உங்களை யாராவது திட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது குற்றமாகப் பேசிக் கொண்டிருந்தாலோ உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
ஆனால் திட்டுகிறார் என்று…
1.என்னை இப்படிப் பேசுவதற்கு ஆகிவிட்டதா…?
2.நான் உன்னை அதற்கு மேல் பார்க்கிறேன்…! என்று எண்ணி எடுத்தால்
3.நமக்குள் ஜிர்…ர்ர்… என்று அந்த வேகம் வந்து விடுகிறது
4.அடுத்து கை கால் குடைச்சல் மேல் வலி எல்லாம் வந்து விடுகிறது
அவ்வாறு ஆகாதபடி தடுக்க நாம் உடனே ஆத்ம சுத்தி செய்யப் பழக வேண்டும். ஆத்ம சுத்தி செய்து கொண்ட பின் என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… நாளை நல்லது செய்யக்கூடிய அந்த உயர்ந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோன்ற வேண்டும் என்று அவர் திட்டிய உணர்வை நமக்குள் புகவிடாது தடுத்து… நல்ல உணர்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அவர்கள் எத்தனை திட்டு திட்டினாலும் சரி…
2.நம்முடைய எண்ணங்கள் தான் அவர்களுக்குள் சென்று அவர்களை மாற்ற வேண்டும்.
ஆனால் மாறாக அவர்கள் திட்டியதைக் காதிலே கூர்ந்து கேட்டால் அவர்களை நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்போம்.
அந்த்த் திட்டை வாங்கி அவர் உணர்வை பெருக்கிக் கொண்டால் கடையில் வியாபாரத்திற்காக பொருளை எடுத்துக் கொடுத்தாலும் வியாபாரம் மந்தமாகிவிடும். ஒரு கைக்குழந்தையை சும்மா தூக்கினாலும் கூட அது விரா விரா… என்று கத்தும்.
நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் வயிறு கடா புடா என்று நஞ்சாக மாறி மறு நாள் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.
நாள் முழுவதும் குடும்பத்திற்காக… உடலுக்காக… தொழிலுக்காக… நாம் உழைக்கின்றோம். நம் வீட்டைத் தூய்மைப்படுத்துகின்றோம். நாம் அணிந்திருக்கும் உடையில் அழுக்குப் பட்டாலோ அல்லது அசிங்கமானது பட்டாலோ அடுத்தவர்கள் பார்ப்பார்களே…! என்று சொல்லி உடனே சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்தி விடுகின்றோம்.
அது போல் தான் நாம் நல்ல எண்ணத்துடன் சென்றாலும் தீங்குகள் வருகின்றது… அது உடலுக்குள் சென்று இம்சை கொடுக்கின்றது
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொள்வது கஷ்டமா…?
மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்தக் காற்றிலே நமக்கு முன் இருக்கின்றது. அதை எடுத்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.சிறிது நாள் அனுபவத்தில் பழக்கப்படுத்தி எடுத்து கொண்டாலே போதுமானது
2.எந்தத் துன்பம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
செடி கொடி மரங்கள் வளர்ந்து வரும் போது தன் சத்தை இழந்திருக்கும் வேளையில் அதற்குண்டான உரத்தைப் போட்டுக் காற்றில் இருந்து அதனின் இனமான சத்தை எடுத்து எப்படி அதை வளர்க்கச் செய்கின்றோமோ அது போன்று தான்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் யாம் (ஞானகுரு) உரமாகக் கொடுத்து
2.காற்றிலே படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்கிறோம்.
ஞானிகள் மகரிஷிகள் ஆகி ஒளியாக மாறி விண் சென்ற வழியில்… அதே பாதையிலே நீங்களும் ஒளிச் சரீரம் பெறலாம். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.
யாரும் சாவதில்லை… உடல்கள் மாறுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறு உடல் எடுக்கின்றது… மறு உடலை இயக்குகின்றது.
உடல்கள் மாறினாலும் உயிருடன் ஒன்றியே இருக்கின்றோம். ஆனால் அவனுடன் சேர்ந்து நாம் ஒளியாக மாற வேண்டும்… அது தான் விஜயதசமி…!
விண்ணிலே உயிர் தோன்றிய பின் பூமிக்குள் விஜயம் செய்து பல உடல்கள் மாறி மனிதனாக வளர்ச்சி அடைந்த பிற்பாடு “ஆறாவது…” அறிவு என்ன செய்கிறது…?
உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை மலமாகக் கழித்து விடுகிறது. கெட்டதை நீக்கி நல்லது செய்யக்கூடிய எண்ணத்தை ஊட்டுகின்றது.
அந்த நல்ல எண்ணத்தை எடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் இணைத்து விட்டால் “ஏழாவது…” நிலையான ரிஷி சிருஷ்டிக்கக்கூடிய தன்மை பெறலாம்.
“எட்டாவது…” நாம் நினைத்தாலும் எந்தத் திசையிலிருந்தும் கெட்டது வராதபடி நமக்குள் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
“ஒன்பதாவது…” தீமைகளைப் பிளந்துவிட்டு உயிருடன் உயிராகச் சேர்ந்து உடலை விட்டுச் செல்லும் நிலை.
உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள விஷத்தை மனித உடல் மலமாக எப்படிக் கழிக்கின்றதோ இதே போன்று உடலை விட்டு வெளியே நாம் சென்ற பின்
1.எந்த நிலையும் நம் உயிராத்மாவைக் கவராதபடி விண் செல்வதே பத்தாவது நிலை
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவதே கல்கி – பத்து…!
“என்று இந்த மனித உடலைப் பெற்றோமோ…” அது முழு முதல் கடவுள். மனித உடல் சிருஷ்டிக்கக் கூடிய சக்தி பெற்றது என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
விநாயகருக்குக் கொழுக்கட்டையை வைத்துக் காட்டியுள்ளார்கள். காரணம்… இயற்கையில் விளைந்த தாவர இனங்களை வேக வைத்து அதைச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்ளும் சக்தி பெற்றுள்ளோம்.
அதே போல் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகளை நீக்கிடும் நிலையாக
1.சுவை கொண்ட ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து
2.சுவைமிக்க உடலாகவும்
3.சுவைமிக்க சொல்லாகவும்
4.சுவைமிக்க செயலாகவும்
5.சுவைமிக்க உயிராத்மாவாக மாற்றி
6.வைரம் விஷத்தை அடக்கி ஒளியின் தன்மையாகப் பேரொளியாக எப்படி ஒளி வீசுகின்றதோ
7.சூரியன் விஷத்தை ஒடுக்கி ஒளிச் சுடராக எப்படிப் பிரகாசிக்கின்றதோ
8.அதைப் போல் வருவது அனைத்தையும் நாம் ஒளியாக ஆக்க முடியும்.
அது தான் பத்தாவது நிலை…!