ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 23, 2024

உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஏற்படும் சில தவறுகள்

உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஏற்படும் சில தவறுகள்

 

உதாரணமாக பிறர் உங்களுக்கு உணவு கொடுத்தாலும் மனம் விரும்பி நீங்கள் அதை உட்கொண்டால் தான் உங்கள் உடல் ஆரோக்கிய நிலை பெறும்.

சில இடங்களில்… கௌரவத்திற்காக “நான் இப்போது தான் சாப்பிட்டு வந்தேன்…” என்று பொய் சொல்லித் தலையைச் சொறிவார்கள். ஆனால் பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னபின் “எப்படிச் சாப்பிடுவது…?” என்று கௌரவம் பார்ப்பார்கள்.

அப்பொழுது அங்கே சலிப்பான நிலைகள் தான் அவர்களுக்கு வரும்.

ஆனாலும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று சொன்ன பின் “சரி உங்களுக்காக வேண்டி நான் சாப்பிடுகிறேன்…!” என்று சொல்வார்கள்.

சலிப்பும் சோர்வும் அடைந்தபின் அது புளிப்பின் தன்மை உண்டாக்கும். இந்தப் புளிப்பு கலந்த பின் உணவைத் தட்டிலே போட்டவன்… சிறிதளவு உள்ளே போகும் பின் அதற்குப் பின் உள்ளே விடாது.

புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடும் கொஞ்ச நேரம் ஆனபின் நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
1.புளிப்பின் சக்தி வரப்படும் போது அடுத்து எதை விழுங்கினாலும் (இந்தப் புளிப்பு) அன்னக் குழாயில் உள்ள அமிலத்தைக் கரைத்து விடும்.
2.பின் உராயும் போது நெஞ்சு எரிய ஆரம்பிக்கும்
3.நம்மை அறியாமலேயே அந்த உணர்வு இத்தகைய அமிலங்களை உருவாக்கி விடுகின்றது.

இதை போன்று தான்… நாம் எண்ணி எடுக்கும் எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது… நல்ல உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

அந்த உணவை உட்கொள்ளும் பொழுது யார் உட்கொள்ளச் சொன்னார்களோ அவர்கள் மீதும் வெறுப்பு வரும். நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்… இப்படி எல்லாம் செய்தார்கள்…! என்று சாப்பாடு போட்டதற்காக அவர்கள் மீது வெறுப்படைவார்கள்.

பெண்கள் பெரும்பகுதியானவர்கள் இப்படி இருப்பார்கள். விருந்துக்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இருப்பார்கள் முதலிலே சிறிது சாதம் போட்டிருப்பார்கள் இரண்டாவது லபக்கென்று மறுபடியும் வைத்து விடுவார்கள்… பெரிய பாறையைத் தூக்கி போட்ட மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ இப்படிப் போடுகிறார்களே…! என்று இந்த உணர்வுகள் அந்த நிலையில் பட்ட பின் அவர்கள் உடல் எப்படி இருக்கும்…? சாப்பிட முடியாது சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும்.

ஆனால் இவர்கள் சிரிப்பார்கள்…! சாப்பிடுபவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு வரும். அந்த வெறுப்பான அணுக்கள் பெருகி ஆகாரத்தைப் போட்டவர்கள் மீது “அவர்கள் வீட்டிற்குச் சென்றாலே இப்படித்தான் செய்வார்கள்…!” என்ற இந்த எண்ணங்கள் தொடர்ந்து வரும்.
1.இத்தகைய வெறுப்பின் அணுக்கள் நமக்குள் வளரப்படும் பொழுது
2.நம்மை அறியாமலேயே உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்து விடுகிறது.

வெறுப்பு கொண்டு பார்த்து… இப்படிப் போட்டு விட்டார்களே…! என்று பாய்ச்சப்படும் பொழுது சிரித்துக் கொண்டு அவர்கள் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலை வருவதில்லை.

ஆக… வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது. இப்படி வெறுப்பை உருவாக்கி விட்டால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொந்த பந்தமோ உணவை அவர்கள் சமைக்கும் நேரத்தில்… குழம்பு வைக்கும் பொழுது ஏதாவது ஒன்றை அதிலே அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

அந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் வெறுக்கும் தன்மையே வரும். உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும். சீரகம் அதிகமாகிவிட்டால் உமட்டல் வரும். காரம் அதிகமானால் எரிச்சலாகி வெறுக்கும் தன்மை வரும்

இதைப் போல் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி பொருள்களை அதிகமாகச் சேர்க்க வைத்துவிடும். நம்மை அறியாமல் இயக்கும் சில நிலைகள் தான் இவை எல்லாம்.

ஆகவே… எப்பொழுதுமே பிறருக்கு உணவு படைக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி அதிலே படர வேண்டும்
2.இதை உட்கொள்ளுவோர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சி பெற வேண்டும் எண்ணிச் சமைத்து அதற்குப் பின் உணவு போடுங்கள்.

அதே சமயத்தில்
1.மகிழச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எவருக்கும் அதிகமாக உணவைப் போட்டு விடாதீர்கள்
2.போதும்…! என்றால் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவது தரம் போடட்டுமா… போடட்டுமா… போடட்டுமா…! என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த உணவு மீது வெறுப்பு அதிகமாகிவிடும்.

கொஞ்சம் போல வைத்துக் கொள்ளுங்கள்…! இல்லை வேண்டாம்…! இல்லை கொஞ்சம் போல… வேண்டாங்க…! இல்லை கொஞ்சம் தான்…! என்று இப்படிப் பேச பேச…
1.அதிலே வெறுப்பு வளர்ந்து இந்த உமிழ் நீரைச் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் அஜீரணமாகத்தான் ஆகும்.
2.அஜீரணமானால் சாப்பாடு போட்டும் பயனில்லாது போய் விடுகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் அன்பால் நடக்கக்கூடிய செயல்கள்.

நாம் உணவு ருசியாக இருக்கின்றது என்று அதிகமாகச் சாப்பிட்டால் உடல் அதை ஏற்றுக் கொள்கின்றதா…? அஜீரண சக்தியை உண்டாக்கிப் புளிப்பின் தன்மை அடைந்துவிடுகிறது. அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது.

அன்றைய தொழிலும் சோர்வடையும் நிலை வந்து விடுகிறது நம்முடைய எண்ணங்களும் பிறருடன் பேசும் பொழுது சோர்வின் தன்மையே அடைகின்றது வாழ்க்கையில் இத்தகைய அணுக்கள் பெருகத் தொடங்கி விடுகிறது.

நஞ்சினை முறித்து உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ மகரிஷிகளின் உணர்வலைகள் நமக்கு முன் உண்டு. அதனைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் பேசிப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

அந்த உணர்வின் துணை கொண்டு நினைவாற்றலைக் கூட்டி நீங்கள் தான் உங்களுக்குள் பெருக்கி அதைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

நான் சொல்லி அதைக் கேட்டறிந்த பின்
1.அடுத்து உங்களுக்கு மீண்டும் அது நினைவுக்கு வரவில்லை என்றால்
2.உங்கள் உடலில் உள்ள நான் பதிவாக்கிய அணுக்களுக்கு மகரிஷிகள் உணர்வை உணவாகக் கொடுக்க முடியாது.

ஆகவே மேலே சொன்ன பழக்கங்களை எல்லாம் நாம் மாற்றி அமைத்து அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு எதையும் செயல்படுத்தப் பழக வேண்டும்.