ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 2, 2024

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை… 27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களாக அமைத்திருப்பது போன்று
1.நம்முடைய எண்ணத்தால் அருள் ஞானிகள் உணர்வை நம் முன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.நமக்குள் தீமைகள் வராதபடி அந்தத் தீமைகளை விழுங்கி
3.தெளிந்த நிலையாக மாற்றி… ஒளியாக மாற்றுவதே உத்தராயணம்… பங்குனி உற்சவம்.
4.முருகனுக்கு உகந்த நாள் என்று அதைக் காட்டியிருப்பார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானிகள் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்வெளியில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்களோ அவர்களுடன் நாம் இணைய வேண்டும்… உத்தராயணம்.

ஆனால் அப்படி இணையவில்லை என்றால் தட்சிணாயணம். மனிதருக்கு மனிதர் சாபம் இடும் போது அதைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாப வினைகள் நமக்குள் சேர்ந்து தீயவினைகளாக மாறிவிடுகின்றது.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் அதை உற்றுப் பார்த்தால் தீய வினைகளாக நமக்குள் சேர்ந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்று ஒருவன் பாவம் செய்கின்றான் பாவம் விடுகின்றான் என்றால் அந்தப் பாவ வினைகள் நமக்குள் சேர்ந்து பாவம் செய்வோராக நாமும் மாறி விடுகின்றோம். அப்படி மாறி விட்டால்
1.தீமைகளையே (நஞ்சினை) உணவாக உட்கொண்டு மற்றதைக் கொன்று புசித்து ரசித்து வாழும் உயிரினங்களாக
2.“தட்சிணாயணம்” மீண்டும் திரும்பி கீழே வந்து விடுகின்றோம்.

அவ்வாறு ஆகாதபடி நாம் திரும்ப வேண்டும் அது தான் உத்தராயணம்…!

துருவப் பகுதியின் வழியாக விண்ணிலிருந்து வருவதை ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எவ்வாறு நிலை கொண்டு உள்ளானோ அதைப்போல நாமும் ஆக முடியும்.

நமது குருநாதர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை உங்களுக்குள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிவு செய்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து தீமைகளை அகற்றிடும் நிலையாக உங்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு விளையச் செய்து கொண்ட பின் உடலை விட்டு எப்போது அகன்றாலும்… என்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லலாம்.

ஆனால்
1.சாப வினைகளுக்குள்ளும் பாவ வினைகளிலும் சிக்கி விட்டால்
2.தட்சிணாயணம் தான்… மீண்டும் உடல் பெறும் நிலை தான்.

பரிணாம வளர்ச்சியில் மனித உடல் பெற்ற நிலையான மகா சிவன் ராத்திரி… சர்வத்தையும் அறிந்திடும் ஆற்றல் ஆறாவது அறிவு நமக்குள் இருக்கிறது என்றாலும் “சிவன் இராத்திரி நீ விழித்திரு…” என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

சிவனான இந்த உடலுக்குள் என்றும் விழித்திருக்க வேண்டும்… நஞ்சுக்குள் மூழ்கிடாது விழித்திருக்க வேண்டும்…
1.நீலகண்டா…! என்று சிவனின் தத்துவமாக நஞ்சினைத் தனக்குள் அடக்கி இருப்பது போன்று
2.நஞ்சு உள் செல்லாது என்றும் விழித்திருந்து… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை ஒடுக்கி
3.வைரம் எவ்வாறு ஒளி வீசுகிறதோ… பாம்பினம் தனக்குள் எடுத்த நஞ்சினை நாகரத்தினமாக ஒளிச் சுடராக எப்படி மாற்றுகின்றதோ…
4.அதைப் போன்று ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “நாம் மாற்றிடும் விழிப்பு நிலையைக் காட்டுவதற்காக”
5.மகா சிவன் ராத்திரி என்று “ஆறாவது அறிவு கொண்டு நாம் விண் செல்ல முடியும்” என்று ஞானிகள் இதை எல்லாம் நமக்குக் காட்டினார்கள்.

காவியங்களில் தெளிவாக இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது… இருந்தாலும் மகரிஷிகள் காட்டியது காலத்தால் மறைந்து விட்டது. ஆனால் குரு நமக்கு இன்று அதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

விஞ்ஞான உலகில் தன்னையே மறந்துவிடும் நிலை இருக்கும் பொழுது அதிலிருந்து மீண்டு சிந்திக்கும் ஆற்றல் பெற… மனிதன் என்ற முழுமை பெற… குருநாதர் நமக்கு வழி காட்டுகிறார்.