ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 16, 2023

“எத்தகைய சந்தர்ப்பத்தையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்

கூட்டுத் தியானத்தினுடைய முக்கியத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் மட்டும் தனித்து ஒன்றும் செய்து விட முடியாது. பலரின் அலைககளைக் குவிக்கச் செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான்
1.விஞ்ஞான உலகின் நச்சுத்தன்மைகளிலிருந்து மீட்கும் சக்தியாக
2.எத்தகைய விஷமும் நம்மை அணுகாத நிலையாகக் கூட்டுக் குடும்ப தியானம் செய்து
3.மகரிஷிகளின் அலைகளைப் பரப்பி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

பூமி தனக்குப் பாதுகாப்பாக ஓசோன் திரையை அமைத்துக் கொள்வது போன்று… எத்தகைய நிலைகள் வந்தாலும் ஆற்றல் மிகுந்த சக்தியாக உங்கள் ஆன்மாவிலே வலுகொண்டதாகப் பெருக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம்.. உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஏதோ
1.சாதாரணமாகக் கிடைக்கின்றது
2.சாதாரணமாகக் குருநாதர் சொல்கின்றார்
3.சாதாரணமான நிலையில் விளக்கம் சொல்கின்றார்
4.சாதாரண நிலைகள் இருக்கின்றதே… என்று
5.சாதாரணமாக விட்டு விடாதீர்கள்…!

எவ்வளவோ பணத்தைச் செலவழித்து… அலைந்து திரிந்தாலும் பெற முடியாது… அப்படி எல்லாம் இருக்கும் போது சாமி சாதாரணமாகச் சொல்கிறார்…! நாம் பெற முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இதைக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானம் இருந்து பழகுங்கள். நாள் முழுவதும் உழைக்கின்றோம் ஒரு பத்து நிமிடம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தினமும் நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் அது காக்கக் கூடிய சக்தியாக உங்கள் எண்ணம் வரும்.

ஒவ்வொரு சமயமும் சொன்னதையே சாமி சொல்கின்றார் என்று தெரிந்தாலும்… அப்படிச் சொல்வதற்குள் “சில நுண்ணிய உணர்வுகளைக் கலந்து” சொல்வேன்.

மரங்களுக்கு உரம் கொடுப்பது போன்று… வெயில் காலத்திற்குத் தகுந்த மாதிரி… மழை காலத்திற்குத் தகுந்த மாதிரி… அந்தந்தக் காலங்களுக்குத் தகுந்த மாதிரி… சூழ்நிலைக்குத் (உங்களுடைய) தகுந்த மாதிரி
1.ஞானிகள் உணர்வுகளை உரமாக உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குச் செருகேற்றி
2.அதன் மூலம் காற்றில் இருக்கக்கூடிய அரும் பெரும் சக்திகளை எடுத்துக் கொண்டு வந்து மெய் ஒளி பெறச் செய்கிறோம்.

ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள்… உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்துப் பழகுங்கள்… உடலில் வரக்கூடிய விஷத்தை நீக்கிப் பழகுங்கள்… ஒளியின் சுடராக நீங்கள் பெற வேண்டும்.

எந்த நேரத்தில் எல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க நீங்கள் பழகிக் கொள்ளுங்கள்.

“திட்டியவனை எண்ணியவுடன்” நம் உடல் எப்படிப் பதறுகின்றதோ… “இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது எப்படி மனம் சோர்வடைகின்றதோ…
1.அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணுங்கள்.
2.சாமி சொன்னார்… மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணி எடுத்தீர்கள் என்றால்
3.அந்த நடுக்கமோ சோர்வோ இவைகள் நீங்கி உங்கள் எண்ணம் சொல் வலுவாகி
4.உங்களுக்குள் அனைத்தும் வலுகொண்டதாக ஆற்றல்மிக்கதாகச் செயல்படக்கூடிய சக்தி கிடைக்கும்.

உங்களுக்கு ஒருவர் தீமை செய்கின்றார்… குறையாகச் சொல்கிறார்… திட்டுகின்றார் என்றால் உங்கள் நல்ல குணங்கள் வலு குறைந்து… இனிமை குறைந்து… மயக்கப்படும் நிலையாக… எதிர்மறையான உணர்வுகளை எப்படித் தூண்டுகிறதோ… அதைப் போன்று தான்
1.அந்த மாதிரி நேரங்களில் சாமி சொன்னார்…!
2.அவர் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
3.என் உடல் முழுவதும் அது படர வேண்டும்
4.என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
5.என் செயல் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று
6.அந்தக் கணமே இப்படி எண்ணி எடுக்கப் பழகிக் கொன்டீர்கள் என்றால் “உங்கள் எண்ணம் உங்களை காக்கும்…!”

அதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வது

யாம் சொன்னதைச் சிறிது காலத்திற்குச் செய்யப் பழகிக் கொண்டால் போதும்
1.எத்தகைய சந்தர்ப்பங்களிலும் சமாளிக்க கூடிய ஆற்றல்
2.உங்களுக்குக் கிடைக்கும்… செய்து பாருங்கள்.