வேகாநிலை போகாப்புனல்
மகரிஷிகள் தன்னுள் கண்டுணர்ந்ததும்… தன்னை அறிந்ததும்… பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து…
1.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை… இருளை நீக்கி வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு
2.உணர்வினை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.
அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து உயிருடன் ஒன்றி… துருவ மகரிஷியாக வளர்ந்து… துருவ நட்சத்திரமாக என்றும் 16 என்ற நிலையை அடைந்தான்,
அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவினை… ஏழாவது நிலையாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
மனிதனின் உயர்ந்த நிலையாக… பிறவா நிலை என்ற பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் வழி… அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்…
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இந்த வாழ்க்கையில் வாழவும்
3.இருளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைத் தன்னுள் வளர்த்திடவும் முடியும்.
மனித வாழ்க்கையில் அதை எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக… இந்த உடலிலிருந்து பிறவா நிலை என்னும் பெருநிலை அடைகின்றனர்.
இதற்குப் பெயர் வேகாநிலை…!
ஆனால் இந்த வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ… அது சாகாக்கலையாக வளர்ந்து… உடலை விட்டு அகன்றாலும் அந்த (கலையின்) அந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகள் அமைகின்றது… மாறுகிறது.
சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! என்று இந்த இருநூறு ஆண்டுகளுக்குள் இராமலிங்க அடிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்.
1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை வலுவாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியாக வேகாநிலையாக உருவாக்கி
3.இன்னொரு உடலுக்குள் புகாதபடி போகாப்புனலாக விண் செல்ல வேண்டும்…! என்பது தான் அவர் சொன்ன தத்துவம்.
மனிதன் தீயிலே குதித்தால் அந்த உயிர் வேகுவதில்லை… உடல் தான் கருகுகின்றது. ஆகவே உயிரை போன்றே உணர்வுகள் அனைத்தையும் அழியா நிலை பெறச் செய்து… உடலை விட்டு அகன்றால் இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்பதனைத் தான் அவர் உணர்த்தினார்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓம் ஈஸ்வரா குருதேவா…! என்று உயிரை எண்ணி நாம் சொல்கின்றோம்.
1.நம் உயிரையும்… உயிரின் இயக்கத்தையும்… உயிரால் இயக்கப்பட்டு மனிதனான நிலையும்
2.மனிதனான பின் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையைச் சீராக்கிக் கொள்வதே நல்லது.
அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.