சித்தன் போக்கு சிவன் போக்கு
பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.
படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு... ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.
ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.
சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் - கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.
அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.
இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்...!”
அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.
மான் மழு... புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்... குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்... பாதத்தின் அடியில் முயலகன்...! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்...!
“சிவ நடனம்...” காண வேண்டும் என்பதே...
1.ஆத்மார்த்தமாக...! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே...!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.
ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு...!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே... “தன் உயிராத்மாவையே...” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.
ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.
ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்... பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்... தன்னகத்தே தெளிந்து... சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே... ஆகாய வெளியாகும்...!
ஆகாய கங்கை என்றால் என்ன...?
நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே...!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.
(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்... பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)
சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?
பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்...” காட்டுகின்றது.
அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி... பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.
பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.
பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.
விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!
முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்...!