திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்
உதாரணமாக நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற நிலையில் அவனை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால்
1.அடுத்து நாம் அவனைப் பற்றித் திரும்ப எண்ணுவதில்லை.
2.அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
3.”அவனை நாம் திரும்ப எண்ணாததால்…” அவனுடைய வேதனை நமக்குள் வளராது தடைப்படுகிறது.
ஆனால் தொழில் செய்யும் இடங்களில் ஒரு நண்பரிடம் பற்றுடன் நாம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவருக்குக் கடுமையான நோய் வந்து விடுகிறது. அவர் மீது நாம் பற்றுடன் இருக்கும் போது அந்த உணர்வினை நான் நுகரப்படும் பொழுது வேதனையை நாம் உணர முடிகின்றது… உடனே நாமும் வேதனைப்படுகின்றோம்.
அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்தில் கலந்த பின் அந்த நண்பனைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுதெல்லாம் அந்த வேதனை நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.
ஒரு கோழி கருவுற்றால் உடனே அது கேறுகின்றது. கேறும் பொழுது அந்த முட்டையின் தன்மை வலுப் பெற்றுவிடுகிறது. முட்டை பருவமடைந்த பின் பொரிந்து குஞ்சுகளாக வெளி வருகின்றது.
குஞ்சு வெளி வந்தபின் ஆகாரத்திற்காகக் கத்துகிறது தாய்க் கோழியோ சப்தமிட்டு மண்ணைப் பறித்துத் தன் குஞ்சுகளுக்கு உணவைக் காட்டுகின்றது.
இதைப் போன்று தான் நண்பன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால்
1.அவனைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கருமுட்டையாகி விட்டால்
2.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது வளர்ச்சி அடைகின்றது.
3.வளர்ச்சி அடைந்து முட்டை வெடித்து அணுக்களாக உருவான பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது
4.அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அங்கே தூண்டப்படுகிறது.
அப்போது நம் உயிர் என்ன செய்கிறது…?
கண் காது மூக்கு அவைகளுக்கு ஆணையிட்டு எந்த நண்பன் உடலில் இருந்து நோயின் உணர்வு வந்ததோ காற்றிலிருந்து அதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கிறது. அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.
நோயை உருவாக்கும் அத்தகைய அணுக்கள் பெருகிவிட்டால் நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோய் நமக்குள்ளும் அதிகமாகப் பெருகத் தொடங்குகிறது.
நம்ம அறியாமல் தான் இது நடக்கிறது. அதை மாற்றி அமைக்க நாம் எண்ண செய்ய வேண்டும்…? நோய் எப்படி உருவானதோ அதே போல் அதை நீக்கும் சக்திகளையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.
1.நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிப்பெறும் பொழுது
3.சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அணுக்கரு முட்டைகளாக வளரத் தொடங்குகின்றது
5.நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் போது அந்த முட்டை வெடித்து அணுக்களாக உருப்பெறச் செய்கின்றது.
எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அடிக்கடி தியானித்தோமோ அது நமக்குள் அணுத்தன்மை அடைந்த பின்… எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலையாக… “அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது…”
1.அப்போது நம் சிறு மூளை பாகம் அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.கண் காது மூக்கு வாய் உடல் இவைகளுக்கு ஆணையிட்டு
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் பூமியில் பரவியிருப்பதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அப்போது வரும்.
மீண்டும் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் பொழுது ஒளி பெறும் அணுக்களாக நம் உடலுக்குள் வளரத் தொடங்கும்.
அந்த அணுக்களை நாம் அதிகமாக வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் யாருடைய ஈர்ப்பிலும் (எந்த்த் தீமையிலும்) சிக்க மாட்டோம். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அதிகரிக்கும்… நம்மைப் பிறவி இல்லா நிலைக்கு அது அழைத்துச் செல்லும்.