நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?
பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.
1.நம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம்.
2.அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம்.
3.ஆனால் “அவனுடைய குறும்புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…!” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.
4.அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…!
நம் பிள்ளை தான்…! என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக
1.நாம் தவறிப் பேசும் பொழுது…
2.அது நல்லதாக ஆவதில்லை…!
எல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…
1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்
2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.
3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.
ஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.
அந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்…
1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி
2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக
3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்
4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.
உதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்…? என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.
அப்படிப் பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
சரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.
“சமயம் பார்த்து…” அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது
1.அப்பா…! மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை…
2.நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா…! என்று சொல்லி விட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.
இப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்
1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்
2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.
ஆகவே சமயம் (நேரம்) வரும் பொழுது… அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.