதைப் போன்று எடுத்துப் பழகுங்கள்.

அந்தக் காலை நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை... உங்கள் எண்ணங்களை... துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி... அந்த உணர்வினை உங்கள் கண்களால் பதிவாக்கி நுகருங்கள்,

கண் வழி நுகர்ந்ததை உயிர் வழி சுவாசிக்கும் பொழுது உயிர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யும். அந்த நேரம் தான் பிரம்ம முகூர்த்தம் என்பது.

1.உயர்ந்த உணர்வினை உங்களுக்குள் உருவாக்கினால் இருளை அகற்றும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்.
2.வானுலக ஆற்றலைப் பற்றுடன் பற்றினால்
3.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

June 1, 2020

வெறும் கூட்டம் தேவையில்லை…! அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை…!


தியான வழியில் இருக்கக்கூடிய அன்பர்கள் காலை துருவ தியானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ்ந்திட வேண்டும். குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றிடல் வேண்டும்

ஏனென்றால் அந்த நேரம் தான் அந்தத் துருவ மகரிஷிகளின் அலைகள் இங்கே அடர்த்தியாகப் படர்கின்றது. யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணங்கள் கொண்டு
1.நாங்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றல் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும்
3.கணவன் மனைவி இருவரும் நாங்கள் ஒன்றி வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
4.ஒருவருக்கொருவர் இந்த உணர்வின் தன்மைகளை வளர்த்திடல் வேண்டும்.

இருவரும் இப்படி எண்ணினால் தன் குடும்பத்தில் வரும் தீமைகளை நீக்கும் உணர்வின் உபாயங்கள் அங்கே வரும். அதனின் துணை கொண்டு வாழ்ந்தால் இன்றைய நஞ்சு உலக நிலைகளிலிருந்து தன்னை மீட்டிடும் நிலைகள் வளரும்

ஏனென்றால்…
1.இந்த உலகம் எங்கேயோ போய்க் கொண்டு உள்ளது
2.மனித உருவையே உருமாற்றும் நிலைகளாக
3.காற்று மண்டலம் நச்சுத் தன்மையாகி எங்கெங்கோ அழைத்துச் செல்லுகின்றது.

அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் அரவணைப்பில் விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் அந்த அருள் ஞானிகளுடைய உணர்வுடன் ஒன்றி அந்தப் பேரானந்த நிலைகள் பெறும் தகுதிகளுக்குக் கணவனும் மனைவியும் நீங்கள் இந்த நிலைகள் பெற வேண்டும். முதலில் இந்த குடும்பத்தின் நிலைகள் கொண்டு இதை செயல்படுத்துதல் வேண்டும்.

ஆனால் இன்று பெரும் பகுதி நாம் பார்ப்பவர்கள் தியானத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்ற நிலையில் உள்ளார்கள். இருந்தாலும்  சில இடங்களில் பார்க்கப் போனால் ஒன்றுக்கொன்று “கீரியும் பாம்பையும்…” போலத்தான் உள்ளார்கள்.

எம்மைப் (ஞானகுரு) பார்க்கின்றார்கள்… கேட்கின்றார்கள்… ஆசிர்வாதம் கேட்கின்றார்கள். கேட்பதில் பயன் என்ன இருக்கிறது…? எதற்காக வந்தோமோ நாம் அதைப் பெற வேண்டுமா இல்லையா…?

1.எனக்குக் கூட்டம் தேவை இல்லை
2.அருள் ஞானம் பெறும் அருள் ஞானிகள்ளின் அமைப்பு தான் எனக்குத் தேவை.
3.அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை
4.ஞானத்தைக் கூட்டிக் கூட்டிப் பெருக்கிக் கொள்வோர்கள் தான் தேவை
5.என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை.
.என்னை போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

ஆனால் போற்றுதல் எவ்வாறு இருக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஞானத்தைத் தனக்குள் ஊட்டி வளர்த்து… அந்த உணர்வின் தன்மை கொண்டு… “உலகம் போற்றும் உத்தம ஞானிகளாக நீங்கள் வர வேண்டும்…”

அது தான் நீங்கள் என்னைப் போற்றுவதாகும்…!

இல்லையெனில் என்னைத் தூற்றுவதாகவும் குருநாதரைத் தூற்றுவதாகவும் தான் ஆகுமே தவிர இதில் பயனில்லை.

வண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்தித் தருவது போல் வரும் தீமைகளைத் தூய்மைப்படுத்தி ஆன்மாவிற்குக் கொடுக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்... உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்... நாம் எடுக்கக் கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக ஆக்க வேண்டும்.

இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை...
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.

இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.

ஆகவே... வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்...!

அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா... இன்று நாம் வாழும் பூமியும்... நம்மை வாழ வைக்கும் சூரியனும்... மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே...!

ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்... ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்...
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே - இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்

அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).

கடிந்துரைக்க எண்ணாதே...!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்

கனிந்துரைப்பாய்...!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்

மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே...!