ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2024

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

 

கூட்டுத் தியானத்தின் வலு கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கவர்ந்து நம் மூதாதையர்களான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே வீசினால்… அவர்கள் முதலிலே விண் செல்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள்.

“நம்மைக் காத்திட்ட உணர்வுகள்” அவர்களுக்குள் விளைந்தது நமக்குள் உண்டு. அதை நினைவு கொண்டு குலதெய்வங்களின் உணர்வுகளை எளிதில் நாம் பருக முடியும்.

அதனின் உணர்வின் துணை கொண்டு மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி…
1.புவியின் பற்றற்ற நிலைகள் கொண்டு விண்ணின் பற்று கொண்டு
2.உத்தராயணம்… விண்ணிலிருந்து வந்தோம்… ஒளியின் சுடராக ஆனோம் என்ற நிலையாக
3.மகரிஷிகளுடன் நாமும் இணைந்திட முடியும்.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஏதோ கதை சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! (ஞானகுரு).

இத்தகைய இயற்கையின் நிலைகளைப் பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதர் எமக்கு உபதேசித்து அருளினார். அந்த அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார். அதிலே விளைந்த உணர்வினைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

இராமலிங்க அடிகள்… மனிதர்கள் தெய்வமாக வேண்டும் தெய்வ நிலை கொண்டு வேகாநிலை பெற வேண்டும் என்று அவர் பேசினார். அவரைப் போன்று மற்ற மகான்களும் அதைச் சொல்லியுள்ளார்கள்.

ஆனாலும் அவரைப் பின்பற்றியவர்கள் எல்லாம்… தன்னுடைய (மனித) வாழ்க்கைக்காக வேண்டித் தான் அவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த மகான்களின் ஆன்மாக்களை விண் செலுத்துவோர் இல்லை என்று இருந்தது (அந்தக் காலத்தில்.

குருநாதர் இதை எல்லாம் எமக்குக் காட்டினார்.

1.மண்ணுலகில் உள்ளோர் இன்புற்று இருக்க வேண்டும்
2.அவர்கள் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.ஞானிகள் உணர்வை அவர்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்… சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்று பாடுபட்ட
6.மகாத்மா காந்தி போன்ற ஏனைய ஞானிகள் அதை உணர்த்தி இருந்தாலும்
7.மக்களின் பால் பற்று கொண்டு வாழ்ந்த நிலையில் உடலை விட்டுச் சென்ற
8.அந்த மகான்களை விண் செலுத்துவார் யாரும் இல்லாது போய்விட்டது

மக்கள் அனைவரும் மகான்களின் அன்பைப் பெற்றனர்… அதனின் துணை கொண்டு தன் வாழ்க்கைக்குத் தான் பெற்றார்கள். ஆன்மாக்களை விண் செலுத்தவில்லை.

இது எல்லாம் காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள்… பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும்… சூரியன் எவ்வாறு தனக்குள் வருவதை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ… மகரிஷிகள் எவ்வாறு உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்களோ அத்தகைய விண் செல்லும் ஆற்றலை மகான்கள் கற்றுணரவில்லை.
1.மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
2.விண் செல்ல வேண்டும் என்று அவர்கள் யாரும் எண்ணவில்லை.

அத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.அவர்களை முதலில் நீ விண் செலுத்து என்று
2.குருநாதர் சில உபாயங்களை எனக்குக் கொடுத்து அதைச் செயல்படுத்தும் படி சொன்னார்.
3.அதன்படி விண் செலுத்தினேன்.

முதலில் சொன்னபடி… அந்த மகானுடன் தொடர்பு கொண்டவர்கள் தன் உடலைச் சதம் என்று நோக்கத்திலேயே அவருடன் இருந்தார்கள்… சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்… சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு சதமற்ற நிலையில் புழுவைப் போன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதிலிருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்று குருநாதர் உபதேசித்தார்.

ஆகவே நான் கொடுத்த ஞான வித்தை உனக்குள் வளர்த்து விடு. பிறரைக் காத்திட வேண்டும் என்று செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அவருடன் இருந்து “தனித்து நின்று நீ விண் செலுத்து…” என்றார். இப்படி…
1.புவியில் சுழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொடுத்தார்… குரு எம்முடன் இருந்தே…!
2.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கின்றது…?
3.அதற்கு எதனின் உணர்வை உனக்குள் நீ கவர வேண்டும்…?
4.எதனின் வலு கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்
5.உந்தி விண்ணிலே வீசிய பின் ஞானிகள் அருகே செல்லும்போது உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கி விட்டு
6.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்ற நிலையை தெளிவாகக் காட்டினார்.

அதே போன்று நம் குடும்பங்களிலும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர் பாட்டன் பாட்டி என்று இருந்தாலும் அவருடைய சிரமத்தையும் பாராது நமக்கு எத்தனையோ உதவிகளைச் செய்தார்கள்.

அத்தகைய உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று குருநாதர் (அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே) நேரடியாகக் காட்டினார்.

நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் நான் அல்ல… குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை அவரின் செயலே இங்கே இயங்குகின்றது.

1.அவரில் விளைந்த ஆன்ம ஞானத்தை… மெய் உணர்வின் தன்மையை
2.விண்ணிலே இன்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அவர் உணர்வுகளைப் பருகும் மார்க்கத்தை
3.எமக்கு எப்படிப் போதித்தாரோ அதை அப்படியே உங்களுக்கும் வழி காட்டுகின்றோம்.

அதன் வழியிலேயே… நீங்களும் உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.