எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி
நாம் இந்த வாழ்க்கையில் நன்மைகள் எவ்வளவு செய்தாலும் வேதனையைத்தான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் மற்றவருக்கு நன்மை செய்கின்றோம்.
காரணம்…
1.நாம் நன்மை செய்த உணர்வுக்குள் வேதனை என்ற நஞ்சு பட்டு விடுகின்றது
2.அதை நாம் யாராவது துடைக்கின்றோமா…? என்றால் இல்லை.
சுத்தமான கைகளைக் கொண்டு தான் ஒரு பொருளை உருவாக்குகின்றோம் மண்ணைப் பிசைகின்றோம்… சிமென்ட்டைக் கலக்கின்றோம்… அழகான வீட்டைக் கட்டுகின்றோம்.
அழகாக வீட்டைக் கட்டி விட்டோம் என்று அடுத்து கையைக் கழுவாது விட்டு விட்டால்… சாப்பிடும் போது சிமெண்டில் உள்ள கார உணர்வுகள் உடலுக்குள் சென்று விட்டால் அது கொதிகலனாகி குடலுக்குள் புண்ணாக உருவாகிவிடும்.
கையைக் கழுவாது அடுத்த வேலையை இப்படிச் செய்தால் முடியுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இதைப் போன்று தான் ரோட்டிலே நாம் நடந்து செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். காற்றிலே எத்தனையோ தூசிகளும் தீமைகளும் கலந்து பரவி வருகின்றது. சில நச்சுத்தன்மை கொண்ட செடிகளில் விளைந்த “நச்சின் செல்கள்…” அதுவும் தூசுகளாகப் படர்கின்றது.
சூரியனின் காந்த சக்தி அதைக் கவரவில்லை என்றாலும் காற்று மண்டலத்தில் சிக்கப்பட்டு… அது தூசுகளாகப் பரவி வருகின்றது. அதை நுகர்ந்தால் நம் உடலுக்குள் சென்று தீமைகளைத் தான் உருவாக்கும்.
சாதாரணமாக… செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் மணமாக வைத்துக் கொள்கின்றது.
1.அதே செடியில் விளைந்த வித்திற்கு… நிலத்தில் எங்கே அதை ஊன்றினாலும்
2.சூரியனின் காந்த சக்தி… தான் கவர்ந்து வைத்த மணத்தை அதற்கு உணவாகக் கொடுத்து
3.விஷச் செடியாக இருப்பினும் சரி… நல்ல செடியாக இருப்பினும் சரி அவைகளை வளரச் செய்கின்றது…
இதைப் போன்று ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது வேதனை உணர்வுகள் இங்கே வித்தாக மாறுகின்றது.
மீண்டும் அந்த மனிதனின் சிந்தனை வருகிறது. அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது. ஆனாலும் அவன் உடலில் விளைந்த வேதனை உணர்வு வித்தாக இங்கே விளைந்து விடுகிறது.
சூரியன் எவ்வாறு காந்த சக்தியால் கவர்ந்து அது மற்ற வித்துக்களுக்கு சத்தைக் கொடுத்து உபகாரம் செய்கின்றதோ இதைப் போன்று பிறிதொரு மனிதன் வேதனைப்பட்டதையும் கவர்ந்து வைத்து… நாம் எண்ணும் போதெல்லாம் அதை எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.
ஒரு மனிதன் அவன் வேதனைப்பட்டாலும் அவனுக்கு உதவிகளைச் செய்கிறோம். இருந்தாலும் அந்த வேதனையைச் சொல்லக் கேட்டு… உணர்வின் தன்மை பதிவான பின்… மீண்டும் நினைவாகும் பொழுது உடலுக்குள் வித்தாகி விடுகிறது.
1.அந்த உணர்வின் சத்து விளைந்தது மீண்டும் நினைவு வரப்படும் பொழுதெல்லாம்
2.அவன் உடலில் தீமை செய்த விளைவுகளும்… வினைகளும்… நமக்குள்ளே உருவாகி விடுகின்றது.
இப்படித்தான் நமக்குள் சூரியனின் வேலைகள் இருக்கின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
ஆனாலும் நாம் வயலிலே விவாசயம் செய்யப்படும் போது விளையப்படும் பொழுது அவ்வப்போது உருவாகும் “களைகளை அகற்றுகின்றோம்….” நல்ல செடிகளுக்கு நீர் ஊற்றி அதனைப் பக்குவமாக வளர்க்கின்றோம்.
அதைப்போல நமது வாழ்க்கையில் தீமையான உணர்வைக் கேட்டறிந்த பின் வயலில் களைகளை அகற்றுவது போன்று தீமைகள் வளராது உடனே அதைத் தடுத்தல் வேண்டும்.
1.அதைத் தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் உணர்வுகளை
2.உங்களுக்குள் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்
மகரிஷிகள் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தனக்குள் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ… உணர்வுகளை எல்லாம் தூய்மைப்படுத்தி ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்களோ… அவர்கள் வெளியிட்ட உணர்வின் தத்துவப்படி அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வினைப் பெரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால்… அதை நாம் எண்ணும் பொழுது பெற்று… அதனின் துணை கொண்டு தீமைகளை நீக்க முடியும்.
தீமை கொண்டவரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின்
1.நாம் எண்ணாமலே அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு
2.நாம் எண்ணாமலே அந்தந்த எண்ணங்கள் உருவாக்கப்பட்டு
3.நமக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து நோயின் தன்மை எப்படி அடைகின்றதோ அதைப் போல்
4.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சேர்ப்பித்துக் கொண்டே வந்தால்
5.”நாம் எண்ணாமலேயே” அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து… தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வரும்.
நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி உருவாக்குதல் வேண்டும்… உங்களால் முடியும் அதற்குத் தான் அருள் வாக்குகளாகக் கொடுத்து ஆழமாகப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).
ஆகவே மகரிஷிகளின் அருள் ஞான வித்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்… வரும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபவீர்கள்.