விஷ்ணு பிரம்மா சிவன் - முத்தொழில்
ஒரு மிளகாய் வித்தை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து… காற்றில் இருக்கும் தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது மிளகாய்ச் செடியாக வளர்ந்து… அதனின் பருவ நிலை வரும் பொழுது “மிளகாய்களாகக் காய்க்கின்றது…”
இதைப் போன்று தான் ஒரு மனிதன் உணர்ச்சிகளைத் தூண்டும்படியாகக் “கோபமாகப் பேசுகிறான்” என்றால் அவனின்று வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய… நம் உடலாக அமைந்து விடுகின்றது…”
அதாவது… உட.லான சிவத்திற்குள் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக விளைகின்றது.
முதலில் மிளகாய்ச் செடியாக இருக்கும் பொழுது காரமில்லாததாக இருக்கின்றது. மிளகாய்ச் செடி வளர்ந்து அந்தக் கார உணர்ச்சிகளைக் குவித்து மிளகாயாக்க் காய்க்கும் பொழுது தான் அதிலே காரங்கள் தெரிகின்றது
அது போல்
1.அந்தக் கோப உணர்வுகள் சிறுகச் சிறுக நமக்குள் பெருகும் பொழுது நமக்கே அது தெரிவதில்லை.
2.ஆனால் அது முதிர்ந்த பின் தான் நமக்குத் தெரிய வருகிறது
எப்படி…?
கோபித்தவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அந்த மனிதனின் உடலில்
1.அவனுக்கு எந்த வயதில் அந்தக் கார உணர்ச்சிகள் விளைந்ததோ
2.அதே வயதின் தரம் நமக்குள் வரும்பொழுது நமக்குள் மிளகாயாகக் கோபித்துப் பேசும் உணர்வின் தன்மை நமக்குள் விளையத் தொடங்குகிறது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!
காரணம்… உற்றுப் பார்த்த உணர்வு உடலில் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக நமது உயிர் உருவாக்கி விடுகின்றது உடலோ அதை ஏற்று அதனை வளர்க்கத் தொடங்கி விடுகிறது.
இதை நமது ஞானிகள் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாக
1.விஷ்ணு வரம் கொடுக்கின்றான்
2.விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான்.
3.சிவனோ சிருஷ்டித்த உணர்வின் அணுக்களைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான் என்று பொருள்படும்படியாக
4.நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.
உயிரின் இயக்கம் ஈசன் என்றும்… இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும்… காந்தத்தால் கோபமாகப் பேசுவோமனின் கார உணர்வை நுகரப்படும் பொழுது
1.அதனின் உணர்வுகள் இந்த விஷ்ணுவின் பிள்ளையாக… காரமான சக்தியை வளர்க்கும் அணுவின் சக்தியாக உருப்பெற்று விடுகின்றது.
2.ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான் என்ற நிலையில் கார குணத்தின் வளர்ச்சியை அது உருப் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.
அவ்வாறு உருவான அந்த அணுவின் சத்து உடலுடன் ஒன்றி அதே கார உணர்ச்சிகளைத் தனக்குள் கவர்ந்து அது வளரத் தொடங்கி விடுகின்றது அதைத்தான் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
நாம் எண்ணியது “சூட்சம நிலைகள்” கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அந்தக் கார உணர்வுகள் உயிரிலே பட்ட பின் உயிர் நமக்குள் உணர்த்துகின்றது.
கண்கள் அந்த மனிதனைப் படம் எடுக்கிறது அவனுடைய செயலாக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது. அவன் செய்யும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அவன் பேசும் உணர்வினை நமக்குள் அறிவிக்கின்றது.
அறிந்து கொண்டாலும் விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான். விஷ்ணுவின் மனைவி இலட்சுமி என்றும் கவர்ந்திடும் சக்தி என்றும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… காட்டியுள்ளார்கள்.
கோபமான குணத்தை நாம் சுவாசித்து விட்டால் அந்த உணர்வின் சத்து சிருஷ்டிக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இணைந்து செயல்படுவதை சரஸ்வதி ஞானம் என்று உணர்த்துகிறார்கள்.
அந்த அணுவின் தன்மை நம் உடலுடன் இணைந்து சிவமாக ஆனாலும் அந்தச் சக்தியின் தொடராக அந்த ஞானத்தின் வழியாக அது விளையும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
ஆனால்
1.எந்த உயிரிலே பட்டு இது உருவானதோ
2.அது தன் இனத்தை உருவாக்கும் சக்தியாக விஷ்ணுவின் பிள்ளையாக பிரம்மமாக
3.அந்தக் கார உணர்வுகளைத் தன் இனத்தை வளர்க்கும் சக்தியாக உருப் பெறுகின்றது.
சாஸ்திரங்கள் இப்படித்தான் நமக்குத் தெளிவாக கூறுகின்றது.